கொரோனா: வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் தகவல்கள்

பட மூலாதாரம், Instagram
- எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
- பதவி, பிபிசி செய்தி
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் சூழலில், தினமும் 350,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வேறு வழி ஏதும் இல்லாததால் சமூக ஊடகங்களில் உதவி கோரி வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை, அவர்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தேடுகின்றனர், வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகளை பதிவிடுகின்றனர் மற்றும் தொலைபேசி எண்களை தேடுகின்றனர். அவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன், கோவிட் மருந்தான ரெம்டெசிவிர் மற்றும் பிளாஸ்மாவைத் தேடுகிறார்கள்.
இது குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கூடவே மனதை கசக்கிப்பிழிவதாகவும் உள்ளது. ஒரு வாட்ஸ்அப் செய்தி பரவத் தொடங்குகிறது: "இரண்டு ஐ.சி.யு படுக்கைகள் காலியாக உள்ளன." சில நிமிடங்களில் அந்தப்படுக்கைகள் அங்கு முதலில் சென்றடைந்தவர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மற்றொரு செய்தி: "அவசரமாக ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் தேவை. தயவு செய்து உதவுங்கள்."
சுகாதார அமைப்பு கடும் அழுத்தத்தின் கீழ் உள்ள நிலையில், சமூகம், சுய உதவி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை வாழ்க்கைக்கும், இறப்புக்கும் இடையில் நிற்கின்றன.
ஆனால் இருக்கும் வளங்களை விட தேவை அதிகமாக உள்ளது மற்றும் நோயுற்றவர்களிடம் காத்திருக்க நேரம் இல்லை. நான் வெள்ளிக்கிழமை இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கியபோது, உத்தரபிரதேசத்தில் தனது 30 வயது உறவினருக்காக வாட்ஸ்அப்பில் ஆக்ஸிஜனைத் தேடும் ஒருவரிடம் பேசினேன். ஞாயிற்றுக்கிழமை நான் இதை முடித்த நேரத்திற்குள், அவர் இறந்துவிட்டார்.
மற்றவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை கண்டுபிடிப்பதற்கான சுமையை பல நாட்கள் சுமந்த பிறகு சோர்வடைந்து துன்பப்படுகிறார்கள்.
"இப்போது இந்தியாவில் காலை 6 மணி. நாங்கள் அழைப்புகளைத் தொடங்கும் நேரம் இதுதான். எனது தாத்தாவின் அன்றைய தேவைகளை அதாவது ஆக்ஸிஜன் அல்லது ஊசி மருந்துகளை நாங்கள் தேடுவோம். நாங்கள் வாட்ஸ்அப்பில் செய்தியை பதிவு செய்வோம். எங்களுக்குத் தெரிந்த அனைவரையும் அழைப்போம்," என்று அவனி சிங் விளக்குகிறார்.

பட மூலாதாரம், AVANI SINGH
அவரது 94 வயதான தாத்தா டெல்லியில் கோவிட் -19 காரணமாக தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து, அவனி மற்றும் அவரது தாயார் அமிர்தா, குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில்முறை தொடர்புகள் பற்றி விவரிக்கிறார்கள். அவர்களில் சிலர் தாத்தா நோய்வாய்ப்பட்டபோது உதவினார்கள். ஆனாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.
"எங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் நாங்கள் தொடர்புகொள்கிறோம். நான் சமூக ஊடகங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் பின்பற்றும் பல பக்கங்கள் உள்ளன. ஐ.சி.யு படுக்கைகள் உள்ளன அல்லது 'இந்த இடத்தில் ஆக்ஸிஜன் உள்ளது' என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என்று தெரிவிக்கும் செய்திகளை பார்த்தவுடன் முயற்சி செய்வோம். இது போன்ற 200 இடங்களை நாங்கள் முயற்சித்தோம்," என்று அவனி விளக்குகிறார்.
இறுதியில் ஒரு பள்ளி நண்பர் மூலம் ஒரு மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக இருப்பதை கண்டுபிடித்தார்கள். ஆனால் அதில் ஆக்ஸிஜன் இல்லை என்று தெரிய வந்தது. அதற்குள்ளாக அவனியின் தாத்தா மயக்கமடைந்தார். "பின்னர் நான் ஃபேஸ்புக்கில் ஒரு வேண்டுகோளை வெளியிட்டேன். ஒரு நண்பருக்கு ஆக்ஸிஜனுடன் கூடிய எமெர்ஜென்ஸி ரூம் பற்றித்தெரிந்திருந்தது. அந்த நண்பர் காரணமாக என் அப்பா அன்றிரவு உயிர் பிழைத்தார், " என்று அமிர்தா தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று நான் பேசியபோது, அவரது நிலைமை மேம்பட்டிருந்தது. ஆனால் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளைப் கண்டுபிடிப்பது, அவனி மற்றும் அமிர்தாவின் தற்போதைய வேலை. அவர்கள் பல அழைப்புகளைச் செய்கிறார்கள். டெல்லியில் உள்ள அமிர்தாவின் சகோதரர் ஒரு நாளைக்கு 100 மைல் (160 கி.மீ) வரை இதற்காக பல இடங்களுக்கு அலைகிறார்.
"என் தாத்தா என் நல்ல நண்பர். இன்ஸ்டாகிராம் பக்கங்களை இயக்கும் மக்களுக்கு அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது," என்று அவனி கூறுகிறார்.
ஆனால் தகவல் விரைவாக காலாவதியாகிறது மற்றும் அவர்கள் போலிகளைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள்.
"ஒரு மருந்தகத்திடம் இருப்பு உள்ளதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் என் உறவினர் அங்கு சென்றபோது, எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. இந்தக்கடை காலை 8.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நள்ளிரவு முதலே மக்கள் வரிசையில் நின்றனர் - முதல் 100 பேருக்கு மட்டுமே ஊசி கிடைத்தது." என்றுஅவர் தெரிவித்தார்.
"இப்போது அவர்கள் கறுப்புச் சந்தையில் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள் - அது 1,200 ரூபாயாக ($ 16) இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 100,000 ரூபாய்க்கு( 1,334 டாலர்) விற்கிறார்கள். அது அசல்தானா என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை," என்று அமிர்தா விளக்குகிறார்.
தனிப்பட்ட தொடர்புகளை நம்பியிருக்கும் இந்த நிலை, அனைவருக்கும் நியாயமான முடிவை அளிப்பதில்லை. இணையம் மற்றும் மொபைல் போன்களுக்கான அணுகலைப் போலவே , பணம், குடும்ப தொடர்புகள் மற்றும் உயர்ந்த சமூக அந்தஸ்து அனைத்தும் வெற்றிக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும்.
குழப்பங்களுக்கு மத்தியில் ஒழுங்கைக் கொண்டு வந்து தகவல்களை மையப்படுத்த தனிநபர்கள் முயற்சிக்கின்றனர். சமூக குழுக்களை அமைத்து, இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்தி தொடர்புகளை பரப்புகிறார்கள்.

பட மூலாதாரம், ARPITA CHOWDHURY
இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள தனது கல்லூரியில் 20 வயதான அர்பிதா சவுத்ரி மற்றும் ஒரு மாணவர்கள் குழு , தாங்கள் சேகரித்து சரிபார்க்கும் தகவல்களின் ஆன்லைன் தரவுத்தளத்தை நடத்தி வருகின்றனர்.
"இது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நிமிடத்திற்கும் மாறுகிறது. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, 10 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.ஆனால் நான் அழைத்த போது படுக்கைகள் எதுவும் இல்லை" என்று அவர் விளக்குகிறார்.


தனது சகாக்களுடன், ஆக்ஸிஜன், படுக்கைகள், பிளாஸ்மா அல்லது மருந்தை வழங்கும், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட தொடர்பு எண்களை அவர் அழைக்கிறார் மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை ஆன்லைனில் வெளியிடுகிறார். கோவிட் நோயாளிகளின் உறவினர்களிடமிருந்து உதவி கேட்கும் கோரிக்கைகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.
"மிக அடிப்படை மட்டத்தில், இது நாங்கள் செய்யக்கூடிய உதவிகளில் ஒன்று" என்று அவர் கூறுகிறார்.
வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கோரக்பூரில் , கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினர் செளரப் குப்தாவுக்கு ஆக்ஸிஜன் கான்ஸண்ட்ரேட்டரை தேடுவதாக வெள்ளியன்று ஆதித்ய குப்தா என்னிடம் கூறினார். கோரக்பூர் நகரம் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளால் தத்தளித்துவருகிறது.
30 வயதான பொறியாளர் சவுரப், அவரது குடும்பத்தின் பெருமையாக திகழ்பவர். அவரது தந்தை ஒரு சிறிய கடையை நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தால் அவரை படிக்கவைத்தார்.
"நாங்கள் கோரக்பூரில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்றோம். பெரிய மருத்துவமனைகள் நிரம்பியிருந்தன. நீங்கள் ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்தால், நாங்கள் நோயாளியை அட்மிட் செய்துகொள்கிறோம் என்று மற்ற மருத்துவமனைகள் தெரிவித்தன," என்று ஆதித்யா விளக்கினார்.

பட மூலாதாரம், ADITYA GUPTA
வாட்ஸ்அப் மூலம் குடும்பம் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை எப்படியோ பெற்றது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கு ஒரு கான்ஸென்ட்ரேட்டர் தேவைப்பட்டது. இது வெள்ளிக்கிழமை கையிருப்பில் இல்லை. ஆனால் ஏற்பாடு செய்து தருவதாக ஒரு சப்ளையர் உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் அத்தியாவசியமாக தேவைப்படும் அந்த சாதனம் ஒருபோதும் வரவில்லை. செளரப் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை.
"நேற்று காலை நாங்கள் அவரை இழந்துவிட்டோம். அவர் தனது பெற்றோரின் கண்முன்னே காலமானார்,"என்று ஆதித்யா ஞாயிறன்று என்னிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












