மாநில தேர்தல் 2021: மேற்கு வங்கம், கேரளா, அசாமில் புதிய ஆட்சி யார்?

தேர்தல் 2021

பட மூலாதாரம், Getty Images

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள சில தனியார் தொலைக்காட்சிகள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளன.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, அந்த கருத்துக் கணிப்புகள் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக கூறுகின்றன.

கேரளாவை எடுத்துக் கொண்டால், ஆளும் இடதுசாரி அணி அங்கு ஆட்சியை தக்க வைக்கலாம் என்றும் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்தியாவில் தென் மாநிங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம், மேற்கு மாநிலத்தில் தேர்தல்கள் நடந்திருந்தாலும், தேசிய அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களின் பார்வை மேற்கு வங்க மாநிலத்தில் முடிவுகள் எப்படி அமையும் என்பதிலேயே உள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. முடிவுகளை அன்றைய தினமே அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஏபிபி - சி ஓட்டர் கருத்துக் கணிப்புகள், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 152 முதல் 164 இடங்கள்வரை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்ற அணி, 109 முதல் 121 இடங்கள் வரை பெறலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்புகள், பாரதிய ஜனதா கட்சிக்கு 128 முதல் 138 இடங்கள் கிடைக்கலாம் என்றும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 128 முதல் 148 இடங்கள் வரை பெறலாம் என்றும் கூறுகின்றன.

சிஎன்என் நியூஸ் 18 கருத்துக் கணிப்பு, மாநிலத்தில் 162 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் டிஎம்சி ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறுகிறது. எல்லா கருத்துக் கணிப்புகளும் இடதுசாரி - காங்கிரஸ் அணி அதிகபட்சமாக 25 இடங்களை பெறலாம் என கணித்துள்ளன.

ஆனால், இந்த கருத்துக் கணிப்புகளுக்கு விதிவிலக்காக ஜன் கி பாத் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு, பாரதிய ஜனதா கட்சி அணிக்கு மகிழ்ச்சி தரும் வகையில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 174 இடங்களில் பாஜக அணி வெல்லும் என்று கணித்திருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் 112 இடங்களில் வெல்லலாம் என்றும் அதன் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அசாமில் என்ன நிலை?

தேர்தல் 2021

பட மூலாதாரம், Getty Images

அசாம் மாநிலத்தைப் பொருத்தவரை, அனைத்து கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவே உள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் கருத்துக் கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 58 முதல் 71 இடங்களில் வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 53 முதல் 66 இடங்கள்வரை கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்புகள், ஆளும் பாஜகவுக்கு 75 முதல் 85 இடங்களும் காங்கிரஸுக்கு 40 முதல் 50 இடங்களும் கிடைக்கலாம் என கூறுகின்றன.

ரிபப்ளிக் டிவி - சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு, பாஜக அணிக்கு 74 முதல் 84 இடங்கள்வரை கிடைக்கலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்கள் வரை பெறலாம் என்றும் தெரிவிக்கிறது.

கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை தக்க வைக்கலாம என்பதுதான் தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு தொலைக்காட்சிகளின் கருத்துக் கணிப்புகளாக உள்ளது.

கேரள மாநிலத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றத்தை அந்த மாநில அரசியல் பல காலமாக பார்த்து வருகிறது. அந்த வழக்கத்தை மாற்றும் வகையில் இம்முறை தொடர்ந்து ஆட்சியில் தொடரும் வாய்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணி பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு, இடதுசாரி எல்டிஎஃப் கூட்டணி, 104 முதல் 120 இடங்களில் வெல்லலாம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 முதல் 36 இடங்களில் வெல்லலாம் என்றும் கூறுகிறது.

ரிபப்ளிக் டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு, எல்டிஎஃப் அணிக்கு 72 முதல் 80 இடங்களும் காங்கிரஸ் அணிக்கு 58 முதல் 64 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :