கொரோனா நோயாளிகளின் வசதிக்கு ஓ2 பஸ்! - திருப்பூர் அரசு நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

- எழுதியவர், விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பூர் அரசு மருத்துவமனையின் முகப்பில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து (O2') வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு பெருகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது. கடந்த ஓரிரு நாள்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளும் ஐ.சி.யு படுக்கைகளும் காலியாகாத சூழலே காணப்படுகின்றன. மேலும், கொரோனா தொற்றின் காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது.
சென்னையில் 4,500 ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள், கள்ளச் சந்தையில் 19,000 வரையில் விலை போகின்றன. அப்படியும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் வாயில்களில் காத்திருக்கும் நோயாளிகளும் கடும் துன்பத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் வாயிலில் ஆம்புலன்ஸில் காத்திருந்த நான்கு பேர் இறந்த தகவலும் வெளியானது. இதுகுறித்து மாநில அரசு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளே ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவ சிகிச்சையை நிறுத்தியுள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் வாயிலில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக `ஆக்சிஜன் பஸ்' என்ற திட்டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் பேருந்துகளின் மூலம் ஒரே நேரத்தில் 6 பேர் முதல் 12 பேர் வரையில் ஆக்சிஜன் வசதியைப் பெற முடியும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கான அனுமதி கிடைக்கும் வரையில் நோயாளிகள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``நோயாளிகளுக்கு உடனடியாக தேவைப்படும் ஆக்சிஜனை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஓ2 பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வந்து அட்மிஷன் போட்டுவிட்டு படுக்கைக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நேரிடுகிறது.

பட மூலாதாரம், VIJAYAKARTHIKEYAN
அந்தநேரத்தில் சுவாசப் பிரச்னையால் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சுவாசிப்பதற்கு இந்தப் பேருந்து மிகவும் உதவியாக இருக்கும்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``25 இருக்கைகள் உள்ள பேருந்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரையில் ஆக்சிஜனை எடுத்துக் கொள்ளலாம்.
50 சீட்டுகள் உள்ள பேருந்தில் 12 பேர் வரையில் ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக கான்சன்ரேட்டர் இயந்திரங்களை வைத்துள்ளோம். ஒரு இயந்திரத்தில் இருந்து 2 பேர் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 25 இருக்கைகள் உள்ள ஓ2 பேருந்தில் 3 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
50 இருக்கைகள் உள்ள பேருந்தில் 6 கான்சன்ரேட்டர்கள் மூலம் 12 பேர் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை `யங் இந்தியன்ஸ் திருப்பூர்', `திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்' என்ற தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுத்தியுள்ளோம்.
இப்போது முதலில் அரசு மருத்துவமனையின் வாயிலில் வைத்திருக்கிறோம். வரக்கூடிய நாள்களில் எங்கெல்லாம் முழுமையாகத் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் பயன்படுத்த இருக்கிறோம்" என்றார்.
பிற செய்திகள் :
- நிழல் - திரைப்பட விமர்சனம்
- இஸ்ரேலின் Iron Dome: ஹமாஸ் ராக்கெட்டுகளை அழிக்கும் பிரம்மாஸ்திரம் - அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- புதுச்சேரி துணை முதல்வர் பதவி: ஆர்வம் காட்டாத முதல்வர், பாஜகவின் தனி கணக்கு
- பிளஸ் 2 பொதுத்தேர்வு; வகுப்பறைக்கு 10 பேர் - அமைச்சரின் உறுதியால் அச்சத்தில் ஆசிரியர்கள்
- பிகார் - உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்: எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
- ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: "தினமும் கொடுங்கனவு"
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
- ஆம்புலன்சில் பலியாகும் நோயாளிகள்: சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் என்ன நடக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












