ஏ.பி. சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது பட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவந்த தாஹில் ரமானி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதனை ஏற்காத தாஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் தோத்தாரி செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேகாலயாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல், மத்தியப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். திரிபுராவின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல், பட்னாவின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1959ல் பிறந்த சாஹி, 1985ல் வழக்கறிஞராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தன் பணியைத் துவங்கினார். 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சாஹி, 2005ல் நிரந்தர நீதிபதியாக நியமனமானார்.
2018ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சாஹி, சிவில் மற்றும் அரசியல் சாஸன விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












