"இலங்கையில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழர்களுக்கு பயனில்லை" - புலம்பெயர் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகிலேயே அதிகளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, தமது உயிரை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் பல இலங்கையர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றமையை காண முடிகின்றது.
தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
யுத்த சூழ்நிலை மாத்திரமன்றி, அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஊடகவியலாளர்கள், செல்வந்தர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் பிறந்து, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளவர்கள், இலங்கையின் பொருளாதாரம், சமூக செயற்பாடுகள், அரசியல் நிலவரங்கள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள புலம்பெயர் தமிழர்களின், இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு அவதானிக்கின்றனர் என்பது தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வரும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணாவிடம் நாம் வினவினோம்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்காது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக கே.ஆர்.கிரிஷ்ணா தெரிவிக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அமைப்பதை தாம் விரும்பவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன், இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவர் சார்ந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என அவர் கூறுகிறார்.
ஒரு வேளை, ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகும் பட்சத்தில், அது இலங்கையில் யுத்த கால சூழ்நிலையை மீண்டும் தங்கள் உறவினர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ளதாகவும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணா குறிப்பிடுகின்றார்.
கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணனிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிபிசி தமிழ் வினவியது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும் பட்சத்தில், இலங்கையில் இதுவரை காலமும் இருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் போன்றவை முற்றாக முடக்கப்படும் அச்சம் எழுந்துள்ளதாக ஆர்.ரமணன் கூறுகின்றார்.
தமிழ் பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், நினைவெழுச்சி நிகழ்வுகள், அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளப்படும் நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மறுபுறம் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில், ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் காணப்பட்ட அதிகார போட்டி, ரணில் விக்ரமசிங்கவிற்கும், சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தமது அதிகாரத்தை தக்க வைப்பதில் இரண்டு தலைவர்களும் காண்பிக்கும் அக்கறை என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் என அவர் குறி;ப்பிடுகின்றார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போன சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதை விடவும், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனங்களை நன்கறிந்துள்ள மேற்குலக நாடுகள், அவரை தமது தேவைக்கு ஏற்ப ஆட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் ஆர்.ரமணன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சூழ்நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடியவர், சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு எதையும் பெரிதாக வழங்கி விடப் போவதில்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- சிரியா - துருக்கி எங்கள் எல்லையல்ல; குர்துக்கள் தேவதூதர்களும் அல்லர்: டிரம்ப்
- அன்பு மகளை கருணைக் கொலை செய்ய கோரும் பெற்றோர் – ஏன் இந்த துயரம்?
- ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதங்கள்
- ஏ.டி.எம். பற்றி தெரியாது - சிம் கார்டுகள் தங்கத் துகள் போல - இது எரித்ரியாவில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












