க்ரிப்டோ கரன்சி: கொரோனா நிதியாக இந்தியாவுக்கு வந்த ரூ.7,400 கோடி - பயன்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் பல நாடுகளும் இந்தியாவுக்கு தங்கள் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன. அவர்களோடு பல தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள்.
விடாலிக் புட்டரின் என்கிற 27 வயது ரஷ்யர், கடந்த மே 13ஆம் தேதி ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஷிபா இனு (Shiba Inu) க்ரிப்டோ கரன்சி நாணயத்தை, சந்தீப் நயில்வால் என்கிற க்ரிப்டோ தொழில்முனைவோரின் 'இந்தியா கோவிட் நிவாரண நிதி'-க்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இதுவரையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட கொரோனா நன்கொடைகளிலேயே மிகப் பெரியது இது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த விடாலிக் புட்டரின்?
இதரெம் (Ethereum) என்கிற உலக பிரபலமான க்ரிப்டோ கரன்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து க்ரிப்டோ துறையில் செயல்பட்டு வருகிறார். உலக அளவில் க்ரிப்டோ கரன்சிக்காக பிரபலமானவர்களில் இந்த 27 வயது பில்லியனரும் ஒருவர்.
ஷிபா இனு காயின் என்றால் என்ன?
க்ரிப்டோ கரன்சி உலகில் டாஜ் காயின் என்கிற கரன்சியைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த க்ரிப்டோவுக்கு போட்டியாக, ஒரு ஜப்பானிய நாயின் பெயரில் தொடங்கப்பட்ட க்ரிப்டோ கரன்சிதான் இந்த ஷிபா இனு காயின்.
இந்த ஷிபா இனு க்ரிப்டோ கரன்சி சில தினங்களுக்கு முன்புதான் வசிர்எக்ஸ் (Wazirx) என்கிற இந்தியாவின் மிகப் பெரிய க்ரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது சுமார் 0.0013 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
விடாலிக் புட்டரின் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஷிபா இனு காயின்களை நன்கொடையாகக் கொடுத்த பின், சுமார் 40 சதவீதம் அதன் மதிப்பு சரிந்திருக்கிறது என காயின்பேஸ் என்கிற க்ரிப்டோ கரன்சி வர்த்தக தளத்தில் காண முடிகிறது. எனவே இந்தியாவுக்கு முழுமையாக ஒரு பில்லியன் டாலரும் கிடைப்பது சிரமம்தான்.
ஆர்பிஐ கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
ஆர்பிஐ இதுநாள் வரை இந்தியாவில் க்ரிப்டோ கரன்சிக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை. க்ரிப்டோ கரன்சி திடீரென விலை அதிகரிப்பதையும், சடாலென விலை வீழ்வதையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு கருதி ஆர்பிஐ க்ரிப்டோ கரன்சிகளை அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு, இந்தியாவில் செயல்படும் வங்கிகள் க்ரிப்டோ கரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்தது ஆர்பிஐ. அதை எதிர்த்து க்ரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் சந்தைகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. தீர்ப்பு க்ரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்களுக்கு சாதகமாக வந்தது.
தற்போது இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் க்ரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதாகவும், அவர்கள் முதலீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் ஆர்பிஐ, வங்கிகளிடம் மறைமுகமாக க்ரிப்டோ கரன்சிகளோடு வணிகம் மேற்கொள்வதை குறைக்குமாறும், தவிர்க்குமாறும் அறிவுறுத்துவதாக இந்திய பொருளாதார பத்திரிகைகளில் செய்திகளைக் காண முடிகிறது.
இந்திய அரசின் புதிய சட்டம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு க்ரிப்டோ கரன்சியை தடை செய்வது தொடர்பாகவும், அதில் வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாகவும் ஒரு சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.
அப்புதிய சட்டத்தில் கிரிப்டோ கரன்சிகளை வைத்திருப்பது, வழங்குவது, வர்த்தகம் மேற்கொள்வது, மைன் செய்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் முதலீட்டாளர்களோ வளர்ந்து வரும் க்ரிப்டோ சந்தையை இந்தியா அத்தனை கடுமையாக கட்டுப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இந்தியா அனுமதிக்காது, அது இந்தியாவுக்கு பின்னடைவாகலாம்

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து பொருளாதார பேராசிரியர் மற்றும் பெங்களூரில் இருக்கும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் துணை வேந்தர் பானு மூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"பொதுவாக பணம் என்றாலே அது பரிமாற்றத்துக்கானது தான். நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பு வெகு சில நாட்களில் அதிக அளவில் மாற்றங்களைக் காண்பதில்லை. ஆனால் க்ரிப்டோ கரன்சி குறுகிய காலத்தில் மிக அதிகமான விலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
டாலர், யூரோ, தங்கம், கடன் பத்திரங்கள்... போன்ற முதலீடுகள் இந்தியாவுக்குள் வரும் போது அதை ஆர்பிஐ அல்லது மற்ற வங்கிகளிடம் கொடுத்து இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம். அதிக விலை மாற்றங்களைக் எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கக் கூடிய, இந்த ஷிபா இனு காயினை எந்த வங்கிகள் முன் வந்து வாங்கிக் கொள்ளும்?" என கேள்வி எழுப்புகிறார்.
மேலும் "இந்திய பொருளாதாரத்தின் நலன் மற்றும் நிலைத்தன்மையைக் கருதி இந்தியா இந்த ஷிபா இனு காயினை அனுமதிக்காது என நான் கருதுகிறேன். ஒருவேளை அனுமதித்தால் அது இந்திய பொருளாதாரத்துக்கு பின்னடைவாக அமையலாம்" என்றார்.
வங்கிகள் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இருக்கும் வங்கிகள் ஷிபா இனு க்ரிப்டொ கரன்சி காயினை பெற்றுக் கொள்ளுமா? என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"க்ரிப்டோ கரன்சியைப் பொருத்தவரை இதுவரை ஆர்பிஐ எந்த வித வழிமுறைகளையும் வழங்கவில்லை. ஆர்பிஐயின் வழிகாட்டுதலின்றி வங்கிகள் கிரிப்டோ கரன்சியை கையாள முடியாது.
சமீபத்தில் க்ரிப்டோ கரன்சிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும், ஆர்பிஐயிடமிருந்து க்ரிப்டோ கரன்சி தொடர்பாக எந்த ஒரு தெளிவான உத்தரவுகளும் வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால் க்ரிப்டோ கரன்ஸிகளை இந்திய வங்கிகள் பெற்றுக் கொள்வது சிரமமே" என்றார்.
ஒருவேளை அரசு இந்த ஷிபா இனு காயின் நன்கொடையை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் அது சாத்தியமா? எந்த நிறுவனம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரும்? என பல கேள்விகள் எழுகின்றன.
ஒரு க்ரிப்டோ கரன்சி கணக்கு இருந்தால் போதும்
விடாலிக் புட்டரின் வழங்கிய நன்கொடையை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், பணத்தை எடுத்துக் கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பினால், முடியும் என்கிறார் சென்னையில் உள்ள பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
"எல்லா க்ரிப்டோ கரன்சிகளை போலத் தான் இதுவும். எனவே முதலில் இந்திய அரசுக்கு என்று தனியாக ஒரு க்ரிப்டோ கரன்சி கணக்கு தொடங்கப்பட்டால், விடாலிக் நன்கொடையாகக் கொடுத்த க்ரிப்டோ காயின்கள் அக்கணக்குக்கு வந்துவிடும். அதன் பின், எப்போது ஷிபா இனு காயின்களை வாங்க ஆட்கள் கிடைக்கிறார்களோ அப்போதைய விலைக்கு விற்று இந்திய அரசு இந்திய ரூபாயாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்திய அரசு மனது வைக்க வேண்டும்" என எளிமையாக கூறினார்.
பிற செய்திகள்:
- 'தேவை உள்ள வரை காசாவை தாக்குவோம்' - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
- ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காக்குமா? கொரோனா சிகிச்சையில் இதன் பங்கு என்ன?
- '60 லட்சம் யூதர்களைக் கொன்ற' நாஜி அதிகாரியை இஸ்ரேல் உளவாளிகள் சிறைபிடித்த கதை
- வீகர் இன முஸ்லிம்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறதா சீன அரசு?
- காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் யார்? - சபாநாயகர் முன்னிலையில் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












