சேலத்தில் அதிர்ச்சியூட்டும் ஆம்புலன்ஸ் மரணங்கள்; தருமபுரி மயானத்தில் குவியும் சடலங்கள்; கொரோனா 2ஆம் அலையில் சிக்கிய கிருஷ்ணகிரி

- எழுதியவர், ஏ.எம். சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிரம்பி வழிகிறது தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் படையெடுப்பால் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.
மே 13ஆம் தேதி நிலவரப்படி 49 ஆயிரத்து 371 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சுமார் 4 ஆயிரத்து 115 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44 ஆயிரத்து 618 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பில் இதுவரை 638 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம்: அதிர்ச்சியூட்டும் ஆம்புலன்ஸ் மரணங்கள்
கொரோனா தொற்று அதி வேகமாக பரவுவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனை வெளியிலேயே ஆம்புலன்ஸ்ல் காத்திருந்து அன்றாடம் மூன்று - நான்கு பேர் உயிரை விடுகின்றனர் .
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள 800 படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளது. இதுதவிர ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர், மேட்டூரில் உள்ள மருத்துவமனைகளில் 244 படுக்கைகள் உள்ளன.அவற்றிலும் இடமில்லை.
மாநகராட்சி பகுதியில் ஆறு இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொங்கும் பூங்கா, சேலம் மகளிர் கல்லூரி, மெய்யனூர் சட்டக்கல்லூரி, சாரோன் மருத்துவக் கல்லூரி அரங்கம் , கருப்பூர் பொறியியல் கல்லூரி, காந்தி மைதானம் ஆகிய இடங்களில் சிகிச்சை மையங்கள் உள்ளன.
அவற்றில் தொங்கும் பூங்கா வளாகத்தில் 96 இடங்களும், மெய்யனூர் சட்டக் கல்லூரியில் 72 இடங்களும், சாரோன் அரங்கத்தில் 48 இடங்களும், கருப்பூர் பொறியியல் கல்லூரியில் 116 இடங்களும், காந்தி மைதானத்தில் 60 இடங்களும் காலியாக உள்ளதாக மாநகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் அதை சமாளிக்கும் விதமாக சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 10 நாட்களில் முடிவடைந்து நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம் அவர் கூறும்போது மருத்துவமனையில் தற்போது படுக்கைகள் காலியாக இல்லை புதிதாக நோயாளிகள் வரவர அவர்களுக்கு படுக்கை ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.
ஆய்வு கூட்டத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேசம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கௌதம சிகாமணி, சின்ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், இறப்பு எண்ணிக்கையில் பொய் சொல்லாதீர்கள் மாவட்டம் தோறும் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் வரை உயிரிழக்கின்றனர். மக்களும் முழு ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றாமல் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சுற்றிவருகின்றனர். குறிப்பாக தாலுக்காவில் உள்ள அதிகாரிகள் கொரோனா பாதிப்பு குறித்த உண்மைத் தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆவேசப்பட்டார்.
பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அவசர தேவையாக உள்ளது. கொரோனா நோயாளிகளை மூன்று விதமாக பிரிக்கிறோம் குறைந்த பாதிப்பு உள்ளவர்களை தனிமை படுத்தியும், மிதமான ஆக்ஸிஜன் தேவைப்படுவோரை அந்தந்த தொகுதியிலும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளிக்க உள்ளோம் சேலம் மாவடத்தில் 11 இடங்களில் மிதமான ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
தடுமாறும் தருமபுரி - மயானத்தில் குவியும் சடலங்கள்
மே 14ஆம் தேதி நிலவரப்படி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12, 211 பேர் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர் இதில் 1௦,511 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர் 78 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்ததாக மருத்துவமனை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கைகள் 1291 அதில் ஆக்ஸிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் 474 இதை தவிர தருமபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 600 சாதாரண படுக்கைகள் கொண்ட கோவிட் சென்டர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது அதேபோல தமிழக அரசு அறிவித்துள்ள 12 சித்த மருத்துவ கொரொனா மையங்களில் ஒன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

தர்மபுரி மருத்துவமனியில் உள்ளூர் நோயாளிகளை விட கிருஷ்ணகிரி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிக அளவில் சிகிச்சைக்காக சேர்கின்றனர்
சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல விரும்புவதில்லை வாடகைக்கு ஆம்புலன்சை பேசி பச்சையம்மன் கோயில் மயானம் அருகே உள்ள மின் மயானத்துக்கு எடுத்து சென்று எரித்து வந்தனர் . இந்த தகன மேடைக்கு கொரொனா தாக்கம் இல்லாத போது ஒரு மாதத்துக்கே 25 அல்லது 3௦ சடலங்கள் தான் வரும். தற்போது தினமும் 15 சடலங்கள் வரை எடுக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க சடலங்களை எரிக்கும் தொழிலாளர்கள் மின் தகன மேடை அடிக்கடி பழுதடைந்து விடுகிறது அப்போது மரக்கட்டையை அடுக்கித்தான் சடலங்களை எரிகின்றோம் அப்படி எரிக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுகிறது . கடந்த ஒரு வாரமாக ரிப்பேரில் இருந்த மின் தகன மேடை தற்போது சரி செய்யப்பட்டது . ஆனாலும் எரிப்பதற்க்கு பொறுமையாக காத்திருக்க முடியாத சிலர் இரவோடு இரவாக பச்சையம்மன் சுடுகாட்டில் வைத்து எரித்து வருகின்றனர் என்று மின் மயான பணியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த தகவல் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிய வர ஆணையாளர் தாணு மூர்த்தி ,பொறியாளர் சுரேந்திரன், துப்புரவு ஆய்வாளர் சுசிந்தரன் ,என ஒரு குழுவாக களம் இறங்கி .பச்சையம்மன் கோவில் சுடுகாட்டையும் மின் மயானத்துக்கு உதவி மயானமாக கொண்டு எரி மேடையை சீரமைத்து வருகின்றனர் பணிகள் நிறைவு பெற்ற பின் உதவி மையம் மூலம் உடல்களை அடக்கமோ அல்லது தகனமோ செய்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர் .
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவோ மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 850 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, 500 ஆக்ஸிஜன் கலன்கள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர, பென்னாகரம் வட்டம் நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலக்கோடு, அரூர், பென்னாகரம் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் பக்கத்துக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதனால் சடலங்களை அவர்கள் மாவட்டங்களுக்கு எடுத்து சென்று அங்கு இறப்பைப் பதிவு செய்து கொள்வார்கள். அதனால்தான் இங்கு இறப்பு எண்ணிக்கை குறைவாக வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறும் காரணம் நம்பும் படியாக இல்லை. கொரோனா ஒருபுறம் அதிகரிக்க, மருத்துவமனையில் இடம் இல்லை, படுக்கை இல்லை, மருந்துகள் பற்றாக்குறை, மின்மயானத்தில் சிக்கல், சடலங்களை எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இந்த நிலைமையை காலம் மாற்றவேண்டும் என்று இறந்தவரிகளின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .
கிருஷ்ணகிரி - படுக்கை வசதி இல்லாமல் தவிக்கும் நோயாளிகள் - தாண்டவம் ஆடும் கொரோனா

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரையில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக பச்சை மண்டலம் என பெயர் எடுத்த பெருமையோடு கிருஷ்ணகிரி இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் தான் முதல் கொரோனா தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். படிப்படியாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த ஆண்டு (2021) ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. கொரோனா கடந்த மார்ச் மாதம் 10 ந் தேதி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் வது அலை கிருஷ்ணகிரி மாவட்டத்தை புரட்டிப்போட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் ஒரு மாதத்தில் 5,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 895 பேர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர். ஊத்தங்கரை, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து வார்டுகளும் நிரம்பி உள்ளன.நோயாளிகளுக்கு எந்த மருத்துவமனையிலும் இடம் இல்லை.
அதே போல மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் முழுமையாக நிரம்பி உள்ளன. எந்த மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதில்லை. குறிப்பாக ஆக்சிஜன் குறைவாக உள்ள நோயாளிகளை அனுமதிப்பதில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் அனைத்து மருத்துவமனைகள் முன்பும் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் நோயாளிகளுடன் காத்து கிடக்கின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் பலி தொடர்ந்து வருகின்றன. மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள் என்று அரசின் இணையதளத்தில் இருக்கைகள் காட்டுவதாகவும், ஆனால் எந்த மருத்துவமனையிலும் நோயாளிகளை அனுமதிப்பதில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் 8 ஆயிரத்து 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20 நாளில் மட்டும் 9 ஆயிரத்து 694 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் 2வது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் கோரத்தாண்டவமாடி உள்ளது. கொரோனா மேலும் பரவுவதை கட்டுப்படுத்தவும், இறப்பை குறைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பலி எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதுவரையில் 20,851 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் அதில் 16,562 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
4,136 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின எண்ணிக்கை 153 ஆக உள்ளது. என்று சுகாதார துறையினர் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- இஸ்ரேலுக்கு தலைவலி தரும் ஹமாஸ்: காசாவை ஆளும் ஆயுதக் குழுவின் வரலாறு
- கொரோனா: காகம், கழுகுக்கு இரையாகும் கங்கையில் 'புதைக்கப்பட்ட' உடல்கள்
- தமிழ்நாட்டில் இன்று முதல் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: 10 முக்கிய தகவல்கள்
- இஸ்ரேலின் Iron Dome: ஹமாஸ் ராக்கெட்டுகளை அழிக்கும் பிரம்மாஸ்திரம்
- தள்ளிப்போகும் 'வலிமை', 'டாக்டர்' படங்களின் வெளியீடு: திணறும் கோலிவுட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












