ஆர்பிஐ ஆளுநர் அறிவித்த ரூ. 50 ஆயிரம் கோடி சிறப்புக் கடன்கள் - 10 அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (மே 5, புதன்கிழமை) காலை பத்திரிகையாளர் சந்திப்பை ஒன்றை நடத்தினார். அதில் உலக பொருளாதாரம் தொடக்கி கடனாளிகளுக்கான சில சலுகைகள் வரை பல விஷயங்களைப் பேசினார். அதில் அவர் பேசிய முக்கிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.
1. உலக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வளர்ச்சி அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி நாடு முழுக்க, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சமமாக இல்லை. இப்போதைக்கு எதிர்காலம் நிலையற்றதாகவும் சரிவு ஏற்படுவதற்கான அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. முன்னேறிய பொருளாதாரங்கள் மற்றும் சில வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் 2021ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்பும், மற்ற பெரும்பாலான நாடுகளில் 2022-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்கிற கணிப்பில், 2021-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கலாமென சர்வதேச பன்னாட்டு நிதியம் தன் கணிப்பை அதிகரித்திருக்கிறது. இதே அமைப்பு கடந்த ஜனவரி 2021-ல் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கலாம் என கணித்திருந்தது நினைவுகூரத்தக்கது என்றார் சக்தி காந்த தாஸ்.
2. இந்தியாவில் 2020 - 21 கால கட்டத்தில் காணப்பட்ட அதிக அளவிலான உணவு உற்பத்தி மற்றும் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் உணவு தானியங்கள், இந்தியாவுக்கு உணவுப் பாதுகப்பை வழங்குவதோடு, மற்ற பொருளாதார துறைகளுக்கும் கிராமபுற தேவை, வேலைவாய்ப்பு, விவசாய உள்ளீடுகள், விநியோகம், ஏற்றுமதி என பல வழிகளில் ஆதரவு வழங்குகிறது என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.
3. நுகர்வுத் தேவை இந்திய பொருளாதாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நுகர்வுப் பொருட்களின் விற்பனை கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதே போல சராசரி (தினசரி) மின்சார உற்பத்தி, கடந்த ஏப்ரல் 2020-ஐ விட தற்போது 40 சதவீதம் கூடுதலாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
4. ஏப்ரல் 2021-ல் வாகன பதிவுகள் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தை விட கொஞ்சம் வளர்ச்சி கண்டிருக்கிறது. டிராக்டர் வாகனப் பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என கூறினார் ஆர்பிஐ ஆளுநர்.
5. பர்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் எனப்படும் பிஎம்ஐ குறியீடு, கடந்த ஏப்ரல் 2021-ல் 55.5 புள்ளிகளாக அதிகரித்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதம் இக்குறியீடு 55.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது என சுட்டிக் காட்டினார் சக்தி காந்த தாஸ்.
6. நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த மார்ச் 2021-ல் 5.5 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் இக்குறியீடு 5 சதவீதமாக இருந்தது, உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்த குறியீடு அதிகரித்திருக்கிறது என்றார் ஆர்பிஐ ஆளுநர்.
7. இந்தியாவில் கொரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கு தேவையான நிதி வசதிகளுக்காக 50,000 கோடி ரூபாய்க்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம் என சுகாதாரம் மற்றும் மருந்து நிறுவன துறைக்கு நல்ல செய்தி கூறியுள்ளார். இதனால் நிஃப்டி பார்மா சுமார் 3.75% ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
8. இத்திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், தடுப்பூசி மற்றும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சாதன விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், நோயியல் பரிசோதனைக் கூடங்கள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநொயோகஸ்தர்கள், கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா தொடர்பான மருந்து இறக்குமதியாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் போன்றோர்களுக்கு வங்கிகள் புதிதாக கடன் வழங்கலாம்.
9. தனி நபர்கள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் வாங்கி இருக்கும் மொத்த கடன் அளவு 25 கோடி ருபாய்க்குள் இருந்து, அவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த ஒரு கடன் மறுசீரமைப்புத் திட்டங்களையும் (06 ஆகஸ்ட் 2020 அன்று அறிவித்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் உட்பட) பயன்படுத்தாதவர்களாக இருந்து, 31 மார்ச் 2021 தேதி வரை முறையாக கடனுக்கான வட்டியைச் செலுத்தி 'ஸ்டாண்டர்ட்' கடனாக இருந்தால் அவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டம் 2.0-ல் பயன் பெறலாம்.
10. ஏற்கனவே கடன் மறுசீரமைப்புத் திட்டம் 1.0-வில் பலன் பெற்றவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் (Residual Tenor) அல்லது கடன் ஒத்திவைப்பு காலத்தை (Period of Moratorium), இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வங்கிகள் 2 ஆண்டு காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். மற்ற விதிமுறைகள் அப்படியே பொருந்தும் என கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்
- சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை - புதிய நெருக்கடி
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












