பூஜா ராணி: ரகசியமாக குத்துச் சண்டை பயிற்சி; காயம் தந்த வலி - ஒலிம்பிக் வரை எட்டிய விடா முயற்சி

பட மூலாதாரம், ames Chance/Getty Images
டோக்யோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டை 75 எடைப் பிரிவின் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தோல்வியுற்றிருந்தாலும், அவரின் ஒலிம்பிக் பயணம் அசாத்தியமானது.
விளையாட்டை பொறுத்தவரை தோற்றாலும் ஜெயித்தாலும் இறங்கி சண்டை செய்வதுதான் முக்கியம். அதைதான் செய்திருக்கிறார் பூஜா ராணி.
ஒரு காலத்தில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் பள்ளியில் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வந்தவர் பூஜா. ஹரியானாவின் பிவானி நகருக்கு அருகில் உள்ள ஹவா சிங் குத்துச்சண்டை அகாதமியில் ரகசியமாக விளையாடி வந்தார் பூஜா. அச்சமயம் விஜேந்தர் சிங் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்று பிவானியில் குத்துச்சண்டையைப் பிரபலமாக்கினார்.
அவர் குத்துச்சண்டை வளையத்திற்குள் ஆடிய விளையாட்டால் ஈர்க்கப்பட்டு பூஜாவுக்கும் அந்த விளையாட்டின் மீது காதல் உண்டானது. ஆனால், காவல் துறையில் பணியாற்றிவந்த அவரது தந்தை இதைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆட்டத்தின் போது காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற காரணத்தால், குத்துச்சண்டையைத் தவிர வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவரது தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் என்று பல ஊடக பேட்டிகளில் பூஜா கூறியிருக்கிறார்.
சில காலம் ரகசியமாகக் குத்துச் சண்டை பயிற்சி பெற்று வந்தார் பூஜா. ஆனால் தந்தைக்கு விஷயம் தெரிந்த பிறகு, கடைசியாக ஒரே ஒரு நாள் மட்டும் பயிற்சிக்குச் செல்ல அனுமதி பெற்றுச் சென்றார் பூஜா, தனது பயிற்சியாளர் சஞ்சய் ஷர்மாவிடம் எல்லா விஷயத்தையும் சொன்னார். அதன்பின் பூஜாவின் பயிற்சியாளர் போராடி, பூஜாவின் தந்தையைச் சம்மதிக்கவைத்தார்.
பயிற்சியின் போது அதிகம் காயம் ஏற்பட்டால் அதை தந்தையிடம் மறைத்த சுவாரஸ்யமான சம்பவத்தை பூஜா நினைவுகூர்கிறார். பயிற்சியாளரின் வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி, கணவர் ஊரில் இல்லாததால், பூஜாவைத் துணைக்குத் தங்க வைத்துக் கொள்வதாகவும் கூறினார். தனது தந்தை காயத்தைப் பார்த்து பயந்து குத்துச்சண்டைப் பயிற்சிக்குத் தடை விதித்து விடப் போகிறாரே என்ற அச்சம் தான் காரணம்.
2009-2010 -ல் பூஜா தேசிய இளைஞர் பதக்கம் வென்ற போது நிலைமை மாறியது. தடை விதித்த தந்தையே மிகப் பெரிய ஆதரவாளராக மாறினார். அதிலிருந்து தொடங்கிய நீண்ட பயணம் இப்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வந்து நிற்கிறது.

பட மூலாதாரம், James Chance/Getty Images
காயம் தந்த வலி
இந்தப் பயணத்தில் வெற்றி தோல்விகளைச் சுவைத்து, அதிக காயங்களையும் பெற்றுள்ளார். ஆனால், குத்துச் சண்டை வீரர்களுக்குக் காயங்கள் தான் அணிகலன்கள் என்பது பூஜாவின் கருத்து
இதற்கிடையே, 2017-ல் தீபாவளி சமயத்தில் அவரது கைகளில் பட்ட தீக்காயத்தால் அவர் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு தோள்பட்டையில் அடிபட்டு அதனால் சில காலம் ஓய்வில் இருந்தார். இந்தக் காலம் அவரை மனதளவில் பாதித்தது. நம்பிக்கை இழந்திருந்தார்.

பட மூலாதாரம், Frank Franklin - Pool/Getty Images
இந்தக் காரணங்களால், சில காலம் 81 கிலோ எடைப்பிரிவில் அவர் விளையாடி வந்தார். அதில் போட்டியாளர்கள் குறைவாக இருப்பார்கள் என்பது தான் காரணம். அதன் பிறகு பயிற்சியாளரின் ஆலோசனைப்படி மீண்டும் 75 கிலோ பிரிவிற்குத் திரும்பினார்.
மனம் தளராத முயற்சி
இதற்கு முன்னர், ரியோ ஒலிம்பிக்கில் விளையாடுவது இவரது கனவாக இருந்தது. ஆனால், அதற்குத் தகுதி பெறத் தவறிவிட்டார். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்து இந்த நிலையை எட்டியுள்ளார்.
30 வயதில் தனது முதல் ஒலிம்பிக் விளையாட்டை பூஜா விளையாடினார். அவர் கனவு நனவானது. முதல் ஒலிம்பிக் போட்டியில், தன்னை விட பத்து வயது இளைய அல்ஜீரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார் பூஜா.
தனது போட்டியாளர், தன்னை விட இளையவராக இருந்தாலும், நேர்த்தியான தனது ஆட்டத்தால் பூஜா வெற்றிக்கனியைப் பறித்தார்.
டோக்யோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் பெண் ஆட்டக்காரர் இவர். அன்றைய தினம் பெண்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வென்ற பதக்கங்களின் பட்டியல் நீளமானது. 2012-ல் ஆசிய சாம்பியன் போட்டியில் வெள்ளி, 2014-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2021-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் ஆகியவை அடக்கம்.
வெற்றி பெற பல உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பூஜாவின் நம்பிக்கை.
தனது போட்டியாளரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்வது அவரது விளையாட்டு வீடியோக்களைப் பார்த்து நுட்பங்களைப் புரிந்து கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கங்கள். இவற்றுடன், இன்னும் பல புதிய வழிமுறைகளையும் பூஜா பின்பற்றுகிறார். இம்முறை பயிற்சியின் போது ஆண் வீரர்களுடன் விளையாடி பயிற்சி பெற்றார் பூஜா.
தனது உழைப்பு, தோல்வியை ஏற்காத மனநிலை, பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் அதிரடி என்று பல ஏற்றத் தாழ்வுகளுக்கிடையில், ஹரியாணாவின் இந்த வீராங்கனை தனது ஒவ்வொரு கனவையும் மெய்ப்பித்து வருகிறார்.
- 2021: துபாயில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம்
- 2019: தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம்
- 2014: ஆசியப் போட்டியில் வெண்கலம்
- 2012: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி
- 2009: மாநில இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கம்
பிற செய்திகள்:
- பூத் ஜோலோகியா: 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்
- நீண்ட வாள், வெள்ளிக்காசு, புகைப்போக்கி குழாய் - தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள்
- 13 மாதங்களில் 3 முறை கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டபின்னும் 2 முறை பாதிப்பு
- டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி, சிந்துவுக்கு ஏன் இல்லை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












