எம்.பி பதவி: தாரைவார்த்த அ.தி.மு.க; தி.மு.கவுக்கு ஜாக்பாட் - யாருக்கு வாய்ப்பு?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளதால், விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் தி.மு.கவே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர்கள் யார்.. யார்?
எம்.பி பதவியா.. எம்.எல்.ஏவா?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி.முனுசாமியும் ஆர்.வைத்திலிங்கமும் களமிறங்கினர்.
இருவரும் முறையே வேப்பனஹள்ளி, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் இருவருமே வெற்றி பெற்றனர். இதையடுத்து, `முனுசாமியும் வைத்தியும் எம்.பி பதவியை ராஜினாமா செய்வார்களா அல்லது எம்.எல்.ஏ பதவியை இழப்பார்களா?' என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் முடிவடைய ஒரு வருடமும் முனுசாமியின் பதவிக்காலம் நிறைவடைய 5 வருடங்களும் இருந்தன.
ஆனால், இருவருமே தங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இது தவிர, அ.தி.மு.கவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்துவிட்டார். இவருக்கு நான்காண்டுகள் பதவிக்காலம் இருந்தது. இதையடுத்து, மூன்று மாநிலங்களவை இடங்களும் காலியாக உள்ளன. `தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க பெரும்பான்மையான இடங்களைப் பெற்றிருப்பதால், இந்த 3 தொகுதிகளிலும் தி.மு.கவே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன,' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?

பட மூலாதாரம், DMK
மேலும், தி.மு.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் ராஜ்யசபா இடங்களைக் கேட்கத் தொடங்கி விட்டனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், `` மூன்று தொகுதிகளிலும் ஓர் ஆண்டு, 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என்ற அளவில் பதவிக்காலங்கள் உள்ளன. இதில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற இரண்டு தொகுதிகளை தி.மு.க எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
`ஆறு ஆண்டுகள் என்ற ரெகுலர் முறையில் ராஜ்யசபா தொகுதியை ஒதுக்க வேண்டும்' என காங்கிரஸ் கோரினால், இந்த 3 தொகுதிகளையும் தி.மு.கவே எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``தி.மு.க சார்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜ்யசபா பந்தயத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் இருக்கிறார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே சுப்புலட்சுமி தோல்வியுற்றார். இதையடுத்து, அவருக்கு ராஜ்யசபா கொடுக்கப்படலாம் என்ற விவாதமும் நடந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் ராஜ்ய சபா இடங்களை இலக்காக வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். அதேபோல், கோவை மாவட்டத்துக்குப் பிரநிதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அங்குள்ள நிர்வாகிகளில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் பேச்சு அடிபடுகிறது. தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை," என்கிறார்.
ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி

பட மூலாதாரம், M K STALIN
`தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுமா?' என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இதுவரையில் தி.மு.கவிடம் எதுவும் பேசப்படவில்லை. எங்களுக்கு ஓர் இடத்தை கொடுப்பதாக அவர்கள் ஏற்கெனவே உறுதி கொடுத்துள்ளனர். `சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கொடுக்கிறோம்' எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டால் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது தொடர்பாகவும் குழப்பங்கள் நிலவுகின்றன," என்கின்றனர்.
தொடர்ந்து பேசுகையில், `` கட்சியில் திறமையுள்ள புதியவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தவிர, இந்த 3 இடங்களும் முழுமையான பதவிக்காலங்கள் அல்ல. 5 வருடம், 1 வருடம் என்ற கால அளவிலேயே உள்ளன. எங்களுக்கு 6 வருடங்களை நிறைவு செய்யக் கூடிய இடம்தான் தேவை. அது எப்போது கொடுக்கப்படும் எனத் தெரியவில்லை. இப்போதுள்ள தொகுதிகளில் எதாவது ஒன்றை தி.மு.க தலைமை கொடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன" என்கின்றனர்.
தி.மு.கவுக்கு தாரைவார்த்த அ.தி.மு.க

பட மூலாதாரம், ADMK
`மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க சார்பாக யாரெல்லாம் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன?' என அக்கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநில செயலாளரான பொள்ளாச்சி உமாபதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``மாநிலங்களவையை பொறுத்தவரையில் தேர்தல் அரசியலில் போட்டியிட முடியாத மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். சாதி அரசியல், பணம் ஆகிய பின்புலம் இல்லாத கொள்கைவாதிகளுக்கு வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. இந்தமுறை கொங்கு மண்டலத்தில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பதவி வழங்கப்படுமா என்பது தலைமையின் கைகளில் உள்ளது. மாநிலங்களவைக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்து அறிவிக்கும்," என்கிறார்.
ராஜ்ய சபா இடங்களை அ.தி.மு.க இழப்பது குறித்து ராதாபுரம் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு ராஜ்ய சபா இடத்துக்கு வைத்திலிங்கம் தேர்வானார். அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டு காலம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் முகமது ஜான், ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் இறந்து விட்டாலும் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளன. இதன் பிறகு ஓராண்டுக்கு முன்னர் கே.பி.முனுசாமி தேர்வானார். இவர்கள் மூவருமே ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, தனித்தனியாக நடத்தப்பட வேண்டிய மாநிலங்களவைத் தேர்தல் இது" என்கிறார்.
வைத்தி, முனுசாமி ராஜினாமா ஏன்?
`இதனை தேர்தல் ஆணையம் எவ்வாறு கணக்கிடுகிறது?' என்றோம். `` தற்போது அ.தி.மு.க கூட்டணியில் 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க கூட்டணியில் 159 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். எம்.எல்.ஏக்களில் பெரும்பகுதியினர் தி.மு.க பக்கம் இருப்பதால் ஒவ்வொரு ராஜ்ய சபா இடத்திலும் பெரும்பான்மை என்ற அடிப்படையில் தி.மு.கவே வெற்றி பெறும். வைத்திலிங்கத்துக்கான இடத்துக்கு தேர்வு செய்யப்படுகிறவர் யாராக இருந்தாலும் ஓராண்டுதான் பதவி வகிக்க முடியும்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆறு ராஜ்ய சபா இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களை விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கும்போது 4 இடங்கள் தி.மு.கவுக்கும் 2 இடங்கள் அ.தி.மு.கவுக்கும் கிடைக்கும். தற்போது நடக்க உள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் மூன்று இடங்கள் காலியாக இருந்தாலும் வேறு வேறு பிரிவுகளில் காலியாகிறது. இதில் அதிக இடங்களைக் கொண்டுள்ள கட்சியின் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பதால் மூன்று இடங்களும் தி.மு.க பக்கம் செல்லும்" என்கிறார்.
`கே.பி.முனுசாமிக்கு ஐந்தாண்டுகள் பதவிக் காலம் உள்ளது. இந்த இடத்தை இழப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?' என்றோம். `` வைத்திலிங்கமும் கே.பி.முனுசாமியும் தவிர்க்க முடியாத தலைவர்கள். இவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதால் வைத்திலிங்கத்துக்கு ஜெயலலிதா ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதேபோல், சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கே.பி.முனுசாமியால் வெல்ல முடியவில்லை. இவர்கள் இருவருமே கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். தற்போது சட்டமன்றத்தில் தி.மு.க வலுவாக அமர்ந்திருப்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாநில அரசியலில் பங்கெடுப்பதே நல்லது என இருவரும் முடிவு செய்தனர்" என்கிறார்.
பிற செய்திகள் :
- திருப்பதியில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 11 கொரோனா நோயாளிகள்
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜெருசலேம் தாக்குதலுக்கு பதிலடி; அல்-அக்சா மசூதியில் வன்முறை
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - கவலை தரும் தொற்று தரவுகள்
- கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்: தற்காப்பது எப்படி?
- பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் ஒதுங்கிய சடலங்கள்
- கும்பமேளா திருவிழா கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டரா? பதற வைக்கும் களத்தகவல்
- 'இந்திய கொரோனா திரிபு சர்வதேச கவலைக்குரியது' - தடுப்பூசி, மருந்துகள் வேலை செய்யுமா?
- ரஷ்ய பள்ளி துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், ஆசிரியர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












