கொரோனா மரணங்கள் ஆகஸ்ட்டில் 10 லட்சம் ஆகுமா? - மோதியை வறுத்தெடுத்த மருத்துவ சஞ்சிகை லேன்செட்

நோயாளி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை கதி கலங்கச் செய்துகொண்டிருக்கிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்படுவதாகவும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் அரசு தரவுகளே கூறுகின்றன.

இந்தப் பேரிடரை இந்திய அரசு மிக மோசமாக கையாள்வதாக உலகெங்கிலும் உள்ள முன்னணி வெகுஜனப் பத்திரிகைகள் விமர்சிக்கின்றன.

இந்த வரிசையில் சர்வதேச அளவில் மரியாதையைப் பெற்ற மருத்துவ சஞ்சிகையான லேன்செட்டும் சேர்ந்துகொண்டுள்ளது.

நரேந்திர மோதி அரசு கொரோனா வைரசின் இரண்டாவது அலைக்கு எப்படி வழி வகுத்தது, எப்படி படுமோசமாக இதைக் கையாள்கிறது என்பது குறித்து லேன்செட் இதழ் தமது சமீபத்திய வெளியீட்டில் தலையங்கம் எழுதியுள்ளது.

அந்த தலையங்கத்தின் தமிழாக்கம்:

ஆக்சிஜன்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் நிலவும் துயரக் காட்சிகள் விவரிக்க முடியாதவை. மே 4ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீப நாள்களின் சுழற்சி சராசரி என்று பார்த்தால் தினமும் தோராயமாக 3.78 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. அந்த தேதிவரை 2.22 லட்சம் பேர் இந்த நோயால் இந்தியாவில் இறந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையெல்லாம் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டது என்கிறார்கள் வல்லுநர்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்துவிட்டனர். அவர்களும் தொற்றுக்கு இலக்காகிறார்கள். மருத்துவர்களும், மக்களும் ஆக்சிஜன், படுக்கை, உதவிகள் கேட்டு கையறு நிலையில் விடுக்கும் வேண்டுகோள்கள் சமூக ஊடகம் எங்கும் நிரம்பி வழிகின்றன.

ஆனால், இந்த இரண்டாவது அலை மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பு, இந்த பெருந்தொற்றை துரத்தியடிப்பதில் இந்தியா கடைசி கட்டத்தில் இருப்பதாகக் கூறினார் இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

இரண்டாவது அலை வரும், புதிய திரிபுகள் வரும் என்று திரும்பத் திரும்ப தரப்பட்ட எச்சரிக்கைகளை மீறி, கோவிட் -19 நோயை வென்றுவிட்டதாக ஒரு பிம்பத்தை அரசாங்கம் கட்டமைத்தது. பல மாதங்களாக தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் இந்தக் கருத்தை உருவாக்கியது அரசு.

நோயாளி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மந்தை நோயெதிர்ப்பு நிலையை எட்டிவிட்டதாக போலியாக ஒரு கருத்தை முன்வைத்த அறிவியல் மாதிரிகள் காரணமாக ஒரு அசட்டை நிலை ஏற்பட்டது; போதிய தயாரிப்புகள் செய்யப்படவில்லை.

(இந்த மந்தை நோயெதிர்ப்பு பற்றிய உண்மை நிலையை கண்டறிவதற்காக) ஜனவரி மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய சீரோ சர்வே கணக்கெடுப்பு, கோவிட் 19 நோய்க்கு எதிராக மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் உடலில்தான் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடிகள்) உற்பத்தியாகியிருப்பதாக கூறியது.

பல நேரங்களில் பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதைவிட டிவிட்டரில் முன் வைக்கப்படும் விமர்சனங்களை அகற்றுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகத் தோன்றுகிறது.

பெருமளவு தொற்று பரவ வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தபோதும், பல பத்து லட்சம் மக்கள் பங்கேற்ற மத நிகழ்வுகளை அரசாங்கம் அனுமதித்தது. அரசியல் கூட்டங்களும் அனுமதிக்கப்பட்டன. இந்த கூட்டங்களில் கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் சுத்தமாக காணப்படவில்லை. கோவிட் 19 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பதாக புரிந்துகொள்ளப்பட்டதால் தடுப்பூசி நடவடிக்கை தொடங்குவதும் தாமதமானது. மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்திய ஒன்றிய அளவில் இந்த தடுப்பூசி நடவடிக்கை விரைவில் சிக்கலில் மாட்டிக்கொண்டது. மாநிலங்களிடம் விவாதிக்காமலே தடுப்பூசிக் கொள்கையை மாற்றி, பாதையை மாற்றியது இந்திய அரசு.

18 வயதுக்கு மேலே உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதாக அறிவித்தது தடுப்பூசி சப்ளை முழுவதையும் உறிஞ்சியது. பெரிய அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. தடுப்பூசி டோஸ்களைப் பெறுவதற்கு சந்தையைத் திறந்துவிட்டு, மருத்துவமனை அமைப்புகளுக்கும், மாநிலங்களும் போட்டிபோடும் நிலையை உண்டாக்கியது இந்திய அரசு.

சிக்கல் எல்லாப் பகுதியிலும் ஒரே மாதிரியாக இல்லை. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற சில மாநிலங்கள் திடீரென உயர்ந்த தொற்று எண்ணிக்கையை சமாளிக்கத் தயார் நிலையில் இல்லை; மருத்துவ ஆக்சிஜன் விரைவில் தீர்ந்து போனது; மருத்துவமனையில் இடங்கள் இல்லை; இறந்தவர் உடல்களை எரியூட்ட இடங்கள் இல்லை. ஆக்சிஜனோ, மருத்துவமனையில் ஒரு படுக்கையோ வேண்டும் என்று கேட்பவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று சில மாநில அரசுகள் மிரட்டின. கேரளா, ஒடிஷா போன்ற வேறு சில மாநிலங்கள் நல்ல தயார் நிலையில் இருந்தன. இரண்டாவது அலைக்கு போதிய அளவுக்கு மருத்துவ ஆக்சிஜனை இந்த மாநிலங்கள் தயாரித்ததோடு அல்லாமல் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்தன.

தற்போது அரசாங்கம் இரு முனை உத்தியைக் கையாளவேண்டும். மோசமாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசித் திட்டத்தை முறைப்படுத்தி வேகப்படுத்தவேண்டும். உடனடியாக இரண்டு தடைகளைக் கடக்கவேண்டும். முதல் தடை தடுப்பூசி சப்ளை. இந்த சப்ளையை அதிகரிக்கவேண்டும். குறிப்பிட்ட அளவு தடுப்பூசி வெளிநாட்டில் இருந்து வரவேண்டும். அடுத்தபடியாக ஒரு தடுப்பூசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். அந்த திட்டம், நகரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதாக இல்லாமல், மக்கள் தொகையில் 65 சதவீதம் பேராக (80 கோடி மக்கள்) இருக்கும் கிராமப்புற மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் சென்று சேர உதவுவதாக இருக்கவேண்டும். ஏனெனில் இந்த மக்களுக்கு மோசமான பொது சுகாதார, ஆரம்ப சுகாதார வசதிப் பற்றாக்குறை நிலவுகிறது. சமூகங்களைப் பற்றி அறிந்த உள்ளூர் ஆரம்பர சுகாதார மையத்தோடு இணைந்து செயல்பட்டு, தடுப்பூசிக்கான சம வாய்ப்பு அளிக்கும் விநியோக முறையை அரசு உருவாக்கவேண்டும்.

இரண்டாவதாக, தடுப்பூசி செலுத்தப்படும்போதே கோவிட்-19 பரவலை முடிந்தவரை அரசு கட்டுப்படுத்தவேண்டும். தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், துல்லியமான தரவுகளை உரிய நேரத்தில் அரசு வெளியிடவேண்டும். இதன் மூலம் தெளிவாக என்ன நடக்கிறது என்பதை மக்களிடம் கூறி, பெருந்தொற்று வரைகோட்டை வளைக்க என்ன செய்யவேண்டும் என்று மக்களிடம் விவரிக்கவேண்டும். இந்திய ஒன்றியம் தழுவிய முடக்க நிலை வருவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கவேண்டும்.

விமர்சனத்தை முடக்கும் செயல் மன்னிக்க முடியாதது

புதிதாக வருகிற, வேகமாக பரவ வாய்ப்புள்ள கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க, புரிந்துகொள்ள, கட்டுப்படுத்த அவற்றின் 'ஜெனோம் சீக்வன்சிங்' எனப்படும் 'மரபணுத் தொகுப்பு வரிசைப்படுத்தல்' நடவடிக்கை விரிவாக்கப்படவேண்டும்.

நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. ஆனால், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், தாமே முன்வந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பரிசோதனை ஆகியவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியப் பணி இந்திய ஒன்றிய அரசுக்கு உள்ளது.

சிக்கலான நேரத்தில் விமர்சனம், வெளிப்படையான விவாதம் ஆகியவற்றை முடக்க முயலும் மோதியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை.

ஆகஸ்ட் வாக்கில் 10 லட்சம் மரணங்கள்

சுகாதார அளவைகள், மதிப்பீடுகள் கழகம் (The Institute for Health Metrics and Evaluation) தயாரித்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி ஆகஸ்ட் 1ம் தேதி வாக்கில் இந்தியாவில் 10 லட்சம் கொரோனா மரணங்கள் ஏற்பட்டிருக்கும். அப்படி நடந்துவிட்டால், தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ளும் ஒரு தேசியப் பேரழிவுக்கு தலைமை வகித்த பொறுப்பு மோதி அரசாங்கத்தையே சேரும். கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா ஆரம்பத்தில் அடைந்த வெற்றியை அந்நாடு நாசம் செய்துகொண்டது. அதன் விளைவு கண்முன்னே தெளிவாகத் தெரிகிறது.

சிதம்பரம் ட்வீட்

பட மூலாதாரம், Twitter/P Chidambaram

சிக்கல் தீவிரமடையும் இந்நேரத்தில் தனது எதிர்வினையை இந்தியா சீரமைக்கவேண்டும். அரசாங்கம் தமது தவறுகளை ஏற்றுக்கொள்வது, பொறுப்பான தலைமையை அளிப்பது, வெளிப்படைத்தன்மை, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொதுசுகாதார எதிர்வினை செய்வது ஆகியவற்றைப் பொறுத்தே அந்த முயற்சி வெற்றி பெறுவது இருக்கும்.

சிதம்பரம் எதிர்வினை

”லேன்செட்டில் வெளியான தலையங்கத்தை அடுத்து கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் அரசாங்கம் மக்களிடம் பொது மன்னிப்பு கோரவேண்டும். இந்திய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்,” என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :