தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021: வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பதை பார்ப்போம்.
- வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணிக்கு தொடங்கும்.
- வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் நடைபெறும்.
- பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் அதிகபட்சமாக 14 மேசைகள் வரை அமைக்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் அதிக மேசைகள் அமைக்கப்படலாம்.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில், அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆகியோர் இருக்கலாம்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன், வாக்கு எண்ணும் ஊழியரும் வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவரும் வாக்கு இயந்திரத்தை சரிபார்ப்பர்.
- அதன்மேல் வைக்கப்பட்டுள்ள சீலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, சீல் பிரிக்கப்பட்டுள்ளது என்றால் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
- வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கண்ட்ரோல் யூனிட்டில் ரிசல்ட் என்ற பட்டனை அழுத்தினால் எந்த வேட்பாளர் எத்தனை வாக்குகளை பெற்றுள்ளார் என்பது திரையில் தெரியும். அதனை வாக்கு எண்ணிக்கை ஊழியரும், வேட்பாளர்களின் முகவர்களும் குறித்துக்கொள்வர்.
- இது போல 14 மேசைகளிலும் ஒரே நேரத்தில் 14 வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். இந்த 14 இயந்திரங்களில் இருந்து பெற்ற எண்ணிக்கையும் நடு நாயகமாக அமர்ந்திருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும். அவர் அந்த 14 மேசைகளின் எண்ணிக்கைகளையும் கூட்டி அந்த சுற்றில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டு அறிவிப்பார்.
- இந்த சுற்று முடிவுகள் மூலமே முன்னிலை விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்படும்.
- ஒரு தொகுதியில் எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டனவோ அத்தனை வாக்குப்பெட்டிகள் இருக்கும். அத்தனை பெட்டிகளையும் பதினான்கு பதினான்காக எடுத்துவந்து 14 மேசைகளில் விநியோகித்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
- எனவே, ஒரு தொகுதியில் எத்தனை சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பது அந்த தொகுதியில் இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறும்.
- தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படும் வேறு மாநில அதிகாரி ஒருவர் எண்ணிக்கை முடியும் வரையில் உடன் இருப்பார்.
- அத்தனை சுற்றுகளும் முடிந்த பிறகு, யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் தேர்தல் அலுவலர் முடிவுகளை அறிவிப்பார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








