டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி, சிந்துவுக்கு ஏன் இல்லை?

பட மூலாதாரம், Getty Images
இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹாய்ன் கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார்.
ஆனால், இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் ஜப்பானின் அகனே யமகுச்சியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் வெள்ளி வென்றது நினைவிருக்கலாம்.
லவ்லினா அரையிறுதிக்கு வந்தவுடன், டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.

பட மூலாதாரம், RAMSEY CARDY
இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது தவிர, இந்தியா இதுவரை எந்த வெற்றியையும் பெறவில்லை.
ஆனால் லவ்லினாவின் பதக்கம், வரும் நாட்களில் கண்டிப்பாக இந்தியாவின் கணக்கில் சேர்க்கப்படும். அரையிறுதியில் லவ்லினா தோற்றாலும், அவருக்கு நிச்சயம் வெண்கலம் உறுதி.
ஆனால் பி.வி. சிந்து விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியாததற்கு என்ன காரணம்?
சிந்து பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு வந்துவிட்டார், ஆனால் பதக்கத்தை வெல்ல அவர் கடக்க வேண்டிய பாதை சற்று நீளமாகத் தான் உள்ளது.
லவ்லினாவின் பதக்கம் ஏன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, சிந்துவின் பதக்கம் ஏன் உறுதியாகவில்லை என்பதைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.
இந்தப் பதக்கம் லவ்லீனாவுக்கு எப்படிக் கிடைக்கிறது?
இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆனால் போட்டிக்கு முன்னரே அவர் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை எப்படி உறுதி செய்தார்? இந்தக் கேள்வி பலர் மனதிலும் எழுகிறது.

பட மூலாதாரம், Lintao Zhang/Getty Images
உண்மையில், குத்துச்சண்டையில் மூன்றாவது இடத்திற்கு எந்தப் போட்டியும் நடத்தப்படுவது இல்லை. அதாவது, அரையிறுதியில் தோற்ற இரு வீரர்களுக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அதனால் தான் லவ்லினா இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆனால் பேட்மிண்டனில் இந்த விதி இல்லை. இதில் வெண்கலப் பதக்கத்திற்காக தனியான போட்டி நடைபெறுகிறது.
குத்துச்சண்டையின் இந்த விதியின் அடிப்படையில், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். லண்டன் ஒலிம்பிக்கிலும் அதே விதியின் அடிப்படையில் மேரி கோம் வெண்கலம் வென்றார்.
விஜேந்தர் மற்றும் மேரி கோம் இருவரும் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தனர். ஆனாலும், அவர்கள் இந்தியாவிற்குப் பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே குத்துச்சண்டையில் இந்த விதி இருந்ததில்லை.
1948 ஒலிம்பிக் வரை, குத்துச்சண்டையில் மூன்றாம் இடத்திற்கான போட்டி தனியாக நடத்தப்பட்டது. வெற்றியாளர் வெண்கலப் பதக்கம் பெறுவார்.
ஆனால் 1952 ஒலிம்பிக்கில் இருந்து, விதிகள் மாறின, பின்னர் அரையிறுதியில் தோற்ற இரு வீரர்களுக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குஸ்தியில் இன்னொரு சுற்றுப் போட்டி
ஜூடோ, டேக்வாண்டோ மற்றும் மல்யுத்தத்திலும் தலா இரண்டு வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

பட மூலாதாரம், LARS BARON
ஆனால் இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கம் குறித்த முடிவு, அரையிறுதியில் தோல்வியடைந்த இரு வீரர்களுக்கும், முந்தைய சுற்றுகளில் இரு இறுதிச் சுற்றாளர்களிடம் தோல்வியடைந்த போட்டியாளர்களுக்கும் இடையிலான ரெபெஷாஜ் (repechage) போட்டி மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
அதாவது repechage போட்டியில் யாரைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குச் செல்கிறார்களோ அவர்கள் பங்கேற்பார்கள்.
ஆனால், repechage, காலிறுதிச் சுற்றிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் சாக்ஷி மாலிக்கை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ரியோ ஒலிம்பிக்கின் காலிறுதியில் சாக்ஷி மாலிக் ரஷ்யாவின் வலேரியா கோப்லோவாவிடம் தோற்றார். ஆனால் சாக்ஷியைத் தோற்கடித்த கோப்லோவா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
அதனால், சாக்ஷிக்கு ரெபெஷாஜ் போட்டியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. காலிறுதியில் சாக்ஷி தோல்வியடைந்ததால், ஒரே ஒரு ரெபெஷாஜ் போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அதில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மல்யுத்தத்தில் இதைப் புரிந்துகொள்வது சற்று சிக்கலானது. 2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் ரெபெஷாஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் பல மல்யுத்த வீரர்கள் இந்த ரெபெஷாஜ் போட்டியின் மூலம் பயனடைந்துள்ளனர். பீய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சுஷில் குமார் இதன் அடிப்படையில் தான் வெண்கலம் வென்றார்.
யோகேஸ்வர் தத்தும் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலத்தை வென்றார். ரியோ ஒலிம்பிக்கில், சாக்ஷி மாலிக் அதே அடிப்படையில் வெண்கலம் வென்றார்.
பிற செய்திகள்:
- தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ
- தீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா?
- சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?
- ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












