கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து அனாதையாகும் குழந்தைகள்: நேரடியாக தத்து எடுக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள சிறுசிறு கிளினிக்குகளில் கூட மக்கள் வரிசையாக சிகிச்சைக்கு நிற்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெற்றோர்கள் இருவரும் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்க, பல குழந்தைகள் ஆதரவற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச அரசு, கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாதாமாதம் நிவாரணத் தொகையாக ஐயாயிரம் ரூபாயும், இலவச கல்வியும், ரேசன் பொருள்களும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதைப்போலவே, டெல்லி அரசும், சத்தீஸ்கர் அரசும் கொரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும் என அறிவித்துள்ளது.
தற்போது, சமூக வலைத்தளத்தில் "இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள். தயவு செய்து இந்த செய்தியைப் பரவச்செய்யுங்கள் ஏதேனும் நல்ல உள்ளம் கொண்டவரும், குழந்தை தேவை உள்ளவர்களும் பார்த்து பயன் பெறட்டும். ஒரு சிறு பகிர்வு அந்த குழந்தைகளுக்கு வாழ்வைக் கொடுக்கும்" என்ற செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
இத்தகவலுடன் இந்த குழந்தைகளை எவரேனும் தத்தெடுக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் என ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளது.
இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொடர்ந்து அதனை மற்றவர்களுக்கு அனுப்பியும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டால் நெட்வோர்க் கவரேஜ் ஏரியாவில் இல்லை என்ற செய்தி மட்டும் வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
"எங்களுக்கும் இதுபோன்ற செய்தி குறித்து தகவல் வந்திருக்கிறது. நாங்களும் தொடர்பு கொண்டு பார்த்தோம். மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என வந்தது. மேலும், இந்த எண் டெல்லி வட்டத்தைக் காட்டுகிறது.
இப்படித் தத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இது சட்டவிரோதம். எனவே, தத்தெடுப்பு குறித்து தவறாகப் பரப்பப்படும் செய்திகளை நம்பாதீர். தவறான செய்திகளைப் பரப்பி சிலர் மோசடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு முயல்கிறார்கள். இத்தகைய மோசடியான நபர்களை யாரும் தொடர்பு கொண்டு பணத்தை இழந்து விடக்கூடாது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியச் சட்டத்தின் படி, எந்த ஒரு குழந்தையையும் தன்னிச்சையாகத் தத்து கொடுக்கவோ, தத்து எடுக்கவோ முடியாது. குழந்தையைத் தத்து எடுப்பது குறித்து இரண்டு வகையான சட்ட நடைமுறைகள் உள்ளன.
முதலாவது, இந்து, பௌத்த, சீக்கிய, சமண மதங்களைச் சேர்ந்தவர்கள் 'இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டப்படியும் (1956) முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாவலர் மற்றும் வாரிசுகள் சட்டப்படியும் (1890) குழந்தைகளைத் தத்தெடுக்கலாம். எளிதான இந்த முறையில் தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள் தத்தெடுப்பதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரித்து பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உண்டு.
இரண்டாவதாக, அரசின் தத்து வள மையங்களிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அரசின் தத்து வள மையங்களில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் வளர்க்க முடியாது என்று கூறி பெற்றோரே ஒப்படைத்த குழந்தைகள் ஆகியோரை இளையோர் நீதி சட்டத்தில் (2015) கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றித் தத்தெடுக்கலாம்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் `மத்திய தத்து வள ஆதார மையம்' (CARA) மற்றும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் 'மாநில தத்து வள ஆதார மையம்' (SARA) ஆகியவற்றின் இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொண்டு குழந்தைகளைத் தத்து பெற விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம்.
குழந்தைகள் அனாதைகளாக விடப்பட்டால், குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் 60 நாள்கள் தங்க வைக்கப்படுவார்கள். 60 நாள்களில் யாரும் உரிமை கொண்டாடப்படவில்லை என்றால் அதன்பின்பு அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. `மத்திய தத்து வள ஆதார மையத்தில்' சட்டவிதிமுறைகளைப் பின்பற்றித்தான் தத்தெடுக்க முடியும்.
குழந்தைகளை சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் தத்தெடுப்பது, தத்தெடுப்பு சட்ட நடைமுறைகள் தெரியாமல் அது குறித்த தவறான செய்திகளைப் பரப்புவது, குழந்தைகளைப் பணம் கொடுத்தது விற்பது, வாங்குவது போன்றவை குற்றம். பொதுமக்கள் யாரும் தவறான செய்திகள் மூலம் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்.
தத்தெடுப்பு குறித்த விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்திருந்தால், 1098 என்ற உதவி தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், மாவட்ட குழந்தை நலக் குழுவினர் குழந்தையை மீட்டெடுத்து பாதுகாப்பு இல்லங்களில் சேர்ப்பார்கள். அரசின் சமூகப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் வழங்கி, குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுக்கொடுப்பார்கள்" என்றார்.
சமூக வலைத்தளங்களில் உலா வரும் செய்திகளைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- தூங்க முடியாமல் தவிக்கிறோம்: காசா - இஸ்ரேல் சண்டையில் சிக்கியிருக்கும் தாய்மார்கள்
- காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் யார்? - சபாநாயகர் முன்னிலையில் சர்ச்சை
- சீனாவின் புதிய விண்வெளி சாதனை: சுரொங் ரோவரை செவ்வாயில் தரையிறக்கிய சீனா
- சேலத்தில் அதிர்ச்சியூட்டும் ஆம்புலன்ஸ் மரணங்கள்; தருமபுரி மயானத்தில் குவியும் சடலங்கள்
- இஸ்ரேலுக்கு தலைவலி தரும் ஹமாஸ்: காசாவை ஆளும் ஆயுதக் குழுவின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












