சபாநாயகர் ஆகிறார் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு: பின்னணி என்ன?

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட உள்ளார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி முன்னிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் இவர்கள் இருவரும் தொடர்புடைய பதவிகளுக்குப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்வில் அப்பாவு இடம்பெற்றது எப்படி?
சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியமைத்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
புதிய சபாநாயகர் யார்?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்வானது, மே 11 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும். தமிழ்நாடு சட்டப்பேரவையின் "பேரவை தலைவர்" மற்றும் "பேரவை துணைத் தலைவர்" பதவிகளுக்கான தேர்தல், மே 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, சட்டப்பேரவையின் முக்கிய பொறுப்புகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு, புதிய சபாநாயகர் தேர்வு, துணை சபாநாயகர் தேர்வு ஆகியவை நடைபெற உள்ளன.
இதையடுத்து, `புதிய சபாநாயகர் யார்?' என்ற கேள்வி தி.மு.க வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.
இது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரை சபாநாயகராக்குவது என ஸ்டாலின் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால், அவர் பா.ஜ.க வேட்பாளரிடம் 281 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வியை தழுவினார். இதன் பின்னர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனும், அ.தி.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் தோல்வியை தழுவினார்.
நெல்லைக்கு முக்கியத்துவம்
இதன் தொடர்ச்சியாக புதிய அமைச்சரவையிலும் திருநெல்வேலி மாவட்டத்துக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. பாளையங்கோட்டையில் வெற்றி பெற்ற அப்துல் வகாபும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்நிலையில், சட்டசபையில் நீண்ட அனுபவம் உள்ளவரான அப்பாவுவை முன்னிறுத்துவது என தி.மு.க தலைமை முடிவு செய்தது," என்கின்றனர்.
தொடர்ந்து பேசுகையில், ``கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் அப்பாவு தோற்றுப் போனதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. `அந்தத் தேர்தலில் அப்பாவுதான் வெற்றி பெற்றார்' என தி.மு.க தலைமை நம்புகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வெளியே அவர் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.
சட்டப்பேரவையில் அப்பாவு

தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் அப்பாவு இடம்பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன," என்றனர்.
மேலும், `` தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளாராக 1996 தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு, அதன்பின்னர் 2001 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தி.மு.கவில் இணைந்தவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2011 தேர்தலில் ராதாபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க விட்டுக் கொடுத்தது. இதன் பின்னர், 2016 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
த.மா.காவில் இருந்து வந்தாலும் திராவிட கொள்கைகளில் உறுதியான பிடிப்புள்ளவராக அப்பாவு பார்க்கப்படுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடியவர். அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார். சட்டசபையிலும் நீண்ட அனுபவம் உள்ளவராகப் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாகவே, சபாநாயகர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட உள்ளார்" என்கின்றனர்.
அப்பாவுவுக்கு முக்கியத்துவம் ஏன்?
இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அப்பாவுவைச் சந்தித்துப் பேசினார். நாளை நண்பகல் 12 மணிக்குள் சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுவை அப்பாவு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``கடந்த ஆட்சிக்காலம் போல ஒருதலைப்பட்சமாக சபையை நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை. சட்டசபையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவராகவும் தமிழக முன்னேற்றத்தை மையமாக வைத்து சட்டப்பேரவையை வழிநடத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும் எனத் தலைவர் விரும்புகிறார்," என்கிறார்.
பிற செய்திகள்
- தலைமைச் செயலாளர் இறையன்பு: முதல்வரின் செயலாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












