தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021: வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு நிலை என்ன?

தேர்தல் வாக்கு எண்ணிக்கை

பட மூலாதாரம், TWITTER

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருக்கும் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் மறு உத்தரவு வரும்வரை தொடருமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று யார், யார் வெளியில் வரலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் இருக்கின்றன. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். ஊரடங்கு காலகட்டத்தில் ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இரவு நேர ஊரடங்கின்போது பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்கலாம்.

மாநிலத்திற்குள்ளும் இரு மாநிலங்களுக்கு இடையிலும் இயங்கும் பேருந்துகள் இரவு பத்து மணி முதல் காலை 4 மணிவரை இயங்குவதற்கு அனுமதி இல்லை.

ரயில் நிலையங்கள், விமான நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்துவர, கொண்டுபோய் விடுவதற்கு வாடகை வாகனங்கள் இயங்குவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று என்னென்ன கட்டுப்பாடுகள்?

தேர்தல்

பட மூலாதாரம், ECI

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படும் என்பதால், அன்றைய தினம் வேட்பாளர்கள், கட்சியின் ஏஜென்டுகள், வாக்கு எண்ணிக்கை ஏஜென்டுகள், உணவு விநியோகிப்பவர்களுக்கு ஊரடங்களிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, சிறிய அளவில் சென்னை மெட்ரோ ரயிலை இயக்க அனுமதிக்கப்படும்.

எல்லா இறைச்சிக் கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் கடற்கரைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

இவை தவிர, இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டபோது விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று யாரும் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: