கொரோனா இறப்புகள்: கணக்கில் வராத மரணத்தை கணக்கிடும் இந்திய செய்தியறை

மரணங்கள்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, இந்தியா செய்தியாளர்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, 4,205 ஆக பதிவாகியிருக்கிறது. ஆனால், இதுபோன்ற உயிரிழப்புகள், உண்மைக்கும் அறிக்கைக்கும் மாறுபாடாக உள்ளதா என்பதை கண்டறிந்து பதிவு செய்வதையே ஒரு நாளிதழ் தமது முதன்மையான பணியாக செய்து வருகிறது.

அந்த நாளிதழ் மற்றும் செய்தியாளர் குழு, கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வழங்குவது ஏன் என்பதை பிபிசி அராய்ந்தது.

அது.... ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் ஒரு முன்னணி நாளிதழ் ஆசிரியரின் மனைவி தனது மகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றார்.

வரிசையில் காத்திருந்த அவர்கள், உடல்கள் வைக்கப்பட்ட இரண்டு பைகள் அங்கிருப்பதை கவனித்தனர். கோவிட் -19 காரணமாக இந்த நோயாளிகள் இறந்து விட்டதாக குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள மருத்துவமனையின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தாயும் மகளும் வீடு திரும்பி, 'சந்தேஷ்' நாளிதழின் உள்ளூர் பதிப்பின் ஆசிரியரான ராஜேஷ் பாதக்கிடம் தாங்கள் பார்த்ததைச் சொன்னார்கள்.

இது பற்றி மேலும் விசாரிக்க முடிவு செய்த பாதக், ,அன்று மாலை தனது செய்தியாளர்களை அழைத்தார்.

"எல்லாவற்றிற்கும் மேலாக, காந்திநகரில் கோவிட் -19 இறப்புகள் எதுவும் அரசின் செய்தி அறிக்கையில் இல்லை" என்று அவர் கூறினார். கோவிட் -19 காரணமாக குஜராத்தில் ஒன்பது இறப்புகள் மட்டுமே அன்றைய தினம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டன.

அடுத்த நாள் செய்தியாளர்கள் குழு, ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, காந்தி நகர், ஜாம் நகர், பாவ்நகர் ஆகிய ஏழு நகரங்களில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை அழைக்கத் தொடங்கியது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

அப்போதிலிருந்து, 98 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் குஜராத்தி மொழி நாளிதழான 'சந்தேஷ்', இறந்தவர்களின் தினசரி எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது.

இது வழக்கமாக அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.

"மருத்துவமனைகளில் எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் உள்ளனர். எங்களுடைய செய்திகள் எதையும் அரசு மறுக்கவில்லை. ஆனாலும் நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதினோம்," என்று பாதக் கூறுகிறார்.

செய்தித்தாள்

பட மூலாதாரம், SANDESH

படக்குறிப்பு, ஒரேநாளில் 200-க்கும் அதிகமான உடல்கள் எரிக்கப்பட்டதாக சந்தேஷ் இதழ் கூறியுள்ளது

எனவே ஒவ்வொரு இடமாகச் நேரில் சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 11ஆம் தேதி மாலையில், இரண்டு செய்தியாளர்களும், ஒரு புகைப்படக்காரரும் ஆமதாபாதில் உள்ள 1,200 படுக்கைகள் கொண்ட அரசு நடத்தும் கோவிட் -19 மருத்துவமனையின் சவக்கிடங்கை அடைந்தனர்.

ஒரேயொரு வெளியேறும் வழி கொண்ட அந்த சவ கிடங்கு உள்ளே இருந்து 17 மணி நேரத்தில், 69 உடல்கள் வைக்கப்பட்ட பைகள் வெளியே கொண்டு வரப்பட்டு, காத்திருக்கும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்படுவதை அவர்கள் கணக்கிட்டனர். ஆனால் அடுத்த நாள் ஆமதாபாதில் 20 பேர் உட்பட மாநிலத்தில் மொத்தம் 55 பேர் மட்டுமே இறந்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு, பத்திரிகையாளர்கள் ஆமதாபாத்தைச் சுற்றி 150 கி.மீ (93 மைல்) தூரம் சென்று 21 இடுகாடுகளை பார்வையிட்டனர். அங்கு அவர்கள், சடலங்களின் பைகள் மற்றும் சிதைகளைக் கணக்கிட்டு, பதிவேடுகளை பரிசோதித்தனர். தகனத் தொழிலாளர்களிடம் பேசினர், மரணத்திற்கான காரணத்தைக் கூறும் "சீட்டுகளை" பார்த்தனர்.

புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தனர். உடல்கள் கடுமையான விதிமுறைகளின்படி கையாளப்பட்டாலும், பெரும்பாலான இறப்புகளுக்குக்காரணம் "நோய்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இரவு முடிவதற்குள் இந்தக்குழு 200 க்கும் மேற்பட்ட உடல்களை எண்ணியிருந்தது. ஆனால் அடுத்த நாள், ஆமதாபாதில் 25 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டதாக அரசின் அறிக்கைகள் தெரிவித்தன.

சந்தேஷின் துணிச்சலான செய்தியாளர்கள் விடாமுயற்சியுடன் ஏழு நகரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஏப்ரல் மாதம் முழுவதும் கணக்கிட்டுள்ளனர்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 21 அன்று, அவர்கள் 753 இறப்புகளைக் கணக்கிட்டனர். கொரோனாவின் கொடிய இரண்டாவது அலை இந்த மாநிலத்தில் பரவத்தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்புகள் இதுவாகும்.

பல நாட்களில், அவர்கள் 500 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கணக்கிட்டனர். மே 5 ஆம் தேதி, வதோதராவில் 83 பேர் இறந்திருப்பதாக இந்தக்குழு கண்டறிந்தது. ஆனால் அதிகாரபூர்வ எண்ணிக்கை 13 மட்டுமே.

இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்துக்கூறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள குஜராத் அரசு, மத்திய அரசின் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

corona

பட மூலாதாரம், HITESH RATHOD/SANDESH

படக்குறிப்பு, மருத்துவமனைக்கு வெளியே வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்

ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்படுவதை மற்ற நாளிதழ்களின் செய்திகள் உறுதிசெய்துள்ளன. உதாரணமாக, ஏப்ரல் 16 அன்று ஏழு நகரங்களில் 689 சடலங்கள் கோவிட் -19 நெறிமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்பட்டன அல்லது அடக்கம் செய்யப்பட்டன என்று ஆங்கில மொழி இந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

ஆனால் குஜராத் மாநிலத்தில் அன்றைய தினத்திற்கான அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை 94 ஆகும். கடந்த மாதம் மட்டும் குஜராத் மாநிலம், பத்தில் ஒரு பங்கு கோவிட் -19 இறப்புகளை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

தொற்றுநோய் நிலைமை காரணமாக இறுதிச்சடங்குகளிலிருந்து விலகி இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதால், செய்தித்தாள்கள் இரங்கல் செய்திகளால் நிரம்பியுள்ளன.

இறப்பு எண்ணிக்கை குறைத்துக்காட்டப்படுவதை சுட்டிக்காட்டுவதாக இந்த இரங்கல் செய்திகள் உள்ளன.

TWITTER

பட மூலாதாரம், TWITTER

மற்றொரு முன்னணி உள்ளூர் செய்தித்தாளான 'குஜராத் சமாச்சரில்' வெளியான செய்தியின்படி, சனிக்கிழமையன்று பருச் மாவட்டத்தில் ஒரு இடுகாட்டில் நடந்த இறுதிச் சடங்குகளின் எண்ணிக்கை, அதிகாரபூர்வ மரண புள்ளி விவரங்களுடன் பொருந்தவில்லை.

சமாச்சார்

பட மூலாதாரம், TWITTER

குஜராத் இதுவரை 680,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றுகளையும் 8,500 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பல இந்திய நகரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளது.

ஆனால் குஜராத்தில் இது மிக அதிகமாகவே நடந்திருப்பதுபோலத்தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக இந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் மாநில அரசை, உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. "உண்மையான நிலைமையை மறைப்பதன் மூலம் அரசுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே துல்லியமான தரவுகளை மறைப்பது, பொதுமக்கள் மத்தியில் பயம், நம்பிக்கையின்மை, பெரும் பீதி உள்ளிட்ட கடுமையான சிக்கல்களை உருவாக்கும்" என்று நீதிபதிகள் ஏப்ரல் மாதம் தெரிவித்தனர்.

நோயாளிக்கு ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகள் அல்லது இணை நோய்கள்தான், பெரும்பாலான கோவிட் -19 இறப்புகளுக்குக் காரணம் என்று பலர் நம்புகிறார்கள். கொரோனா வைரஸுக்கு சோதனை செய்யப்பட்டு பாஸிடிவ் என்று கண்டறியப்பட்டு, "வைரல் நிமோனியாவால்" ஏற்படும் இறப்புகள் மட்டுமே கோவிட் -19 இறப்புகளாக கணக்கிடப்படுகிறது என்று தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இதேவேளை, "ஒவ்வொரு மரணமும் ஒரு மரண தணிக்கைக் குழுவால் விசாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது," என்று முதலமைச்சர் விஜய் ரூபானி குறிப்பிட்டுள்ளார்.

சவ கிடங்குகளில் அல்லது இடுகாடுகளில் உடல்களை எண்ணுவதும், அன்றைய அதிகாரபூர்வ புள்ளி விவரங்களுடன் அவற்றை ஒப்பிடுவதும், கால இடைவெளி காரணமாக துல்லியமாக இருக்காது என்று இந்தியாவின் 'மில்லியன் இறப்பு ஆய்வுக்கு' தலைமை தாங்கிய டொரான்டோ பல்கலைக்கழகத்தின் பிரபாத் ஜா தெரிவிக்கிறார்.

இறப்புகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மறு ஆய்வு செய்த பின்னர் இங்கிலாந்து போன்ற நாடுகள் , கொரோனா வைரஸின் அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளன. உலகளவில் கோவிட் -19 இறப்புகள், 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைவாகவே பதிவாகியுள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம், Reuters

" தொற்றுநோய் காலத்தில் தகவல்கள் பெறுதல் மற்றும் பதிவு மிக அதிகமாக இருக்கிறது. ஆகவே அதிகாரிகள் பெரும்பாலும் [எண்களை] புதுப்பிக்க நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக அவர்கள் அதை புதுப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து இறப்புகளையும் பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் இடுகாடுகளில் உடல் பைகளை எண்ணுவது ,அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு சிறந்த வழியாகும் ," என்று டாக்டர் ஜா கூறுகிறார்.

பத்திரிகையாளர்களைப் பொருத்தவரை இது ஒரு வேதனையான அனுபவமாக இருந்தது.

சந்தேஷ் நாளிதழ் புகைப்பட செய்தியாளர் ஹிதேஷ் ராத்தோர், உடல்களை எண்ணும் துன்பகரமான அனுபவத்தை விவரித்தார்.

"மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் பைகளாக வெளியே வருகிறார்கள்," என்று அவர் கூறினார்.

மயானத்தில் இறுத்திச்சடங்குகளுக்காக ஆறு மணிநேர நீள வரிசையை அவர் கண்டார். 2016 ஆம் ஆண்டில், மோதியின் சர்ச்சைக்குரிய "உயர் மதிப்பு நாணய மதிப்பிழப்பு " நடவடிக்கைக்குப்பிறகு வங்கிகளுக்கு வெளியே காணப்பட்ட மக்களின் நீண்ட வரிசைகளை இது தனக்கு நினைவூட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மருத்துவமனைகள், சவக்கிடங்குகள் மற்றும் இடுகாடுகளுக்கு வெளியே அதேபோன்ற வரிசைகளைக் கண்டேன். இந்த முறை உயிருடன் இருக்க போராடும் மக்களின் வரிசைகளும் இறந்தவர்களின் வரிசைகளும் இருக்கின்றன," என்று அவர் கூறினார்.

மருத்துவமனையின் ஒலிபெருக்கி, தங்கள் தந்தையின் மரணத்தை அறிவித்தபோது, மூன்று இளம் வயதினர் எழுப்பிய ஓலங்களால் தான் அதிர்ச்சியில் உறைந்துபோனதாக சந்தேஷின் செய்தியாள்ர்களில் ஒருவரான ரோனக் ஷா தெரிவிக்கிறார்.

"தங்கள் தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்வதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் ஏழு மணி நேரம் கழித்து தங்கள் தந்தையின் சடலத்துடன் திரும்பினர்" என்று ஷா கூறுகிறார்.

செய்தியாளர் குழுவை இடுகாட்டிற்கு அழைத்துச் சென்ற தீபக் மஷ்லா, "பயந்து நடுநடுங்கி" வீடு திரும்பியதாகச்சொன்னார்.

"பெற்றோர்கள் தங்கள் இறந்த குழந்தைகளின் உடல் பைகளுடன் வருவதையும், இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு, 'தயவுசெய்து என் குழந்தையை எடுத்துச் சென்று எரித்துவிடுங்கள் என்று சொல்வதையும் நான் கண்டேன். சடலத்தைத் தொடக் கூட அவர்கள் மிகவும் பயந்தார்கள்."என்று அவர் தெரிவித்தார்.

தானும் தனது குழுவினரும் ஒரு மருத்துவமனையில் மட்டுமே சடலங்களை கணக்கிட்டதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 'மரண எண்ணிக்கை குறைவாக பதிவுசெய்யப்படுவது' மிக அதிகமாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று குழுவின் மற்றொரு செய்தியாளர் இம்தியாஸ் உஜ்ஜைன்வாலா நம்புகிறார். அகமதாபாத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 171 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. "யாருமே அங்கு கணக்கெடுப்பதில்லை" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :