தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: 'உளமார உறுதி' கூறி பதவியேற்றார், மற்ற அமைச்சர்கள் யார் யார்?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார்.
ஆளுநர் பன்வாரிலால், 'ஐ எம்.கே.ஸ்டாலின்' என்று ஆங்கிலத்தில் கூற, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என்று தொடங்கி பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார். திராவிட இயக்கத் தலைவர்களுக்கே உரிய முறையில் "உளமார உறுதி மொழிகிறேன்" என்று கூறி பொறுப்பேற்றார்.
திராவிட இயக்கத் தலைவர்கள் இப்படி 'உளமார உறுதி ஏற்கிறேன்' என்று கூறி பதவியேற்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதற்கு முன்பு, பதவி ஏற்பவர்கள் இறைவனின் பெயரால் உறுதி ஏற்பது வழக்கம்.

ஸ்டாலின் பதவியேற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.
பதவியேற்கவந்த ஸ்டாலின் மகிழ்ச்சி ததும்ப காணப்படவில்லை. கொரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை மூச்சுத் திணறவைக்கும் இக்கட்டான நேரத்தில் அவரது அரசாங்கம் பதவியேற்பதால் ஏற்படுகிற மன அழுத்தம் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
அமைச்சர்கள் பதவியேற்பு
ஸ்டாலினைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் (நீர்வளம்), க.பொன்முடி (உயர் கல்வி), ஐ.பெரியசாமி (கூட்டுறவு), கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சி), எ.வ.வேலு (பொதுப்பணி, நெடுஞ்சாலை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை), தங்கம் தென்னரசு (தொழில்), எஸ்.ரகுபதி (சட்டம்), சு.முத்துசாமி (வீட்டுவசதி), கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி), தா.மோ.அன்பரசன்( ஊரகத் தொழில்), வெள்ளக்கோவில் மு.பெ.சுவாமிநாதன் (செய்தி, விளம்பரம்), வி.கீதா ஜீவன் (சமூக நலம்), 'அனிதா' ராதாகிருஷ்ணன் (மீன் வளம்), ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் (போக்குவரத்து),, க.ராமச்சந்திரன் (வனம்), அர.சக்கரபாணி (உணவு), வி.செந்தில் பாலாஜி (மின்சாரம்), ராணிப்பேட்டை ஆர்.காந்தி (கைத்தறி, துணி நூல்), மா.சுப்ரமணியன் (மக்கள் நல்வாழ்வு), பெ.மூர்த்தி (வணிகவரி, பதிவு) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
பதவி ஏற்புக் காட்சி:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும் எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலன்). பி.கே.சேகர் பாபு (இந்து அறநிலையம்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (நிதி, மனிதவளம்), சா.மு.நாசர் (பால் வளம்), 'அன்பில்' மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வி), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்), சி.வே.கணேசன் (தொழிலாளர் நலம்), த.மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பம்), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ( சிறுபான்மையினர் நலன்) மா.மதிவேந்தன் (சுற்றுலா), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலம்) ஆகியோரும் அமைச்சராகப் பதவியேற்று உறுதி மொழிந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நண்பகல் நடைபெறுகிறது.
மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி
34 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தாலும், இரு வேறு காரணங்களுக்காக மா.சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கவனத்தைப் பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், மா.சுப்ரமணியன்/twitter
2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இருந்த மா.சுப்ரமணியன் தமது பதவிக் காலத்தில் எளிதில் அணுகக் கூடியவாராக இருந்தார் என்றும், மாநகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பங்காற்றியவர் என்றும் பெயர் பெற்றவர். இடர் காலங்களில் களத்தில் இறங்கி செயல்படக்கூடியவர் என்று பெயர் பெற்ற இவர் தற்போதைய கொரோனா இடர் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எனவே இவர் மிகவும் கவனிக்கப்படுகிறார். மிக மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் பெயரனும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகனுமான இளம் அரசியல்வாதி மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
2006-11 திமுக ஆட்சியின்போது பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர்கல்வி, செயல்வழிக் கற்றல் போன்ற சீர் திருத்தங்களை அறிமுகம் செய்தவரான தங்கம் தென்னரசுவுக்கு மீண்டும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த துறை மிகவும் இளையவரான மகேஷுக்கு ஒதுக்கப்பட்டது பலரையும் நெற்றி சுருக்கவைத்துள்ளது. எனவே, இவரது நியமனமும் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர்
வழக்கமாக பள்ளிக் கல்வியோடு இணைத்து வழங்கப்படும் தமிழ்வளர்ச்சித் துறை தற்போது தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Thangam Thennarasu/FB
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் அத்துறைக்கு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளதும் கவனம் பெற்றுள்ளது. இவர், முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியனின் மகன், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனின் தம்பி.
சமூக ஊடகத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ள மற்றொரு நியமனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடையது. எழுத்தாளர், ஃபேஸ்புக்கில் ஆழமான அரசியல் கட்டுரைகளை எழுதக்கூடியவர் என்பது இவர் பற்றிய அறிமுகம்.

பட மூலாதாரம், எஸ்.எஸ்.சிவசங்கர்/fb
தென்னரசு, சிவசங்கர் இருவருமே படிப்பால் பொறியாளர்கள். நல்ல எழுத்தாற்றல் கைவரப்பெற்றவர்கள்.
சிவசங்கரின் 'தோழர் சோழன்' அரசியல் வரலாற்றுப் புதினம் அமேசான் கிண்டில் பென் டூ பப்ளிஷ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












