இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?

மோடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி நிருபர், தில்லி

இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரன் மே 11 ஆம் தேதி அன்று தான் சௌம்யா சந்தோஷின் குடும்பத்தினருடன் உரையாடியதாகவும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்திருப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் இஸ்ரேலின் காசா எல்லைக்கு அருகிலுள்ள அஷ்கெலோனில் வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். காசாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

முரளிதரன் தனது ட்வீட்டில், "ஜெருசலேமில் நடந்த இந்த தாக்குதல்களையும் வன்முறைகளையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இந்த ட்வீட்டை மறு ட்வீட் செய்திருந்தார்.

இவை தவிர, கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடந்து வரும் வன்முறைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.

மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கலந்துரையாடலின் போது,​​ மே 11 அன்று நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்,​​ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, இரு தரப்பினரும் தற்போதுள்ள நிலையைச் சீர்குலைக்க முயல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். .

காசாவிலிருந்து நடந்த ராக்கெட் தாக்குதலைக் கண்டித்த திருமூர்த்தி, எல்லா தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண் 2334 ஐப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மே 12 அன்று ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், வன்முறையை, குறிப்பாக காசாவிலிருந்து வந்த ராக்கெட் தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது என்று அவர் கூறினார். வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதும் சூழலின் அழுத்தத்தைக் குறைப்பதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2334 ஆம் எண் தீர்மானம்

கிழக்கு ஜெருசலேம் உட்பட 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிரதேசத்தில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது என்று கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 2016 இல் 2334 ஆம் எண் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தக் குடியேற்றங்களை நிறுவுவது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு பெரிய விதி மீறல் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டது.

பாலத்தீன மக்கள் மீதான இந்தியாவின் கொள்கை அனுதாபத்தின் அடிப்படையில் தான் இருந்து வருகிறது என்பது வரலாறு கூறும் உண்மையானாலும்,​​ கடந்த சில ஆண்டுகளாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கமும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையிலான வன்முறை இந்தியாவுக்கு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது என்பது தெளிவாகிறது.

செப்டம்பர் 17, 1950 அன்று இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, யூத நிறுவனம் பம்பாயில் குடிப்பெயர்வு அலுவலகத்தை அமைத்தது. பின்னர் இது வர்த்தக அலுவலகமாகவும் பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1992 இல், இரு நாடுகளிடையே முழு ராஜீய உறவுகள் தொடங்கப்பட்டபோது,​​ இரு நாடுகளிலும் தூதரகங்கள் திறக்கப்பட்டன.

1992இல் இரு தரப்பு உறவு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு மற்றும் விவசாயத்தில் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளிலும் விரிவடைந்துள்ளது.

70 ஆண்டுகளில், இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரை ஜூலை 2017 இல், நரேந்திர மோதி பெற்றார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோடியின் வருகையைப் பெருமைக்குரியது என்று வர்ணித்திருந்தார். இரு நாடுகளும் விண்வெளி, நீர் மேலாண்மை, எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

நெத்தன்யாகு 2018 ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, இணையப் பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஒத்துழைப்பு, திரைப்பட இணை உற்பத்தி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை தொடர்பாக அரசு ஒப்பந்தங்களும் ஐந்து அரசு சார் ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்தப் பயணங்களுக்கு முன்னர், 2015-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ரூபன் ரிவ்லின் 2016 இல் இந்தியா வந்தார்.

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி மற்றும் இஸ்ரேலின் முன்னாள் அதிபர்

பட மூலாதாரம், GALI TIBBON / AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி மற்றும் இஸ்ரேலின் முன்னாள் அதிபர்

பாலத்தீன விவகாரத்துக்கு ஆதரவு

பாலத்தீன பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவு நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. 1974 ஆம் ஆண்டில், பாலத்தீன விடுதலை அமைப்பை பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் நியாயமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக விளங்கியது இந்தியா.

1988 ஆம் ஆண்டில், பாலத்தீன நாட்டை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் இந்தியா காசாவில் தனது பிரதிநிதி அலுவலகத்தைத் திறந்தது, பின்னர் அது 2003 இல் ரமல்லாவிற்கு மாற்றப்பட்டது.

பல பலதரப்பு மன்றங்களில், பாலத்தீன பிரச்சனையை ஆதரிப்பதில் இந்தியா ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 53 வது அமர்வின் போது,​​பாலத்தீனர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த வரைவுத் தீர்மானத்தை இந்தியா இணைந்து வழங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது.

பிரிவினை சுவர் கட்ட இஸ்ரேல் எடுத்த முடிவை எதிர்த்து 2003 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொது மன்றத் தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்தது. 2011 இல், பாலத்தீனம் யுனெஸ்கோவின் முழு உறுப்பினராவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என்ற அந்தஸ்தை பாலத்தீனத்துக்கு வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுத் தீர்மானத்தை இந்தியா 2012 இல் இணைந்து முன்மொழிந்தது. இதற்கு ஆதரவாக வாக்கும் அளித்தது இந்தியா. செப்டம்பர் 2015 இல், ஐ.நா வளாகத்தில் பாலத்தீனக் கொடியை நிறுவவும் இந்தியா ஆதரவளித்தது.

இந்தியாவுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையே வழக்கமான உயர் மட்ட இருதரப்புப் பயணங்களும் தொடர்ந்து வருகின்றன.

சர்வதேச மற்றும் இருதரப்பு மட்டத்தில் வலுவான அரசியல் ஆதரவைத் தவிர, பாலத்தீனத்துக்கு இந்தியா பல்வேறு வகையான நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது. காசா நகரில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் ஜவஹர்லால் நேரு நூலகம் மற்றும் காசாவின் திர் அல்-பலாவில் உள்ள பாலஸ்தீன தொழில்நுட்பக் கல்லூரியில் மகாத்மா காந்தி நூலகம் உள்ளிட்ட மாணவர் செயல்பாட்டு மையங்களை உருவாக்க இந்திய அரசு உதவியுள்ளது.

இவை தவிர, பல திட்டங்களை உருவாக்க பாலத்தீனர்களுக்கு இந்தியா உதவி வருகிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பிப்ரவரி 2018 இல், பாலத்தீனத்துக்குப் பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமரானார் நரேந்திர மோதி. பாலத்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பாலத்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு உறுதியளித்ததாக மோடி அப்போது கூறினார். "பாலத்தீனப் பிரதேசம் ஒரு இறையாண்மை கொண்ட, அமைதியான சுதந்திரமான நாடாகும் என்று இந்தியா நம்புகிறது" என்றும் கூறியிருந்தார்.

இந்தியாவின் குழப்ப நிலை

மோடி மற்றும் நேஹன்யாஹு

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தந்திரோபாய ஆய்வுகள் திட்டத்தின் தலைவராக உள்ளார். "இந்தியா எப்போதுமே பாலத்தீனர்களைப் பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளது. ஆனால் திரைக்குப் பின்னால், இஸ்ரேலுடன் நல்லுறவையும் பேணி வந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"பாதுகாப்பு மற்றும் உளவு சார்ந்த துறைகளில் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போதுமே திரை மறைவில் ஓர் ஒத்துழைப்பு இருந்து வந்துள்ளது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் நிலைமை. ஆனால் இஸ்ரேலுக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதில் இந்தியாவுக்கு ஒரு தடை இருந்தது. அது இந்திய முஸ்லிம்களின் எதிர்வினை என்னவாக இருக்கும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியே அந்த தடை." என்று அவர் கூறுகிறார்.

1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு பி.வி. நரசிம்மராவ் அரசாங்கம் இஸ்ரேலுடனான ராஜீய உறவுகளை முறைப்படுத்திய பின்னர் இந்தியா இஸ்ரேலுடனான தனது உறவை பகிரங்கமாக நீட்டித்தது என்று கூறுகிறார் பந்த்.

நரேந்திர மோதிதான் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பொருத்தவரை, அந்த உறவு பல ஆண்டுகளாக இருந்தது என்று பந்த் கூறுகிறார். "கார்கில் போர்க் காலத்தில் கூட, இஸ்ரேல் இந்தியாவுடன் உளவுத் துறைத் தகவல் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பு கருவிகள் கிடைத்திருந்ததால், இஸ்ரேல் நீண்ட காலமாக நமது பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது." என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்புத் துறை வல்லுநர் சி.உதயபாஸ்கர் இந்தியக் கடற்படையின் ஓய்வு பெற்ற கமோடோர் ஆவார். தற்போது தில்லியைச் சேர்ந்த 'சொசைட்டி ஃபார் பாலிசி ஸ்டடீஸ்' என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையில் நடந்து வரும் வன்முறைகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, "இது மிகவும் நுட்பமான சூழ்நிலை. இந்தியாவைப் பொருத்தவரை இது ஒரு கயிற்றின் மீது நடப்பது போன்றது. வரலாற்று ரீதியாக, பாலத்தீனர்களின் பிரச்சினைக்கு இந்தியா ஆதரவளித்து வந்துள்ளது. அணிசேரா இயக்கம் நடைமுறையில் இருந்த போது, யாசர் அராஃபத் தில்லிக்கு வந்திருந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் நரசிம்மராவ் பதவிக்காலத்தில் இஸ்ரேலுடனும் ஒரு முறையான உறவை ஏற்படுத்தினோம். இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் சமநிலையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவே இந்தியா முயற்சி செய்கிறது." என்பது அவரின் கருத்து.

அரசியல் சமநிலையை நிலைநாட்ட இந்தியா எப்போதுமே முயற்சி செய்து வருகிறது என்று பந்த் கூறுகிறார். "மோடி இஸ்ரேலுக்குச் சென்றார், ஆனால் அதன்பிறகு அவர் பாலத்தீனத்துக்கும் சென்றார். இந்த அரசாங்கம் அரபு நாடுகளுடனான உறவை அதிகரித்த விதம் மிகவும் முக்கியமானது. நரசிம்மராவ் அரசு முதல் இப்போது வரை ஒவ்வொரு அரசாங்கமும் சமநிலையை ஏற்படுத்தவே முயன்று வந்துள்ளன. ஆனால் மோதி அரசாங்கம் பகிரங்கமாக செய்ததைப் போல முந்தைய எந்த அரசாங்கம் இஸ்ரேலுக்கு இராஜீய ஆதரவை அளிக்கவில்லை. " என்கிறார் இவர்.

இந்தப் போரில் இந்தியா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. எனவே அமைதியான தீர்வுக்கு அறைகூவல் விடுவதன் மூலம் இந்தியா ஒரு ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்றும் இதை விட வேறு எதுவும் இந்தியா சொல்ல வாய்ப்பில்லை. அங்கு நடப்பது ஒரு வரலாற்றுப் பிரச்சனை. இரு தரப்பினருக்கும் அவற்றின் சொந்தத் தேவைகள் உள்ளன. இரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது இவர் வாதம்.

இத்தகைய கொடும் வன்முறைச் சம்பவங்களுக்கு இடையிலும் இந்தச் சமநிலையைப் பராமரிக்க இந்தியாவால் முடியுமா? வளைகுடாவின் அரபு நாடுகளே சமநிலை மனப்பான்மையைக் கடைப்பிடிக்க முடியும் போது, இந்தியாவும் அதைச் செய்ய முடியும் என்று பந்த் கூறுகிறார்.

"வாய்ச் சொல்லாக வேண்டுமானால், அரபு நாடுகள் இஸ்ரேல் மீது குறை கூறலாம். ஆனால் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலுடன் நல்லுறவை வளர்த்து வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபிரகாம் ஒப்பந்தத்தின் மூலம் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தங்கள் கரங்களை எந்த அளவுக்கு நீட்டியுள்ளன என்பது தெளிவு. பாலத்தீனர்களைப் பொருத்தவரை, வளைகுடாவின் அரபு நாடுகளாலேயே அதைத் தீர்க்க முடியாவிட்டால், அதில் இந்தியா என்ன செய்து விட முடியும்." என்று இவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்தியா இராஜீய சமநிலையைத் தொடர்ந்து வெற்றிகரமாகக் கடைபிடிக்கும் என்றும் இது மிகவும் எளிதானது என்றும் கூறும் பந்த், இதற்குக் காரணம், இதில் இந்தியாவுக்கு நேரடியாக எந்தப் பங்கும் இல்லை என்பதே என்றும் கூறுகிறார். "இந்தியாவை ஒரு மத்தியஸ்தராகத் தலையிடுமாறு யாரும் கோரவுமில்லை, இந்தியாவும் ஒரு மத்தியஸ்தராக தலையிட விரும்பவுமில்லை" என்று அவர் கூறுகிறார்.

இந்தியா விரும்பினால், அது இஸ்ரேலுக்கு ஆதரவாக பேச முடியும், ஆனால் இந்தியா அவ்வாறு செய்யாது. ஏனெனில் அது மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்றும் பந்த் கூறுகிறார். "இது மோதி அரசாங்கத்திற்கு ஒரு கடினமான சூழ்நிலை. இந்தியாவின் முஸ்லிம் சமூகம் ஏற்கனவே மோதிக்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தை வெளியிலிருந்து ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்தால், ஹமாஸ் ஒரு நாட்டின் வலிமைக்கே சவால் விடுகிறது. ஹமாஸ் சர்வதேசச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பன்று. ஆனால், இஸ்ரேல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு." என்று அவர் கூறுகிறார்.

"ஒவ்வொரு நாடும் சொந்த நலனைக் கருத்தில் கொண்டே இந்த விவகாரத்தைப் பார்க்கிறது. அமெரிக்கா மற்றும் அரபு வளைகுடா நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கு இதில் எந்தப் பங்களிப்பும் இல்லை. தீர்வு காண முடியுமென்றால், அது அமெரிக்கா அல்லது அரபு நாடுகளால் மட்டுமே முடியும். அந்த நாடுகளே தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காதபோது, இந்தியாவும் ஒரு சார்பும் இன்றி, சமநிலையைக் கை கொள்ள முடியும்." என்பது இவர் விளக்கம்.

மோடி மற்றும் நேஹன்யாஹு

பட மூலாதாரம், Getty Images

இந்திய - இஸ்ரேல் உறவு

இந்தியா, இஸ்ரேலில் இருந்து பெருமளவில் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து வருகிறது. மேலும், இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே வழக்கமான பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன. பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவும் உள்ளது.

பிப்ரவரி 2014 இல் இந்தியாவும் இஸ்ரேலும் மூன்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இவை, கிரிமினல் வழக்குகளில் பரஸ்பர சட்ட உதவி, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் தகவல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

2015 முதல், இந்தியாவின் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒவ்வோர் ஆண்டும் இஸ்ரேலின் தேசிய போலீஸ் அகாடமிக்கு ஒரு வாரப் பயிற்சிக்காகச் சென்று வருகின்றனர்.

இஸ்ரேலிய மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உல்லாசப் பயணங்களுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான இடம். 2018 ஆம் ஆண்டில், 50,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர், 70,000 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலுக்குச் சென்று வந்தனர்.

இந்தியா தொடர்பான பல படிப்புகள் டெல் அவிவ் பல்கலைக்கழகம், ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைஃபா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றன.

2019 தரவுகளின்படி, இஸ்ரேலில் சுமார் 550 இந்திய மாணவர்கள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் முனைவர் மற்றும் அதற்கடுத்த நிலையில் கல்வி பயில்வோர் ஆவர். இந்திய மாணவர்களுக்குக் குறுகிய கால கோடைகால உதவித்தொகையை இஸ்ரேல் வழங்கி வருகிறது.

இஸ்ரேலில் சுமார் 14,000 இந்தியக் குடிமக்கள் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 13,200 பேர் இஸ்ரேலிய முதியவர்களைப் பராமரிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டவர்கள். இது தவிர வைர வணிகர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவழி யூதர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். 1950 கள் மற்றும் 1960 களில் இந்தியாவில் இருந்து பலர் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மகாராஷ்டிராவிலிருந்தும், மீதமுள்ளவர்கள் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :