இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - கவலை தரும் தொற்று தரவுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷதாப் நஷ்மி
- பதவி, பிபிசி விஸ்ஜோ அணி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கைகள் பதிவாகின. நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
இது அரசின் தரவுகள்தான். இருப்பினும் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டாலோ அல்லது இறப்புகள் விடுப்படாமல் கணக்கிடப்பட்டாலோ இந்த எண்ணிக்கை ஐந்திலிருந்து ஆறு மடங்கு அதிகரிக்கக்கூடும்.
முதலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களின் நிலை குறித்து பார்ப்போம். பின் எவ்வாறு தொற்று பரவல் வடக்கிலிருந்து வட கிழக்கு மாநிலங்களுக்கும் பரவியுள்ளது என்பதை பார்ப்போம்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் 58% தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மிக வேகமாக அங்கு புதிய தொற்றுகள் உருவாகி வருகின்றன.
புதிய தொற்றுகள் மட்டுமல்ல இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. மே மாதம் 8ஆம் தேதி வரை முந்தைய வாரத்தைக் காட்டிலும் இறப்புகள் 30% அதிகரித்து வந்தது. இது மே மாதம் மேலும் அதிகரித்துள்ளது.
அம்மாநிலத்தின் சம்பாவட், டேராடூன் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஹரித்வாரில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 120% தொற்றுகள் அதிகரித்துள்ளன.

இந்த வரைபடம் மகாராஷ்டிராவை தவிர ஏப்ரல் மாதம் பிற மாநிலங்களில் எவ்வாறு தொற்று ஒரே மாதிரியாக அதிகரித்தது என்பதை காட்டுகிறது. மார்ச் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது.
அதன்பிறகு கடுமையான ஊரடங்கால் தொற்று எண்ணிக்கை குறைந்தது. இருப்பினும் உத்தரகாண்டில் அதே சமயங்களில் கும்பமேளா நடைபெற்று கொண்டிருந்தது. புனித நதி என கருதப்படும் கங்காவில் நீராட ஆயிரக்கணகானோர் ஹரித்வாரில் குவிந்தனர்.
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை குறைந்தது என தரவுகள் சொல்கின்றன. அதேபோல புதிய தொற்று உருவாகும் விகிதமும் குறைந்தது.
உத்தரகாண்ட்டை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து அங்கு ஏற்படும் இறப்புகள் 117% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் 30% அதிகரிக்கிறது. அதே தொடர்ந்து நீடிக்கிறது. தற்போதைய சூழலில் ஜார்க்கண்ட் மற்றும் கோவாவில் மட்டும்தான் உத்தரகாண்டை காட்டிலும் அதிக இறப்புகள் பதிவாகின்றன.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்டை பொறுத்தவரை தற்போது புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. ஆனால் அங்கு ஏற்படும் இறப்புகள் கவலை கொள்ளும் அளவில் உள்ளன.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ஜார்க்கண்டில் வெறும் 1114 இறப்புகளே ஏற்பட்டிருந்தன. ஆனால் ஒரே மாதத்தில் அங்கு 3800 இறப்புகள் ஏற்பட்டன. அதாவது 246% அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்டில் தற்போது நாள் ஒன்றுக்கு 90 பேர் உயிரிழக்கின்றனர். ஏப்ரல் மாத இறுதியில் அங்கு ஏற்படும் இறப்புகள் 45% அளவு அதிகரித்துள்ளது. மே மாதம் அது குறைந்தது. ஆனால் நாட்டிலேயே இறப்புகள் அதிகமாக உள்ள மாநிலமாக உள்ளது.

கோவா
ஏப்ரல் மாதம், மேற்கு மாநிலங்களில் கவலை தரும் விதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கோவாவில் மட்டும்தான் வாரத்திற்கு 5%க்கும் குறைவான தொற்றுகள் அதிகரிப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் நுழைவதற்கான தடை இல்லாததால் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டே வாரத்தில் கடற்கரை நகரான கோவாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது.

கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் இறப்பு விகிதம் 11 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களின் நிலை
ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் தொற்றுகளும் இறப்புகளும் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் வாரந்தோறும் வெறும் 3% அளவில்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அது தற்போது 3%ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் வாரந்தோறும் 24% அளவுக்கு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இது ஏப்ரல் 8ஆம் தேதியன்று 5%ஆக இருந்தது. தொற்று குறைவது போன்ற எந்த அறிகுறியும் இந்த இரு மாநிலங்களில் தெரியவில்லை.

கடந்த முதல் அலையின்போது கிட்டத்தட்ட எந்த பாதிப்பும் ஏற்படாத வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தொற்றும் இறப்பும் அதிகரித்து வருகிறது. மிசோரமில் தற்போது 18% அளவில் தொற்றுகள் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் அது வெறும் 1 சதவீதமாக இருந்தது. மிசோரமில் மட்டுமல்ல மேகாலயா, அசாம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுராவிலும் தொடர்ந்து தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்த மாநிலங்களில் தொற்று குறைவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












