கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
18 வயதுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இல்லாத போது, அவர்களுக்கு இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த சில மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தை நல மருத்துவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வருமான தேரணிராஜன், இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27 ஆயிரம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மீது அதன் தாக்கம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக குறைவாக இருந்ததாக அந்த ஆய்வாளர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அதே சமயம் இந்த ஆய்வு அல்லது இது போன்ற ஒரு சில ஆய்வுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த முடிவுக்கும் எளிதில் வந்துவிட முடியாது என்று கூறிய தேரணிராஜன், "உலக அளவில் இது போன்ற பல ஆய்வுகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகும் போது தெளிவு கிடைக்கும்," என்றார்.
இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு சமீபத்தில் அதிக எழுச்சி கண்டுள்ளதாக சென்னை ரெயின்போ உமன்ஸ் அண்ட் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடலில் பணியாற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவ நிபுணர் ஷோபனா ராஜேந்திரன் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2009 - 10ஆம் ஆண்டுளில் சர்வதேச அளவிலான பன்றிக் காய்ச்சல் தொற்று பரவல் அதிகம் இருந்த காலத்தில்தான் ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தும் வழக்கம் இந்தியாவில் தொடங்கியது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அதன் பின்னர் இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு கட்டாயமாக செலுத்த பரிந்துரை வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் குழந்தைகள் ஃப்ளூ போன்ற காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு அதன் தீவிர தாக்குதல்களை தடுக்க முடியும் என்கிறார்.
ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியின் எதிர்ப்பாற்றல் சற்று குறைவாக இருப்பதாகவும், அதன் விலையும் சற்று அதிகமாக இருப்பதாலும் அதை இந்திய தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் இன்னமும் சேர்க்கவில்லை என ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் சூழலில், மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சாதாரண அல்லது ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் அறிகுறிகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இது போன்ற தடுப்பூசிகள் அவசியம் என்கிறது குழந்தை மருத்துவத்தின் இந்திய அகாடமி (Indian academy of Pediatrics).
ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை மட்டுமே எளிதில் தாக்கக் கூடியதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூலமாக அது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவும் என்பதால் இந்த தடுப்பூசி மிக அவசியமாக கருதப்படுகிறது.
ஆனால் அதே சமயம் இந்திய தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி இடம் பெறவில்லை.

பட மூலாதாரம், TWITTER
இது தொடர்பாக பேசிய சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன், இந்த இன்ஃபுளுயன்சா தடுப்பூசியை இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்கிற நிலை உண்டாகவில்லை என்கிறார். அத்தோடு இந்த தடுப்பூசி ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதும் என்கிற நிலையிலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த தடுப்பூசியை ஆண்டுதோறும் பருவ காலத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும் என்றார்.
இந்த இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியும் எதிர்காலத்தில் தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இன்று இந்தியாவில் இந்த ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என்று பார்க்க ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கலாமா?
- “பீடி, சிகரெட், புகையிலை வழக்கம் இல்லாத தமிழக கிராமம்
- சதாமிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறிய இராக் ஒலிம்பிக் வீரர்
- "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - எச்சரிக்கும் சுந்தர் பிச்சை
- "இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"
- சிரிஷா பண்ட்லா: விண்வெளி சுற்றுலாவில் ஒரு மணி நேரம் - இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












