ind vs aus கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற ஆஸ்திரேலியா; ஸ்டீவ் ஸ்மித் சதம்; விராட் கோலி 22,000 ரன்களை கடந்தார்

steve smith india vs australia odi

பட மூலாதாரம், Ryan Pierse / getty images

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

முதல் போட்டியில் ஏற்கனவே வென்றுள்ள ஆஸ்திரேலியா , இந்தப் போட்டியில் வென்றுள்ளதன் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா தோற்றாலும், கேப்டன் கோலிக்கு இது ஒரு முக்கியமான போட்டி. இன்றைய போட்டியில் அவர் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகையான ஆட்டங்களிலும் அவர் 22,000 ரன்களைக் கடந்தார்.

சிட்னியில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 389 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

நவம்பர் 27ஆம் தேதி நடந்த முதல் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் அவர் 105 ரன்கள் எடுத்திருந்தார். இன்றைய சதம் அவருக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10வது சதம் ஆகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தாம் விளையாடிய 14 போட்டிகளில் ஆறில் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்திருந்தது.

இரண்டு முறையும் சேசிங்கில் தவறவிட்ட இந்தியா

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 374 ரன்கள் எடுத்திருந்தது. சேசிங் செய்த இந்தியா 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில், இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 எடுத்தது. ஆனால், வெற்றிக்கு இது போதவில்லை.

இந்திய அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக கே.எல். ராகுல் 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

ind vs aus: போராடித் தோற்ற இந்தியா; தொடரை வென்ற ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Cameron Spencer / getty images

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியப் பந்துவீச்சாளர்கள் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்தியாவுக்காக தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களில் பேட் க்மின்ஸ் மூன்று இந்திய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினார்.

ஜோஷ் ஹசல்வூட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மோசஸ் ஹென்ரிக்ஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளுமே 300 ரன்களைக் கடந்துள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் வரும் டிசம்பர் 2 அன்று நடக்கவுள்ளது.

அதன் பின்னர் மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இரு அணிகளும் மோதவுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :