கொரோனா நோயாளிகளுக்கு குடும்பத்தினரே சிகிச்சை தரும் அவலம்

பட மூலாதாரம், BBC/Getty Images
- எழுதியவர், பூஜா சாப்ரியா
- பதவி, பிபிசி உலக சேவை
ஜிநே்தர்... வடகிழக்கு டெல்லியில் இருக்கும் எரியூட்டும் மயானத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி மற்றும் இரு மகன்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள்.
"இன்று ஒரே நாளில் ஒன்றாக 103 சடலங்களை எரியூட்டினோம், அதில் 43 சடலங்களை வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து எரியூட்டியுள்ளோம்" என அவர் பிபிசியிடம் தொலைபேசியில் கூறினார்.
"அரசின் அதிகாரபூர்வமான இறப்புக் கணக்குகள், இப்படி வீட்டில் இறப்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதில் பலருக்கும் இறந்த பிறகு தான் கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைக்கின்றன"
இந்தியாவில் மொத்தம் 2.22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்து இருகிறார்கள். உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு அதிகளவில் கொரோனா மரணங்களை எதிர்கொண்டிருக்கும் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைத்து பதிவு செய்யப்படுவதாகவும் ஏகப்பட்ட ஆதாரங்கள் குவிந்து வருகின்றன.
லாப நோக்கற்ற மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு அமைப்பின் தலைவராக இருக்கிறார் ஜிதேந்தர். இந்த அமைப்பு யாரும் உரிமை கோராத சடலங்களையும், விபத்தில் இறந்த உடல்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை எரியூட்ட கவலர்களுக்கு உதவி வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பிரச்னை தொடங்கியதிலிருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களையும் இறுதிச் சடங்குகள் செய்ய 18 தன்னார்வலர்கள் கொண்ட ஜிதேந்தரின் அணி உதவிக் கொண்டிருக்கிறது.
"கொரோனா வைரஸின் முதல் அலையின் போது 976 சடலங்களை எரியூட்ட நாங்கள் உதவினோம். ஆனால் இப்போது இந்த இரண்டாம் அலை தொடங்கிய 15 நாட்களுக்குள் அந்த எண்ணிக்கையைக் கடந்துவிடோம்." என்கிறார் ஜிதேந்தர்.

பட மூலாதாரம், Getty Images
"முன்பு பெரும்பாலும் வயதானவர்கள் தான் கொரோனாவால் இறந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பல இளைஞர்கள் உயிரிழந்து வருகிறார்கள். அது தான் பார்க்க கவலையாக இருக்கிறது"
வீட்டில் இறப்பவர்களின் நிலை
ஜிதேந்தருக்கு தினம்தோறும் உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் நூற்றுக் கணக்கான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
"இன்று மதியம் எனக்கு கனடா நாட்டில் இருக்கும் டொரன்டோவில் இருந்து முன் பின் தெரியாத ஒருவர் என்னை அழைத்தார். நேற்று முதல் வீட்டில் இறந்து கிடக்கும் தன் இளைய சகோதரரை எரியூட்ட உதவி கேட்டார்," என நினைவுகூர்கிறார்.
"அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 80 வயதுக்கு மேலான பார்வை திறன் குறைபாடுள்ள அவரது தந்தையாரும் அதே வீட்டில் தான் இருக்கிறார்"
வீட்டுக்கு வர முடியாத சகோதரரிடமிருந்து, ஒரு தொலைத் தொடர்பு செயலி மூலம் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுக் கொண்டு, இறந்தவரின் சடலத்தை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியது ஜிதேந்தரின் அணி.
"இப்படி இளம் வயதினர் இறந்து கிடப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனை நிறைந்தது, அவர்களின் குடும்பத்தினர் அதை சமாளிக்க போராடுகிறார்கள். நான் உள்ளுக்குள்ளேயே கண்ணீர் விடுகிறேன்"
சுகாதார அமைப்பு திணறும் போது, பல குடும்பங்களுக்கு அவர்களின் வேதனை கோபமாக மாறுகிறது.
'பொதுமக்களூக்கு இறப்பது தவிர வேறு வழி இல்லை'
மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் உத்திரப் பிரதேசமும் ஒன்று. அம்மாநிலத்தில் ஜான்பூர் மவட்டத்தைச் சேர்ந்த சுசில் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் தாயாரை இழந்துவிட்டார்.
அவரது மனைவி, மகன் உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார்கள். ஆனால் அவரது தாயார் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த வித உடல் நல முன்னேற்றமுமின்றி காலமாகிவிட்டார்.
"அவரின் (சுசிலின் தாயார்) ஆக்சிஜன் அளவு குறைந்தது. நான் மருத்துவமனையில் ஒரு படுக்கை அல்லது வீட்டிலேயே அவரை கவனித்துக் கொள்ள ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்காக மூன்று நாட்கள் அலைந்தேன்" என்கிறார் சுசில்.
"மருத்துவ உதவியைக் கேட்டு நான் வெளியே சென்று உதவி கேட்கும் நான்காவது நாள் இது, ஆனால் அவர் வீட்டிலேயே இறந்துவிட்டார்" என்கிறார்.
நாடு முழுக்க மக்கள் மருத்துவமனையில் படுக்கை வசதிக்காக காத்திருந்து இறந்து போகிறார்கள். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் குறைவாக இருப்பதால், அவர்களும் சூழலை சமாளிக்க கடுமையாக போராடுகிறார்கள்.
எப்படியோ அடித்துப் பிடித்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை ஏற்பாடு செய்துவிட்டார் சுசில். ஆனால் அது மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் கைகொடுக்காது, அதற்கென சில வரம்புகள் இருக்கின்றன என்கிறார். வீட்டிலேயே ஆக்சிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவும் ஒரு கருவி தான் இந்த ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர். தற்போது இந்த கருவி இந்தியாவின் மிக முக்கிய மருத்துவ சாதனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
"இந்த அமைப்பினால் தான் நான் என் தாயை இழந்தேன்" என கண்ணீரோடு கூறுகிறார் சுஷில்.
"எல்லா அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறுகிறார்கள். யாரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயாளிக்கு ஒரு படுக்கையை ஒதுக்கீடு செய்யும் ஒரு மத்திய அமைப்பு இல்லை என்கிறார் சுசில்.
வீட்டுக்கு ஆக்சிஜன் பெறுவதில் சிக்கல்
மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் சில குடும்பங்கள் தாங்களாகவே எதையாவது செய்ய வேண்டியிருக்கிறது.
நந்தினி குமாருக்கு தந்தையை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
"அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. படுத்த படுக்கையாகவே இருக்கிறார். அவரை வீட்டிலேயே வைத்திருப்பதா, இல்லை மருத்துவமனையில் ஒரு படுக்கையை ஆக்கிரமித்துக் கொள்வதா என்ற இரு கடினமான முடிவுகளில் வீட்டிலேயே வைத்திருப்பது என்ற முடிவைத் தேர்வு செய்தேன்" என்றார் அவர்.
"மிக விரைவிலேயே வீட்டுக்கு ஆக்சிஜனைக் கொண்டு வருவது மிகக் கடினம் என்பது புரிந்துவிட்டது"
தந்தைக்கு மூச்சுவிட அதிகச் சிரமம் ஏற்பட்டதால் அறிமுகம் இல்லாதவர்களுடனெல்லாம் பேசி ஒரு சிலிண்டரை எப்படியோ வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
"ஒரு சிலிண்டர் கிடைத்துவிட்டதால் இப்போதைக்குப் பிரச்னையில்லை என்று நினைத்தோம். ஆனால் ஒரு சிலிண்டர் 8 மணி நேரத்தில் காலியாகிவிட்டது. ஒரே நாளில் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. நானொன்றும் மருத்துவர் இல்லையே"
ஒரு சிலிண்டரை வைத்துக் கொண்டு இன்னொரு சிலிண்டரை பெறுவதற்கு அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் அது மிகவும் தாமதம். அவரது தந்தை இறந்துவிட்டார்.
"வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"
"கொரோனா வைரஸ் எங்கள் குடும்பத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இப்போது எனக்கும் எனது தாயாருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது."
"எனது குடும்பத்துக்கும் இதே கதி ஏற்படலாம்"
உடல்நிலை பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தங்களுக்குத் தெரிந்த தெரியா அனைவரிமும் உதவி கேட்டு அலைகிறார்கள். கள்ளச் சந்தையில் மருத்துவப் பொருள்களுக்கு ஏராளமான பணத்தைக் கொடுக்கிறார்கள். அவசரச் சிகிச்சைப் பிரிவில் இடம் பெறுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இது எதுவும் கிடைக்கும் என்று உறுதியில்லை
விஞ்ஞானிகள் அறிவுறுத்தியும் அலட்சியமாக இருந்துவிட்டதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுவதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
ஆக்சிஜன் இருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கடந்த 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் பிரிட்டன் பிபிசி ரேடியோவில் பாஜகவின் நிர்வாகிகளில் ஒருவரான நரேந்திர தனேஜா அரசின் நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
"ஜனவரியிலும் பிப்ரவரியிலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது" என்றார் அவர்.
"ஆனால் கடந்த மூன்று நான்கு வாரங்களாக நாட்டைச் சுனாமி தாக்கியிருக்கிறது. எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வந்திருக்கிறது அந்தச் சுனாமி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் அளவுக்கு அதிமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் "
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்துக் காண்பிக்கப்படுகிறதா என்பது பற்றிப் பேசிய தனேஜா, "துல்லியமான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் மரணங்களை மறைக்க முடியாது. ஏதாவது தவறாக இருந்தால் ்அது நிச்சயம் பொதுவெளிக்குவந்துவிடும்" என்றார்.
"இவ்வளவு பேரழிவு நடந்திருந்தாலும், இந்தியா மீண்டு வரும்"
"எங்களுக்கு அந்த வலிமை இருக்கிறது. எதிர்ப்பாற்றல் இருக்கிறது. நீங்கள் அதைக் காண்பீர்கள்"
ஆக்சிஜன் விநியோகத்தைச் சீராக்குவதற்கு ரயில்கள், ராணுவ விமானங்கள் ஆகியவை முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. ஆனால் தேடி அலைந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைத்துவிடவில்லை.
சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தகவல்களைத் திரட்டி, ஒழுங்குபடுத்தி பாதிக்கப்பட்டோருக்கு தொடர்புகளைத் தரும் பணிகளில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பட மூலாதாரம், Reuters
கொரோனாவில் இருந்து மீண்ட 28 வயதான தனு இதுபோன்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார்.
கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளைச் சரிபார்த்து பிறரிடம் கொண்டு சேர்த்து உதவும் பணியில் அவர் ஈடுபடுகிறார்.
"ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. 30 வயதான ஆறு மாதக் கருவுற்றிருந்த ஒரு பெண்ணுக்கு உதவி கோரி ட்விட்டரில் ஒரு தகவல் வந்தது"
"அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இடம் தேடி அவரது குடும்பத்தினர் அலைந்து கொண்டிருந்தனர். நானும் எனது நண்பர்கள் டெல்லியின் பல மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை"

பட மூலாதாரம், Getty Images
சமூக வலைத்தளங்களில் இருந்து பெறும் தகவல்கள் மிக விரைவிலேயே காலாவதியாகி விடுகின்றன என்பதையும் சில நேரங்களில் தவறாக இருக்கின்றன என்பதையும் தனு புரிந்து கொண்டிருக்கிறார். அதனால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை இருக்கின்றனவா என்பதை நேரடியாகச் சென்று சரிபார்த்துவிடுகிறார்.
"அரசின் பொறுப்புகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். கோரிக்கைகள் குவிந்து கொண்டே இருக்கின்றன"
"இதே நிலை நீடித்தால் என்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கே இதே போன்ற கதி ஏற்படக்கூடும்" என்றா தனு.
"கொரோனாவால் அல்ல, மருத்துவ உதவி கிடைக்காமல்தான் ஏராளமான மக்கள் உயிரிழக்கிறார்கள். இதற்கு நாம் அரசைத்தான் பொறுப்பாக்க வேண்டும்"கிட்டத்தட்ட நள்ளிரவு நெருங்கும் வேளையில், ஜிதேந்தர் சிங் ஷன்டி அன்றைய நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டி முடித்திருந்தார்.
பிற செய்திகள் :
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- தலைமைச் செயலாளர் இறையன்பு: முதல்வரின் செயலாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: 'உளமார உறுதி' கூறி பதவியேற்றார்
- கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்களிக்க அமெரிக்கா ஆதரவு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












