யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சமீராத்மஜ் மிஸ்ரா
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
39 வயதாகும் ஸ்ரீனிவாஸ் துவிவேதி, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பெய்லி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் பிரச்னைக்காக சேர்க்கப்பட்டார். அவரது ஆக்சிசன் அளவு 55 ஆக இருந்தது. அவரது ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஏற்கெனவே நடந்திருந்தாலும் முடிவுகள் வெளிவரவில்லை. அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள் மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாகக் கோரி சமூக ஊடகங்களில் கண்ணீர் மல்க காணொளியை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், உதவிகள் கிடைக்காத நிலையில், மறுநாளே ஸ்ரீனிவாஸ் துவிவேதி உயிரிழந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மறுநாள், பாரதிய ஜனதா கட்சியின் மோகன்லால் கஞ்ச் எம்.பி கெளஷல் கிஷோர் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுப் பிரச்னைகளை ஒரு காணொளியில் குறிப்பிட்டுப் பேசினார். நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யாவிட்டால், நான் தர்னாவில் ஈடுபடுவேன் என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்பும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் வசதிகளும் கிடைப்பதில்லை என்று கெளஷல் முறையிட்டிருந்தார்.
ஒரு நாளைக்கு முன்புதான் கெளஷலின் அண்ணன் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தார்.
கோரக்பூரின் கேம்பியர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பதேஷ்வர் சிங்கின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளாக சுகவீனமாக இருந்தார். "நாங்கள் எல்லா மருத்துவனையிலும் சேருவதற்கு போராடினோம். ஆனால், முடியவில்லை. எங்கும் ஆக்சிஜனோ வென்டிலேட்டர் வசதியோ இல்லை. எங்கு செல்வதென்றும் தெரியவில்லை. எனது மனைவிக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் உள்ளது," என்று அவர் கூறினார்.
மருத்துவமனைகளில் இடம் தேடி அல்லல்படும் பல குடும்பங்களின் குரல்கள் இவை. உத்தர பிரதேசத்தின் கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளிலுமே இதுதான் நிலைமையாக உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணொளி காட்சி வாயிலாக ஊடகங்களுடன் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இது பற்றி கேட்கப்பட்டது.
ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், முதல்வரின் கூற்றுக்கு மாறாக, உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அரசு பதிவு செய்துள்ள புள்ளிவிவரத்தின்படி உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு புதிதாக ஆளானவர்கள் 32,993 பேர். 265 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் தற்போதுவரை அதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பதினோராயிரத்தைக் கடந்துள்ளது. மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை பல ஆயிரங்களை கடக்கிறது.
அரசு என்னதான் முயற்சி செய்து வருவதாக ஆறுதல் கூறினாலும், மாநிலத்தின் தலைநகரிலேயே மோசமாக உள்ளது. ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்றால் அவரது இடத்தை நிரப்ப நூறு நோயாளிகள்வரை வரிசையில் காத்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில்தான் ஆக்சிஜன் தேவைக்காக காத்திருக்கும் மருத்துவமனைகளுக்கு ஆறுதல் தரும் வகையில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், சமீபத்தில் லக்னெள வந்து சேர்ந்தது. ஆனால், வந்த வேகத்திலேயே ஆக்சிஜன் காலியாகும் அளவுக்கு இங்கு ஆக்சிஜன் தேவையுடன் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில்தான் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மீரட்டைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி ராஜேந்திர அகர்வால் எழுதிய கடிதத்தில், மாநில சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
மீரட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை அவரது கடிதம் உணர்த்தியது. மீரட் நகருக்கு தற்போது 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது என்ற கள யதார்த்தத்தை அவரது கடிதம் புரிய வைத்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அரசுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக பிபிசி ஹிந்திக்காக ராஜேந்திர அகர்வாலிடம் பேசியபோது, "கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை உள்ளபோதும் அரசு எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது," என்று கூறினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறார். ஆனால், அதிகரிக்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜனோ மருந்துகளோ போதுமானதாக இல்லை என்று ராஜேந்திர அகர்வால் தெரிவித்தார்.
இத்தனைக்கும் மத்தியில்தான் உத்தர பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் நோயாளிகள், நிறைவடைந்த ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்ப காத்திருக்கும் நோயாளிகள் என பலரையும் பார்க்க முடிகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்திய காணொளி காட்சியில் பங்கெடுத்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நாளிதழின் ஆசிரியர், "மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன், படுக்கை வசதிகளின்றி கூச்சம் குழப்பம் நிலவுவதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியபோது, எல்லாோரும் பேசுவதை கேட்டுக் கொண்ட முதல்வர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு வசதிக்குறைபாடோ தட்டுப்பாடோ இல்லை. கள்ளச்சந்தையில் மருத்துவ உபகரணங்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கறோம் என்றுதான் பதிலளித்தார்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
முதல்வரின் இந்த பதில் தொடர்பாக விளக்கி உண்மை நிலையை கண்டறிய பல மருத்துவமனைகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முயன்ற நமது முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை.
எனினும், அரசு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், எல்1 தரத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் படுக்கை வசதிகள், எல்2 மற்றும் எல்3 தரத்தில் 65 ஆயிரம் படுக்கை வசதிகள் இருப்பதாகவும் விரைவில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், கடந்த 4-5 நாட்களில் கொரோனா தொற்றின் வேகம் தணிந்துள்ளதாகவும் நோயில் இருந்து குணம் அடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளரான யோகேஷ் மிஸ்ரா, முதல்வரின் கூற்றுக்கும் கள யதார்த்தத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்றும் முதல்வரின் பதில் உண்மைக்கு புறம்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகியின் செயல்பாடுகளை தங்களுக்கு சாதகமான பாதுகாப்பு கேடயமாக அதிகார வர்க்கம் பயன்படுத்தி வருகிறது. முதல்வரின் இணையதள புகார் மின்னஞ்சலுக்கு வரும் புகார்கள் கவனிக்கப்படுவதில்லை. தங்களுக்கு நம்பகமானவர்கள் தெரிவிக்கும் தகவல்களை அப்படியே நம்பி அதை அறிக்கையாக வெளியிடுகிறார்கள். உண்மை என்ன என்பதை களத்தில் அவர்கள் சரிபார்ப்பதில்லை என்று யோகேஷ் மிஸ்ரா கூறினார்.
இங்குள்ள நிலைமையை பார்க்கும்போது அது ஒட்டுமொத்த அரசின் அமைப்பு முறையே இங்கு அழிக்கப்பட்டு விட்டது போல உள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாற்றாய்வாளர் யோகேஷ் பிரவீண் லக்னெளவில் இறக்க காரணம், அவருக்கு அவசர நேரத்தில் அவசர ஊர்தி கிடைக்காததுதான் என்று கேபினட் அமைச்சரான பிரஜேஷ் பாதக் எழுதிய கடிதம் விரிவாகவே அரசு அளவில் விவாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனை படுக்கை வசதிகள் பற்றாக்குறை என இந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டி எம்எல்ஏ, எம்.பி. அமைச்சர்கள் என பலரும் அரசுக்கு எழுதும் கடிதங்கள் பொதுவெளியிலும் பகிரப்பட்டுள்ளன. ஆனாலும் அதை அறிந்தும் அறியாதவர் போல முதல்வர் யோகி ஆதித்யநாத் தரும் பதில்கள், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கல்ஹான்ஸ், "இந்த மாநிலத்தில் எல்லாமே கிடைக்கிறது என்றால், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களே ஏன் மருத்துவ வசதி கோரி சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுக்கிறார்கள்," என கேள்வி எழுப்புகிறார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை மக்கள், சாமானியர்களுக்கு உதவியாக இருப்பவர் என்று கருதினார்கள். அதுவே அவருக்கு சூப்பர் கதாநாயகன் அந்தஸ்தை வழங்கியது. அந்த பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ளவே முதல்வர் தற்போது தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை மறைக்க முற்படுவதாகவே பார்க்கிறேன் என்று சித்தார்த் கல்ஹான்ஸ் கூறினார்.
"தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரதான ஊடகங்களில் வேண்டுமானால், தனக்கு எதிரான செய்திகள் வராமல் யோகி ஆதித்யநாத்தால் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், தடையற்ற சமூக ஊடகங்களில் அவரால் மறைக்கப்படும் பல செய்திகள் பதிவாகி வருகின்றன. அதை அவரால் தடுக்க முடியாது. மக்கள் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் நம்பிக்கைக்குரிய செய்தி கூறும் ஊடகங்களாக இப்போது அவர்கள் தொலைக்காட்சிகளையும் நாளிதழ்களையும் நம்புவதில்லை. அவர்களின் கையடக்கத்திலேயே உலகம் உள்ளது," என்கிறார் சித்தார்த் கல்ஹான்ஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












