திருப்பதியில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 11 கொரோனா நோயாளிகள் - ஜெகன் மோகன் ரெட்டி விசாரணைக்கு உத்தரவு

பட மூலாதாரம், FACEBOOK/DISTRICTCOLLECTORCHITTORE
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செயற்கை ஆக்சிஜன் பற்றாக்குறையால் திங்கட்கிழமை குறைந்தது 11 கோவிட்-19 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதியில் உள்ள எஸ்வி ரூயா மருத்துவமனையில் இது நிகழ்ந்துள்ளது. பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு, தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கெனவே வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர்கள் திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் 8.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவை அனைத்தும் ஐந்து நிமிட நேரத்தில் நடந்து முடித்து விட்டதாக நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்தக் கூற்றுக்கு மாறாக, சுமார் 30 நிமிட நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியதாகவும், சென்னையிலிருந்து டேங்கர் மூலம் கொண்டு வரப்படும் செயற்கை ஆக்சிஜன் வந்தடைவது நேற்று தாமதமானதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், ugc
ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க வந்த டேங்கர் வந்து சேருவதற்குள்ளாகவே இந்த பதினோரு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் சுமார் 150 கோவிட் நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வரும் கோவிட் நோயாளிகளின் உறவினர்கள் நேற்றிரவு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
அலுவல்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் நிலைமையை உடனே சீர் செய்யுமாறும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












