கொரோனா காலத்தில் மோதியின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு எந்த அளவுக்குப் பயன்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி ஹிந்தி சேவை
"மூன்று நாட்களாக என் சகோதரர், நீம்காதானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அங்குள்ள மருத்துவர்களால் சமாளிக்கமுடியாத நிலை வந்தபோது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறிவிட்டார்கள்.நேற்றிரவு அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆக்சிஜன் அளவு 80 ஆக குறைந்துவிட்டது. அவர் சேர்க்கப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகவில்லை. நாங்கள் 1 லட்சம் 30 ஆயிரம் ரூபாயை மருத்துவமனையில் கட்டியுள்ளோம்."
இந்த மூன்று நான்கு வரிகளுக்குப் பிறகு, தொலைபேசியின் மறுபுறத்தில் மெளனம் நிலவியது. ராஜேந்திர பிரசாத் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார். குரலில், சொல்லமுடியாத உதவியற்ற நிலையை உணர முடிந்தது.
ராஜஸ்தானில், ஜெய்ப்பூரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள சிகர் நகரில் உள்ள நீம்காதானாவில் வசிக்கும் ராஜேந்திர பிரசாத், தனது சகோதரர் சுபாஷ் சந்தை, சிகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். அவரது சகோதரர் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் உயிருக்கு போராடிவருகிறார்.
அவரது கையில் அவரது சகோதரர் சுபாஷ் பெயரில் ஒரு ஆயுஷ்மான் அட்டை உள்ளது, அதில் பிரதமர் மோதியின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
"மூன்று நாட்கள் நாங்கள் அரசு மருத்துவமனையில் இருந்தோம், அங்கு சிகிச்சை இலவசம். இந்த அட்டை இங்கேயும் பயன்படும் என்று நாங்கள் நினைத்தோம். நான் என் சகோதரரை இங்கு அழைத்து வந்து அனுமதித்தேன். ஆனால் மருத்துவமனையில், டாக்டர்கள் முதலில் பணம் கட்டுங்கள், நாங்கள் ரசீது கொடுப்போம். பணத்தை எங்கிருந்து திரும்ப பெறமுடியுமோ அங்கிருந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். மேடம், இந்த அட்டையை வைத்துக்கொண்டு இப்போது என்ன செய்வது என்று சொல்லுங்கள். மோதியால் என்ன பயன் ? அவருடைய இந்த அட்டையால் என்ன பயன்? "என்று ராஜேந்திர பிரசாத் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கூறினார்.
அதன்பிறகு அவர் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் வர ஆரம்பித்தது, விசும்பல் தீவிரமடைந்தது. சுபாஷின் வீட்டில் மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் பி.ஏ. படிக்கிறார்கள். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினரான சுபாஷ் ஒரு சிறிய பள்ளியை நடத்தி வருகிறார். இது கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத்- PMJAY என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆயுஷ்மான் அட்டை என்பது மோதி அரசின் லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் அட்டை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று ,சுகாதார காப்பீட்டு திட்டம். ஆயுஷ்மான் பாரத் பிரமர் மக்கள் நலத்திட்டம் (ஆயுஷ்மான் பாரத்- PMJAY). மற்றொன்று ஆரோக்கிய மற்றும் சுகாதார மைய திட்டம்.
ஆயுஷ்மான் பாரத்- PMJAY என்பது நாட்டின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டமாகும் என்று இந்திய அரசு கூறிவருகிறது.
இந்த திட்டம் 2018 செப்டம்பரில் ராஞ்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதத்திலேயே சோதனை அடிப்படையில் ஹரியானாவின் கர்னாலில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பிறந்த கரிஷ்மா என்ற பெண் குழந்தை, இந்த திட்டத்தின் முதல் பயனாளியாக கருதப்படுகிறார்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு மருத்துவ காப்பீடு கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 1000 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முடியும்.
இந்த திட்டத்தின் பயனாளிகள், சமூக மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறார்கள். 2011-ல் நடைபெற்ற சமூக, பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது நிர்ணயிக்கப்படுகிறது.
2020ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் கொரோனா தொற்றுநோய் நாட்டில் பரவ ஆரம்பித்தபோது, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கோவிட் 19 நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அட்டை வைத்திருப்பவர்கள் திட்டத்தின் மூலம் எவ்வளவு பயன் பெறுகிறார்கள் என்பதற்கு ஒரு நேரடி உதாரணம், சிகரின் சுபாஷ் சந்த்.
கொரோனா சிகிச்சைக்காக வீடு, நிலம், நகைகளை மக்கள் விற்பதாக நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல கதைகளை நாம் கேட்கிறோம். ஆனால் விற்க எதுவும் இல்லாதவர்களுக்கு இந்த அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவந்தது.
கடந்த ஆண்டு மே மாதம், இந்த திட்டத்தின் மேன்மையை எடுத்துக்கூறும் விதமாக, அதன் கீழ் ஒரு கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கியதாக கூறி அது கொண்டாடப்பட்டது.
ஆனால் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை என்று பார்க்கும்போது,ஆயுஷ்மான் பாரத்-PMJAY தொடர்பாக கூறப்பட்டவை அனைத்தும் உண்மை நிலையுடன் ஒத்துப்போனதாக தெரியவில்லை.
ராஜஸ்தானில் ஆயுஷ்மான் திட்டத்தின் நிலை
ராஜஸ்தானின் சுபாஷ் சந்தின் கதையைக் கேட்டபின் பிபிசி, ராஜஸ்தான் மாநில சுகாதார காப்பீட்டு திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருணா ராஜோரியாவைத் தொடர்பு கொண்டது.
ராஜஸ்தானில், ஆயுஷ்மான் பாரத்-PMJAY திட்டத்தின் பெயர் , மே 1 முதல் 'முதலமைச்சர் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டம்' என்று மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதற்கு முன் இந்த திட்டத்தின் பெயர் 'ஆயுஷ்மான் பாரத்-மகாத்மா காந்தி ராஜஸ்தான் சுகாதார காப்பீட்டு திட்டம்' என்று இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பெயரை மாற்றுவதோடு, இந்தத் திட்டத்தில் பலன் பெறும் தகுதிக்கான வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இப்போது இந்த திட்டத்தின் பலன் மாநிலத்தின் 1.35 கோடி மக்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் தனி பட்டியல் பராமரிக்கப்படுவதில்லை.
ராஜஸ்தானில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகள், 'முதலமைச்சர் சிரஞ்சீவி ஸ்வஸ்தய யோஜனாவின்' கீழ் சிகிச்சை பெற்று வருவதாக அருணா ராஜோரியா கூறுகிறார்.
சுபாஷ் சந்த் விஷயத்தைப்பற்றி பேசிய அவர், இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவருக்கும் இலவச சிகிச்சை கிடைத்திருக்கும் என்று கூறினார். ஆனால் ஆயுஷ்மான் பாரத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள் குறித்து தன்னிடம் தகவல் இல்லை என்றும் அத்தகைய மருத்துவமனைகளின் பட்டியல் எதுவும் இல்லை என்றும் சுபாஷ் சந்தின் சகோதரர் வாதிடுகிறார்.
அதற்கு பதிலளித்த ராஜோரியா, ஆயுஷ்மான் பாரத்- PMJAY திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியின் தொலைபேசிக்கும் குறுஞ்செய்தி மூலம் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள் விவரம் அனுப்பப்பட்டதாக கூறினார்.
சுபாஷ் சந்த் அத்தகைய செய்தியைப் பெற்றிருக்கக்கூடும். மேலும் அவர் செய்தி இணைப்பைத் திறந்து, எந்த தனியார் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத்-PMJAY திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும் என்பதைப் பார்க்காமலும் இருந்திருக்கக்கூடும்.
இது ராஜஸ்தான் விஷயம். இப்போது இந்தியா முழுவதும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கிராமங்களில் கொரோனா, ஆயுஷ்மான் பலன்கள்
கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது. புள்ளி விவரங்கள் இதைக் காட்டுகின்றன. இப்போது பிரதமர் நரேந்திர மோதி கூட இதையேதான் சொல்கிறார்.
இந்த திட்டத்தின் அட்டையை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் இரண்டாவது அலை பரவத்தொடங்கியபோது, 38 சதவிகித புதிய தொற்றுகள், 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஏப்ரல் மாத இறுதியில், இந்த சதவீதம் 48 ஆக உயர்ந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 15.88 கோடி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டை வாங்கியோரில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆயுஷ்மான் பாரத்தின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள ஒரு அறிக்கையில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி விபுல் அகர்வாலின் நேர்காணலின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை இன்னும் நுணுக்கமாகப்புரிந்து கொள்ள பிபிசி ஆயுஷ்மான் பாரத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் விபுல் அகர்வால் மற்றும் ஆயுஷ்மான் பாரத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.ஷர்மா ஆகியோரை தொடர்பு கொண்டது. ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
எனவே, ஆயுஷ்மான் பாரத்-PMJAY யின் கீழ் செலவிடப்பட்ட 12 கோடி ரூபாயில், எந்த மாநிலத்திற்கு எத்தனை பங்கு இருந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், ஆயுஷ்மான் பாரத்-PMJAY யின் இந்த புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிய இந்தியாவின் கொரோனா வரைபடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தரவை எவ்வாறு புரிந்துகொள்வது?
முதலாவதாக, கொரோனாவிலிருந்து தற்போது சுமார் 2 கோடி பேர் குணமாகியுள்ளனர் என்பதையும், சுமார் 40 லட்சம் பேர் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். அதாவது, இந்தியாவில் இதுவரையிலான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை சுமார் 2 கோடியே 40 லட்சம்.
இந்திய அரசின் கூற்றுப்படி, 80-90 சதவிகிதம் நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைகிறார்கள்.
10-20 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுகிறது.
சிகிச்சைக்காக 10 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனைக்குச்செல்ல தேவை இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அதாவது, 2 கோடியே 40 லட்சம் பேரில், 24 லட்சம் பேர் மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள்.
அரசு புள்ளிவிவரங்களின்படி, 4 லட்சம் நோயாளிகள் மட்டுமே இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
மேலும் இந்த 4 லட்சம் பேரின் சிகிச்சைக்காக அரசு 12 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத்- PMJAY யின் ஆண்டு பட்ஜெட் சுமார் 6400 கோடி ரூபாய் என்பதை இங்கே உங்களுக்குச் சொல்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை மற்றும் ஆயுஷ்மான் பாரத்- PMJAYயின் ரேட் கார்ட், ஆயுஷ்மான் பாரத்- PMJAYயின் செயல் அறிக்கை , நல்லதா, கெட்டதா என்பதைப் புரிந்துகொள்ள சில சுகாதார நிபுணர்களுடன் நாங்கள் பேசினோம். அவர்களில் ஒருவர் உம்மன் சி. குரியன். இவர் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.
"நாட்டில் தினமும் சராசரியாக 20-25 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகும்போது, ஒரு ஆண்டில் வெறும் 4 லட்சம் நோயாளிகள் மட்டுமே அரசு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுகிறார்கள். இவ்வளவு பெரிய சுகாதார திட்டம் பெரிதாகப் பலனளிப்பதாக எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?" என்று அவர் பிபிசியிடம் கேட்டார்.
இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் முதல் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில், ஒரே நாளில் இந்தியாவில் ஒரு கட்டத்தில் 4 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகின என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

பட மூலாதாரம், Getty Images
" அரசின் பிரச்சனை என்னவென்றால், அது தரவுகளை பகிர்வதில்லை. இந்த 4 லட்சம் நோயாளிகள், எந்த நிலையில் இருந்தார்கள், எந்த மாநிலத்தில், எத்தனை பேர் இருந்தார்கள். இதுபோன்ற விவரங்களைக்கூட சொல்வதில்லை. இவர்கள் எதையோ மறைக்க முயல்கிறார்கள் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது." என்று அவர் குறிப்பிட்டார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாத அளவிலான புள்ளிவிவரங்கள் ஓரளவு பொது வெளியில் உள்ளன. அவற்றிலிருந்து சில குறிப்புகளை நாம் பெறமுடிகிறது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் , இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற விரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. ஆனால் அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்கவில்லை.
கோவிட் 19 சிகிச்சைக்கான ஆயுஷ்மான் பாரத்-PMJAY யின் கட்டண விகிதம் இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு பெரிய காரணம் என்று உம்மன் நம்புகிறார்.
கோவிட் 19 சிகிச்சைக்கு பிபிஇ கிட் தேவைப்படுவதால், ஹரியானா அரசு இந்த கட்டணத்தை 20 சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்தது. அதன் பிறகு வெண்டிலேட்டர் கொண்ட ஐ.சி.யு படுக்கைக்கு, ஒரு நாளைக்கு 6,000 ரூபாய் ஆகிறது.
அவ்வாறு செய்த பிறகும் கூட, கடந்த ஒரு வருடத்தில் இந்த திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுள்ளனர் என்று ஹரியானாவின் திட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால் அங்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15.5 லட்சம். அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆறரை லட்சத்திற்கும் அதிகம். மேலும், ஹரியானாவில், 600 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வசதி உள்ளது.
ஏறக்குறைய ஹரியானா அரசின் கட்டண விகிதம் போலவே பெரும்பாலான மாநிலங்களிலும் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், சுபாஷ் சந்த் போன்ற மிகவும் தீவிர கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளை ,ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தினசரி வெறும் 6,000 ரூபாய்க்கு தனியார் மருத்துவமனைகள் ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அந்த ஐ.சி.யு படுக்கைக்கு மிகப் பெரிய தொகையை எளிதில் வசூலிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
கோவிட் 19 போன்ற நெருக்கடியில், இந்த திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் மக்களுக்கு இலவச சிகிச்சையின் பயன் கிடைக்காததற்கு இதுவே முக்கிய காரணம் என்று குரியன் குறிப்பிடுகிறார். தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றுநோயை பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக ஆக்கியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளின் வலைப்பின்னல்
இரண்டாவது நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா. டாக்டர் லஹாரியா இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பொது கொள்கை மற்றும் சுகாதார அமைப்பு வல்லுநர்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்றுநோய் குறித்த "டில் வி வின்: இண்டியாஸ் ஃபைட் அகெயின்ஸ்ட் கோவிட் 19 பாண்டமிக்" என்ற சமீபத்திய புத்தகத்தின் இணை ஆசிரியராகவும் அவர் உள்ளார்.
"இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் எளிய மக்களில் 40 சதவிகிதம் பேருக்கு சுகாதார வசதியை வழங்குவதாகும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் வசதி பல மருத்துவமனைகளிடம் இல்லை, "என்று டாக்டர் சந்திரகாந்த் கூறுகிறார்.
இது ஒரு பெரிய பிரச்சினை என்று அவர் ஒப்புக்கொள்கிறார். இத்தகைய திட்டங்களின் குறைபாடுகள் என்ன என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே அவற்றின் பேனலில் உள்ளன. தேவையுள்ளோருக்கு உண்மையான அவசியம் ஏற்படும்போது , இந்த வசதிகள் அவர்களை சென்றடைவதில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
டாக்டர் சந்திரகாந்த் இதற்கு உதாரணமும் தருகிறார். கிராமத்தில் யாராவது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருந்தால், அது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அட்டை வைத்திருப்பவர், கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
திட்டத்தில் குறிப்பிடப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல எந்த நோயாளியும் காத்திருக்க மாட்டார். ஆனால் இந்த மருத்துவமனைகளில் மட்டுமே இலவச சிகிச்சை சாத்தியமாகும். இந்த திட்டத்தின் கீழ் உள்ள எல்லா மருத்துவமனைகளும் கோவிட் 19 க்கு சிகிச்சை அளிப்பதாகவும் சொல்லமுடியாது.
உண்மையில் சுபாஷ் சந்திற்கும் இதேதான் நடந்தது. அவர் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த மருத்துவமனை ஆயுஷ்மான் திட்டத்தின் பட்டியலில் இல்லை.
பிபிசிக்காக வேலை செய்யும் பத்திரிகையாளர் மோஹர் சிங் மீனா, கண்டாகா மருத்துவமனையின் டாக்டர் சுதீர் வியாஸுடன் பேசினார். தனது மருத்துவமனையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் குழுவில் சேர்க்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். ஏனெனில் 2019 டிசம்பர் மாதத்திலிருந்து மாநிலத்தின் பாமாஷா திட்டத்தின் 16 லட்சம் ரூபாய் தங்களுக்கு இதுவரை வந்துசேரவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கோவிட் சிகிச்சையை இலவசமாக பெறக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு ஏன் அவரை அழைத்துச் செல்லவில்லை என்று சுபாஷின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பட்டியலில் இருக்கும் மருத்துவமனைகள் குறித்து பயனாளிகளுக்கு முழுமையான தகவல் தெரியாதது இந்த திட்டத்தின் இரண்டாவது குறைபாடு.
கொரோனா தொற்றின் போது, பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்க பல புதிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன. பலருக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களின் இடுகைகளைப் பார்த்தால், பல உதாரணங்களை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கியபிறகு, கோவிட் சிகிச்சை அல்லது கோவிட் மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் கட்டண விகிதம் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பதிவு கூட காணப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பிற நோய்களுக்கான சிகிச்சை
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பிற நோய்களுக்கான சிகிச்சையிலும் கணிசமான தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அந்த மூன்று மாதங்களில், கண்புரை அறுவை சிகிச்சை, 90 சதவிகிதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் 57 சதவிகிதம், டயாலிசிஸ் 10 முதல் 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. சிசேரியன் பிரசவம் சில மாநிலங்களில் 70 சதவிகிதம் குறைந்துளது. குழந்தைகளின் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அவசரகால சேவைகளிலும், 15 முதல் 20 சதவிகிதம் வரை சரிவு காணப்பட்டது. இதற்குப் பின்னால் பொதுமுடக்கம், கொரோனா பரவும் பயம், மக்களின் விழிப்புணர்வு மற்றும் பல மருத்துவமனைகளில் பிற சேவைகள் மூடப்பட்டதும் காரணங்களாக சொல்லப்படுகிறது.
முந்தைய பொது முடக்கத்துக்குப் பிறகு, 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பின், இந்த திட்டத்தின் கீழ் பிற நோய்களுக்கான சிகிச்சை படிப்படியாக சிறிது அதிகரித்தது. கடந்த ஆண்டு, கொரோனா சிறிதே ஓய்ந்தபோது பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிறைய உதவி கிடைத்தது. ஆனால் கோவிட் 19 நோயாளிகளுக்கு அவ்வளவாக உதவி கிடைக்கவில்லை என்று உம்மன் குரியன் தெரிவிக்கிறார்.
திட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிகள்
டாக்டர் சந்திரகாந்த் மற்றும் உம்மன் இருவரும் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையை பெரிதும் பாராட்டுகிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை இது மிகவும் நன்றாக செயல்பட்டதாக டாக்டர் சந்திரகாந்த் கூறுகிறார்.
பெருந்தொற்று காலங்களில் அதன் செயல்பாடு குறித்து கருத்து தெரிவிப்பது அநீதி என்பதோடு, அது அவசரப்பட்டு சொல்வதாகவும் இருக்கும் என்கிறார் அவர். கொரோனா காலத்தில் சுகாதார சேவைகளின் நிலை மோசமாகவே இருந்தது.
அதை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அரசு ஏழைகளுக்காக திட்டங்களை வகுக்கிறது. பணக்காரர்கள் தங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை தாங்களே வாங்கிக்கொள்கின்றனர். ஆனால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வராத மக்களை இந்தத்திட்டத்தில் இணைக்கும் முன்முயற்சிகளை அரசு செய்யவேண்டும் என்று டாக்டர் சந்திரகாந்த் குறிப்பிடுகிறார். இதன் செலவுகளை மக்களே ஏற்றுக்கொண்டாலும் கூட இது செய்யப்படவேண்டும் என்கிறார் அவர். அவர் இதற்கு 'மிஸ்ஸிங் மிடில்' என்று பெயரிடுகிறார். இந்த வழியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வரம்பு அதிகரிக்கும். மேலும் பலருக்கு இதன் நன்மை கிடைக்கும்.
இரண்டாவது வழி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இரண்டாம் பகுதி . இது ஆரோக்கியம் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் வலையமைப்பை வலுப்படுத்துவது பற்றி பேசுகிறது. உங்கள் சுற்றுப்புறத்தில் ஒரு சுகாதார மையம் இருந்தால், சோதனை போன்ற அடிப்படை வசதிகள் அங்கு இருந்தால், மக்கள் பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்லும் அவசியமே இருக்காது. இதுபோன்ற சூழ்நிலையில், மருத்துவமனைகள் மீதும் சுமை குறையும். அரசின் செலவுகளும் குறையும். ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்ட உடனேயே நோயை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும். இத்தகைய வலுவான ஆரம்ப சுகாதார சேவையைப் பெறும்போது, மக்களின் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் நீங்கிவிடும்.
கோவிட் 19 போன்ற ஒரு பெருந்தொற்றுகாலத்தில், சிகிச்சை கட்டண விகிதம் குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என்று உம்மன் கூறுகிறார். வேறு இடங்களில் ஒரு குறிப்பிட்ட சேவைக்காக மருத்துவமனைகள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கும்போது, அரசு கொடுக்கும் மலிவான கட்டணத்தின் கீழ் நோயாளிகளை அவர்கள் எப்படி சேர்த்துக்கொள்வார்கள் என்று கேட்கிறார் உம்மன் குரியன்.
பிற செய்திகள்:
- இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?
- க்ரிப்டோ கரன்சியில் கொரோனா நன்கொடையாக இந்தியாவுக்கு ரூ. 7,400 கோடி
- கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து அனாதையாகும் குழந்தைகள்: நேரடியாக தத்து எடுக்க முடியுமா?
- 'தேவை உள்ள வரை காசாவை தாக்குவோம்' - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
- ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காக்குமா? கொரோனா சிகிச்சையில் இதன் பங்கு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












