பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள்: கடுமையான சட்டங்கள் இந்த மூன்று வழக்கில் நீதியைப் பெற்றுத் தருமா? பிபிசி 100 பெண்கள்

- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி
2012 புதுதில்லி கூட்டு வன்புணர்வு சம்பவத்துக்குப் பின் வன்புணர்வு தொடர்பான சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டன. அவை நீதி கிடைப்பதை இலகுவாக்கியிருக்கின்றனவா?
இந்தியாவில் நடக்கும் வன்புணர்வுகளில் சில மிகக் கொடூரமானவையாக இருக்கும். தேசிய ஊடகங்களை மட்டுமல்லாமல் உலகநாடுகள் அனைத்திலுமே அது தலைப்புச் செய்தியாக அமைந்துவிடும்.
2012 தில்லி கூட்டு வன்புணர்வுக்குப் பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. காவல்துறையிடம் புகாராக ஆவணப்படுத்தப்படும் வன்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையின்மீது சமீபகாலங்களில் அதிக கவனம் காட்டப்படுவதே இதற்குக் காரணம் என்கின்றனர் பலர். வேறு சிலரோ, மரணதண்டனை உள்ளிட்ட அரசின் சட்ட சீர்திருத்தங்களே இதற்குக் காரணம் என்கின்றனர்.
வல்லுநர்களின் கோணம் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பிரச்சனைக்கு இவை கவன ஈர்ப்புக்காக முன்வைக்கப்படும் தட்டையான தீர்வுகளே என்கிறார்கள் அவர்கள். பிபிசி 100 பெண்கள் தொடரின் ஒரு பகுதியாக, இந்தியாவின் கடுமையான வன்புணர்வு சட்டங்கள் பெண்களுக்கு உதவி செய்யவில்லை என்பதைச் சுட்டும் மூன்று கதைகளை ஆராய்கிறார் திவ்யா ஆர்யா.
"நீதி கிடைக்கும்போது நாங்கள் உயிருடன் இருப்போமா என்பதுதான் தெரியவில்லை"

இப்போதுவரை அந்த கிராமம் "பெண்கள் தொங்கவிடப்பட்ட இடம்" என்றே அழைக்கப்படுகிறது. உறவுக்காரர்களான இரு சிறுமிகள் (15 வய்து, 12 வயது) மாமரத்தின் கிளையிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பதை ஊரார் கண்டறிந்தார்கள். அவர்கள் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டிருந்ததாகக் குடும்பங்கள் தெரிவித்தன.
தில்லி கூட்டு வன்புணர்வு சம்பவத்திற்குப் பிறகு நடந்த பெரிய வன்புணர்வு நிகழ்வு இது.
இது நடந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டன என்றாலு, ஏதோ நேற்று நடந்தததைப் போல இந்த சம்பவத்தைப் பலரும் நினைவுகூர்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தின் குறுகலான சாலைகள் வழியே எங்கள் கார் மெல்ல ஊர்ந்தது, அவ்வப்போது வண்டியை நிறுத்தி முகவரி விசாரித்துக்கொள்கிறோம். கிராமத்தை விவரித்ததுமே எல்லாருக்கும் தெரிந்துவிடுகிறது, எங்கே செல்லவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் பதாயுன் குடும்பம் நீதி கேட்டு சென்ற பாதை இத்தனை எளிமையானதாக இல்லை.
2014. தில்லியிலிருந்து எட்டு மணி நேரம் பயணித்து பதாயுன் சென்றிருந்தேன். சம்பவம் நிகழ்ந்தபிறகு அங்கே சென்றடைந்த முதல் சில பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருத்தி. பெண்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்த அதே மாமரத்தின்கீழ் அந்த பெண்களில் ஒருவருடைய தந்தை என்னை சந்தித்தார். உள்ளூர் காவல்துறையினர் தன்னைக் கிண்டலடிப்பதாகவும் உதவி செய்ய மறுப்பதாகவும், அதனால் தான் பயந்திருப்பதாகவும் சொன்னார். ஆனாலும் அவரிடம் பழிவாங்கும் உந்துதல் இருந்தது. "எங்கள் பெண்களைத் தொங்கவிட்டதுமாதிரியே அந்த ஆண்களையும் எல்லாரும் பார்க்கும்படி தொங்கவிடவேண்டும்" என்றார்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் பெண்களும் சிறுமிகளும் இலகுவாகப் புகாரளிக்க முடியும் என்பது ஒரு எண்ணமாக இருந்தது. வன்புணர்வுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டது, துரித நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 18 வயதுக்கும் கீழ் உள்ள பெண்களின் வன்புணர்வு வழக்குகள் ஒரு வருடத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்பதும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனாலு, வன்புணர்வு விசாரணைகள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. 2013ம் ஆண்டின் இறுதியில் 95,000 வழக்குகள், 2019ம் ஆண்டின் இறுதியில் 1,45,000 வழக்குகள் என்பதாக அதிகாரபூர்வ எண்ணிக்கை உயர்ந்தது.
பதாயுனில் நாங்கள் அனைவருமாக மரத்தை நோக்கி நடக்கிறோம், தந்தை நேராக மரத்தைப் பார்க்கவில்லை. "அந்த ஞாபகத்தைத் தாங்க முடியவில்லை" என்கிறார். நினைவுகளின் வலியை சுமந்தபடி இருக்கும் அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே வயதாகிவிட்டது போன்ற தோற்றம். தளர்ந்திருக்கிறார்.
கோபம் இன்னும் போகவில்லை என்றாலும், நீதி கிடைக்கவேண்டிய பாதை நீண்டதாகவும் தனிமையானதாகவும் இருக்கும் என்பதை ஆழமாக உணர்ந்திருக்கிறார்.
"வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படவேண்டும் என்கிறது சட்டம். ஆனால் நீதிமன்றம் எங்கள் வேண்டுகோளுக்கும் இறைஞ்சுதலுக்கும் செவி சாய்ப்பதில்லை. நீதிமன்றங்களுக்கு நடுவே அலைந்துகொண்டிருக்கிறோம், வறியவர்களுக்கு நீதி எட்டாக் கனிதான்" என்கிறார்.
விசாரணை வேகமாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. வன்புணர்வு மற்றும் கொலைக்கான போதுமான் ஆதாரங்கள் விசாரணையின்போது கிடைக்கவில்லை என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
இதை மறுத்த குடும்பத்தினர் வழக்கை மீண்டும் தொடங்கவைத்திருக்கிறார்கள். ஆனால் குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான ஆதாரங்கள் இருப்பதை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. வன்புணர்வு மற்றும் கொலைக்குற்றங்கள் சாட்டப்படவேண்டும் என்று நீதி கேட்டுக் குடும்பத்தினர் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நீதித்துறையில் நிதி ஒதுக்கீடும் ஊழியர் எண்ணிக்கையும் போதுமான அளவுக்கு இல்லை.
பதாயுன் வழக்கு துரித நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படுகிறது என்றாலும் அங்கு சிறப்பு வசதிகள் இல்லை என்கிறார் அவர்களது வழக்கறிஞர் ஞான் சிங்.
"துரித நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை வேகமாக நடத்தவேண்டும் என்று முயற்சி செய்கின்றன. ஆனால் தடயவியல் உள்ளிட்ட அறிக்கைகள் வருவதற்கு சிலநேரம் தாமதமாகிவிடுகிறது. மருத்துவர்களோ விசாரணை அதிகாரிகளோ இடம் மாற்றப்படுகிறார்கள், நீதிமன்றத்தில் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது" என்கிறார்.
இத்தனை வருடங்களாக மலையாகக் குவிந்தபடியே இருக்கும் கோப்புகளையும் தாள்களையும் ஒரு கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பார்வையிடுகிறோம்.
நெடுங்காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு போர் இது என்பது அந்தப் பெண்ணின் அம்மாவுடைய கருத்து. அங்கிருந்து கிளம்பியபிறகும் அவர் சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது: "நீதி கிடைக்கும்போது நாங்கள் உயிருடன் இருப்போமா என்பதுதான் தெரியவில்லை"
"என்னை வன்புணர்வு செய்ததாக எனது காதலரை சிறைக்கு அனுப்பினார்கள் என் பெற்றோர்"

"உஷா" வுக்கு அப்போது 17 வயது. உள்ளூரிலேயே இருக்கும் ஒரு பையனை அவர்காதலிப்பதாக அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. குஜராத்தில் பஞ்சமஹால் மாவட்டத்திலுள்ள அந்த சிறு கிராமத்தில் அது சகஜம்தான் என்றாலும் பெற்றோருக்கு அது பிடிக்கவில்லை. இருவரும் வேறு இடத்துக்கு சென்றுவிடத்திட்டமிட்டனர். அவர்கள் சென்ற உடனேயே உஷாவின் அப்பா அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உஷாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
"கயிற்றாலும் குச்சிகளாலும் அப்பா அடித்தார், பட்டினி போட்டார். ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்னை இன்னொருவரிடம் விற்றுவிட்டார்" என்கிறார் உஷா.
அந்தத் திருமணம் முடிந்த இரவிலேயே உஷா மீண்டும் வேறு இடத்துக்கு ஓடி, தன் காதலரை மணம் முடித்துக்கொண்டார். கர்ப்பிணியானார்.
புதிய தடை வந்தது
புதிய சட்ட சீர்திருத்தங்களின்படி, ஒப்புதல் தருவதற்கான பெண்களின் குறைந்தபட்ச வயது பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி உஷாவின் சம்மதம் சட்டப்படி செல்லாது என்பதால், உஷாவின் பெற்றோர் அவரது காதலர் மீது வன்புணர்வு வழக்குப் பதிந்திருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தையும் உஷாவின் பெற்றோர் விட்டுவைக்கவில்லை. காதலரின் தாய்,"வன்புணர்வு நிகழ்ந்தபின் உஷாவைக் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்" என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
"இரண்டு வாரம் சிறையிலிருந்தேன். பிறகு அந்தப் பெண்ணின் குடும்பத்தார் எங்கள் வீட்டையே கலைத்துப்போட்டு அநியாயம் செய்திருக்கிறார்கள், வீட்டுக் கதவை உடைத்துவிட்டார்கள், வளர்ப்பு விலங்குகளையும் தூக்கிச்சென்றுவிட்டார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தது" என்கிறார் அந்தத் தாய்.
இது ஒரு "போலி" வன்புணர்வு வழக்கு. எந்த இளம்பெண்ணைப் பாதுகாக்கவேண்டுமோ, அந்தப் பெண்ணின் பெயரிலேயே பதியப்பட்டிருக்கிறது. இவ்வாறு எத்தனை போலி வழக்குகள் நீதிமன்றத்தை வந்து சேர்கின்றன என்பதற்குத் தரவுகள் இல்லை.
ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கிற ஒரு சூழலில், இதுபோன்ற வழக்குகள் சிக்கலை அதிகப்படுத்துகின்றன என்பதே வழக்கறிஞர்களின் கருத்து. இதற்குத் தங்களிடம் அனுபவரீதியான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
"எந்த சட்டத்தாலும் சரி செய்ய முடியாத ஒரு ஆழமான பிரச்சனையை இது காட்டுகிறது" என்கிறார்கள் வல்லுநர்கள்.
"பொருளாதார சுதந்திரமும் இல்லாமல், சட்டரீதியான வயது முதிர்வும் இல்லாமல் இருக்கும் பெண்களால் பெற்றோர்களை எதிர்க்க முடியாது" என்கிறார் கரீமா ஜெயின். இவர் நெதர்லாந்தின் தில்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச பாதிக்கப்பட்டவர்கள் ஆராய்ச்சி மையத்தில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
"வாக்குமூலங்கள் சேகரித்த என் அனுபவத்தில் பார்த்தால், காதலன் ஒரு முறை இதுபோன்ற வன்புணர்வு குற்றச்சாட்டில் சிறை சென்றுவிட்டால், அது அந்த உறவை அழித்துவிடுகிறது. பெண்ணையும் ஒரு ஆழமான மனக்காயத்துக்கு உள்ளாக்குகிறது. இன்னும் அதிகமாக பெற்றோர்களின் கட்டுப்பாட்டுக்குள் அவள் சென்றுவிடுகிறாள்" என்கிறார்.

உஷாவுக்கு ஆனந்தி என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைத்தது. 18 வயதான உடனேயே தன் பெற்றோர்மீது அவர் கடத்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த அளவுக்கு இந்தப் பிரச்சனை போயிருக்கவேண்டாம் என்பது அவரது எண்ணம். "மனதுக்கு விருப்பமானவர்களைப் பெண்களால் திருமணம் செய்துகொள்ள முடிந்தால், இந்த உலகம் இன்னும் மகிழ்ச்சியானதாக இருக்கும்" என்கிறார் அவர்.
துரதிருஷ்டவசமாக, ஒரு பெண் தங்களது கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று உணர்ந்த உடனேயே பெற்றோர் அதிதீவிர எதிர்ப்பைக் கையிலெடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனந்தி அமைப்பின் சமூக சேவகர்கள் மீதும் உஷாவின் பெற்றோர் கடத்தல் வழக்கு தொடர்ந்தார்கள்.
கிராமங்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் சம்மதம் தருவதற்கான குறைந்தபட்ச வயதை முன்வைத்து இதுபோன்ற பல மோசடிகள் நடக்கின்றன.
ஆனந்தி அமைப்பின் ஒரு ஆய்வில், 2013,2014, 2015ல் ஆவணப்படுத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை பெற்றோர்தான் 95% வைக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிற்து.

"நீதிக்காக, சரியான முறையில் சட்டம் பயன்படுத்தப்படுவதில்லை. பெண்களை ஒரு பொருளாகப் பார்ப்பதாலும் அவர்களுக்கு சுதந்திரமாகப் பேசுவதற்குக்கூட உரிமை தராததாலும் இது நடக்கிறது, இது ஒரு பெரிய பிரச்சனை" என்கிறார் ஆனந்தி அமைப்பைச் சேர்ந்த சமூக சேவகி சீமா ஷா.
"பேசக்கூடாது என்று அடக்கிவைக்கப்பட்ட மற்ற தலித் பெண்களுக்காக சட்டம் படிக்க நினைத்தேன்"
அவரது புன்னகை முழுமையானதாக இல்லை. வெளிப்பார்வைக்கு தைரியமான பெண்ணைப் போலத் தெரிந்தாலும் "மாயா"வுக்குள் பல வலிகள் இருக்கின்றன. வலிநிறைந்த நுணுக்கமான விவரங்கள் முழுவதையுமே என்னிடம் சொல்லிவிடத்தான் நினைக்கிறார் என்றாலு, காயம் இன்னும் ஆறாமல் இருப்பதால் அடிக்கடி உடைந்து அழுகிறார்.
இந்து சாதிப் படிநிலைகளில் மிகவும் கீழானதாகக் கருதப்படும் தலித் இனத்தைச் சேர்ந்தவர் மாயா. தலித்தாகவும் பெண்ணாகவும் இருப்பதால் இவர் இருமடங்கு ஒடுக்குமுறையை சந்திக்கவேண்டியிருக்கிறது.
அவர் பொறியியல் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு உயர்சாதி ஆண் அவரைப் பின் தொடர ஆரம்பித்தார். முதலில் தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டார், மாயா வேண்டாம் என்று சொன்னதை மறுத்தார், ஒருகட்டத்தில் மாயாவை வன்புணர்வு செய்தார்.
"பெரிய, பலம்பொருந்திய ஆண் அவர், நான் அவரைத் தடுக்க முயன்றேன், முடியவில்லை" என்கிறார் மாயா.
மாயாவின் பெற்றோர்கள் புகார் கொடுப்பதற்கு அவருக்கு உதவி செய்தனர். ஆனால் அவர் மாயாவைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்ததும் சுற்றியிருந்தவர்களின் அழுத்தத்தால் புகாரைத் திரும்ப பெற்றுக்கொண்டனர்.
வன்புணர்வு செய்யப்பட்ட பெண் என்கிற ஒரு சமூக இழிநிலையிலிருந்து ஒரு திருமணம் மாயாவைக் காக்கும் என்று அவரது பெற்றோர் நம்பினார்கள். ஆனால் திருமண வாழ்க்கை ஒரு புதுவித நரகமாக இருந்தது.
"கணவரது பெற்றோர்கள் என் சாதியைக் குறிப்பிட்டு ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். என்னைக் கண்ணால்கூடப் பார்க்கமாட்டோம் என்றும், நான் ஒரு சாக்கடையைப் போல என்றும் சொல்வார்கள்", தேம்பியபடி பேசுகிறார் மாயா.

"அவர் குடித்துவிட்டு வருவார். நான் புகார் கொடுத்ததை சுட்டிகாட்டி திட்டுவார், அடிப்பார். இயல்புக்கு மீறிய, மோசமான பாலியல் விஷயங்களை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவார். நான் வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டார். தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றியிருக்கிறது எனக்கு" என்கிறார் மாயா.
தற்செயலாகத் திறந்துவைக்கப்பட்ட வீட்டுக்கதவின்மூலம் விடுதலையைத் தேடி அடைந்திருக்கிறார் அவர்.
தலித் வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான மனிஷா மஷாலை சந்தித்தது மாயாவிற்குப் புதிய சிறகுகளை வழங்கியது.
ஹரியானாவில் தலித் பெண்களின் வண்புணர்வு வழக்குகளை ஆராய்ந்ததில், "சாதி வேற்றுமைக்கும் பாலியல் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சம்பந்தப்பட்ட தலித் பெண்களுக்கே தெரியவில்லை, அதனால் அந்த சட்டங்களும் பயனில்லாமல் போய்விடுகின்றன" என்பதைக் கண்டறிந்தார் மனிஷா.

"பாதிக்கப்பட்ட தலித்துகளோடு ஒப்பிடும்போது குற்றம் சாட்டப்படுபவர்கள் அரசியல் செல்வாக்கு உடையவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை ஆகிய இடங்களிலும் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கிறது, இது சிக்கலை அதிகப்படுத்துகிறது" என்கிறார் அவர். "தலித் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டாலே பாதி பிரச்சனைகள் தீரும்" என்று நம்புகிற மனிஷா, மாயா போன்ற வன்புணர்வால் பாதிக்கப்பட்ட தலித் பெண்களை சட்டம் படிக்க ஊக்குவித்தார், ஆதரவு தந்தார்.
வாழவே பிடிக்காமல் இருந்த மாயாவுக்கு இது ஒரு புதிய வாய்ப்பாக இருந்தது. தான் அளித்த வன்புணர்வு புகாரைத் திருத்தி, அதில் இயல்புக்கு மீறிய பாலியல் விஷயங்களை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக ஒரு புகாரையும் சேர்த்தார்.
"மனிஷாவை சந்தித்தபிறகுதான் எனக்கு நடந்ததைப் பேசவும், நேர்மறையாக இருக்கவும் எனக்கு தைரியம் வந்தது. பிறகு சட்டம் படிக்க முடிவெடுத்தேன். அநீதி இழைக்கப்பட்டும் வாயை மூடிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்த என் போன்ற தலித் பெண்களுக்காக நான் போராடவேண்டும் என்பதற்காக சட்டம் படித்தேன்" என்கிறார்.
வன்புணர்வுக்கு ஆழாக்கப்பட்டு மனிஷாவோடு தங்கியிருக்கும் பல பெண்களில் மாயாவும் ஒருவர்.

அந்த சிறு வீடு இதமானதாகவும் நம்மை வரவேற்பதாகவும் இருக்கிறது. வீடு முழுக்க வலிமையும் ஒற்றுமையும் தெரிகின்றன. தங்களைத் துரத்திய அபாயகரமான வாழ்வை விட்டுவிட்டு இங்கே பெண்கள் ஒன்றாக வசிக்கின்றனர்.
"தலித் பெண்களைத் தேவைப்பட்டால் பயன்படுத்தித் தூக்கியெறியும் பொருளாகவே உயர்சாதி ஆண்கள் பார்க்கிறார்கள், இந்த சித்ரவதைக்கெதிராக எந்தப் பெண்ணாவது குரல் எழுப்பினால் அவள் கொலை செய்யப்படுகிறாள்" என்கிறார் மனிஷா.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து இவருக்கு அடிக்கடி மிரட்டல் வருகிறது, ஆனால் அதற்கெல்லாம் அவர் அசரவில்லை. தலித் சமூகத்தில் அவர் ஒரு தலைவராக உயர்ந்திருக்கிறார். வளர் இளம் பெண்களுக்கும் நீதித்துறைக்குமிடையே ஒரு பாலமாக உருவெடுத்திருக்கிறார்.
"என் சமூகத்துப்பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களாக உயிரிழக்கிறார்கள். எனக்கு அது வேண்டாம். நான் ஒரு தலைவராக, போராடியபடியே வீழ விரும்புகிறேன், பாதிக்கப்பட்ட பெண்ணாக அல்ல"
(இந்திய சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)
(பிபிசி குஜராத்தியின் தேஜஸ் வைத்யா அளித்த தகவல்களுடன் எழுதப்பட்ட கட்டுரை.)
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












