ஏ.டி.எம். பற்றி தெரியாது - சிம் கார்டுகள் தங்கத் துகள் போல - இது எரித்ரியாவில்

பட மூலாதாரம், Getty Images
ஆப்பிரிக்காவில் அதிக அடக்குமுறைக்கு ஆளான நாடுகளில் ஒன்றாக எரித்ரியாவை மக்கள் கூறுகிறார்கள். அடிப்படை அரசியல் மற்றும் மத சுதந்திரங்கள் மக்களுக்கு மறுக்கப்படும் நாடாக உள்ளது.
எத்தியோப்பியாவிடம் இருந்து 1993ல் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிபர் இசையாஸ் அப்வெர்கி தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சி நடைபெறுவதால் இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
எதிர்க்கட்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. தனியார் செய்தி நிறுவனங்களுக்குத் தடை உள்ளது. அரசை விமர்சிப்பவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் (சிலரைப் பற்றி ஆண்டுக் கணக்கில் தகவலே இல்லை). இளைஞர்களுக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதனால் பல நூறாயிரம் எரித்ரிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஐரோப்பாவை அடைவதற்கு சகாரா பாலைவனம் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைக் கடக்கும் துன்பம் மிகுந்த பயணத்தில் பலர் மரணம் அடைகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசியின் அம்ஹாரிக் சேவையின் ஜிமத் டாமிராட் சமீபத்தில் அரசின் கண்காணிப்புடன் அந்த நாட்டில் பயணம் மேற்கொண்டார்.
அங்கே மக்கள் மீது அரசு செலுத்தி வரும் அசாதாரணமான கட்டுப்பாடுகள் பற்றி இங்கு அவர் எழுதியுள்ளார்.
1.சிம் கார்டுகள் தங்கத் துகள்களைப் போல கருதப்படுகின்றன
அரசுக்குச் சொந்தமான எரிட்டெல் நிறுவனம் மட்டுமே தொலைத் தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது. அது அளிக்கும் சேவை மோசமானதாக உள்ளது, அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக உள்ளது.
எரித்ரியாவில் 1 சதவீதத்துக்கும் சற்று அதிகமான பகுதிகளுக்கு மட்டுமே இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளது என்று சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகள் தங்கத் துகள்களைப் போல எரித்ரியாவில் பார்க்கப்படுகின்றன. சிம் கார்டு வாங்குவதற்கு உள்ளூர் அதிகாரியிடம் குடிமக்கள் அனுமதி பெற்றாக வேண்டும்.

பட மூலாதாரம், AFP
சிம் கார்டு வாங்கிவிட்டாலும், அதில் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அங்கு செல்போன்களுக்கான இன்டர்நெட் சேவை இல்லை.
வை-பை மூலம் மட்டுமே அவர்கள் இன்டர்நெட் வசதியைப் பெறலாம். அதுவும் மிக மெதுவாக இயங்கும். முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை அணுகுவதற்கு, அரசின் தணிக்கையைத் தவிர்க்க வேண்டுமானால் அவர்கள் வி.பி.என். சேவையைப் பயன்படுத்த வேண்டும்.
சிம் கார்டுகள் வாங்குவதில் அதிக சிரமம் உள்ள காரணத்தால், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கு பொது தொலைபேசி மையங்களின் சேவைகளை மக்கள் இன்னும் பயன்படுத்துகின்றனர்.
எங்கள் பயணத்தின் முதல் நான்கு நாட்கள் நாங்கள் அவற்றைப் பயன்படுத்தினோம். பிறகு மூன்று பேர் கொண்ட பிபிசி குழுவிற்கு ஒரு சிம் கார்டு கிடைத்தது. நாங்கள் புறப்படுவதற்கு முன்னதாக அதை நாங்கள் திருப்பி ஒப்படைக்க வேண்டியிருந்தது.
2.வங்கிகளில் மட்டுமே மக்கள் பணம் எடுக்க முடியும்
வங்கிக் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.
எரித்ரியாவின் கரன்சியான நாக்பா-வை பல லட்சக்கணக்கில் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு மாதத்துக்கு 5,000 நாக்பாக்கள் (330 டாலர்கள்) மட்டுமே எடுக்க முடியும்.

தலைநகர் அஸ்மராவில் ஒருவரை நாங்கள் சந்தித்தோம். 1986 மாடல் டயோட்டா கரோல்லா கார் வாங்குவதற்கு மாதம் 5000 நாக்பா வீதம் 11 மாதங்கள் தன் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார். காரை விற்றவருக்கு 55,000 நாக்பா ரொக்கமாகக் கொடுத்துவிட்டு, மீதி 55000 நாக்பா-வை வங்கிக் கணக்கு மூலம் மாற்றி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
முழு தொகையையும் வங்கிக் கணக்கு மூலமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் ரொக்கமாகத் தர வேண்டும் என்று விற்பனையாளர்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரொக்கமாகக் கிடைப்பது அரிதாக உள்ளது.
திருமணங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு 5000 நாக்பாக்களைவிட அதிகம் செலவாகிறது என்பதால் விதிவிலக்கு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு திருமணம் நடக்கவுள்ளது என்றால், சம்பந்தப்பட்டவர் உள்ளூர் அதிகாரியை அணுக வேண்டும். அவர் 5000 நாக்பாக்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்று அந்த அதிகாரி, அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குக் கடிதம் தருவார்.
பணம் எடுப்பதற்கு எரித்ரிய அரசு ஏன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பதற்கு அந்த மக்கள் வித்தியாசமான கருத்துகளைத் தெரிவித்தனர். ``மக்களிடம் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கும்'' அரசு இவ்வாறு செய்கிறது என சிலர் கூறினர். ``வர்த்தக நடவடிக்கைகளை அரசு விரும்பாததால், பணப் புழக்கத்தைக் குறைக்கிறது'' என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
எரித்ரியாவில் ஏ.டி.எம்.கள் எதுவும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையில் ``போர் சூழ்நிலை'' முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து எரித்ரியாவுடன் எல்லை திறக்கப்பட்ட பகுதிக்கு கடந்த ஆண்டு சென்ற கார் வாங்குநர் ஒருவர், ``ஓர் இயந்திரத்தில் இருந்து பெருமளவு பணத்தை மக்கள் எடுப்பதைப் பார்த்து ``வாய் பிளந்து'' நின்றதாகத்'' தெரிவித்தார்.
3.ஒரு தொலைக்காட்சி நிலையம் மட்டுமே உள்ளது
அரசுக்குச் சொந்தமான எரி-டி.வி. மட்டுமே எரித்ரியாவில் உள்ளது. அதுதான் அரசின் செய்திகளை அளிக்கும் சேனல். செயற்கைக்கோள் டிஷ் ஆன்டனா இருந்தால் பிபிசி மற்றும் சர்வதேச சேனல்கள் அல்லது வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள எரித்ரியர்களால் நடத்தப்படும் எரிசாட் மற்றும் அசெனா டி.வி. ஆகியவற்றைப் பார்க்கலாம்.
எரித்ரியாவில் ஊடக சுதந்திரம் பற்றி பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்காக செயல்படும் கமிட்டி டூ புரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ் (சி.பி.ஜே.) குறைவாகவே மதிப்பிட்டுக் கூறுகிறது. உலகில் மிகுந்த தணிக்கை நடைபெறும் நாடாக எரித்ரியா உள்ளது, வட கொரியாவைக் காட்டிலும் மோசமாக உள்ளது என்று அந்த அமைப்பு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
``வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் செயற்கைக்கோள் ஒளிபரப்புகள் அவ்வப்போது சிக்னல்களைத் தடுப்பதன் மூலம் இடையூறு செய்யப்படுகின்றன என்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்டர்நெட் சேவையின் மோசமான தரத்தால் இடையூறு செய்யப்படுகின்றன'' என்றும் ஜெர்மனியின் Deutsche-Welle Akademie கூறியிருப்பதை அந்தக் கமிட்டி மேற்கோள் காட்டுகிறது.
இருந்தபோதிலும், எரித்ரியா ``வாய்ப்பு மறுக்கப்படும்'' சமூகம் என்ற புகாரை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் யெமானே மெஸ்க்கெல் மறுக்கிறார். பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் 91 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகளில் செயற்கைக்கோள் டிஷ் ஆன்டனாக்கள் உள்ளன என்றும், அவற்றின் மூலம் 650க்கும் மேற்பட்ட சர்வதேச டி.வி. சேனல்களைப் பெற முடிகிறது என்றும் அவர் கூறினார். தம்முடைய கருத்துகளுக்கு ஆதரவாக, புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
4. ஒரு மது உற்பத்தி ஆலை
இத்தாலியப் பொறியாளர் லூயிகி மெலோட்டியா என்பவரால் 1939ல் அமைக்கப்பட்ட அஸ்மரா மது உற்பத்தி ஆலை மட்டும் தான் நாட்டில் உள்ள ஒரே மது உற்பத்தி ஆலையாக உள்ளது.
ஒரு பாரில் இரண்டு பீர்கள் குடிப்பதற்கு மட்டுமே சமீப காலம் வரை தங்களுக்கு அனுமதி இருந்தது என்று மக்கள் தெரிவித்தனர். அதனால் கூடுதல் பீர்கள் வாங்குவதற்காக, மதுப் பழக்கம் இல்லாதவர்களையும் பார்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
சமீபத்தில் அந்த ஆலையின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டது. அதனால் போதிய அளவுக்கு மது வகைகள் கிடைக்கின்றன. ஆனாலும் பார்களில் அஸ்மரா மட்டுமே கிடைக்கிறது என்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இத்தாலியின் முன்னாள் காலனி நாடான எரித்ரியாவில் சாலைகள் அமைப்பது மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை செய்யும் பணிக்காக லூயிகி மெலோட்டியா அங்கு சென்றிருக்கிறார். மது உற்பத்தி செய்தால் விற்பனைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை அறிந்த அவர், மது உற்பத்தி ஆலையைத் திறந்துள்ளார். அதற்காகவே அவர் இன்னும் நினைவில் வைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.
5.பல இளைஞர்கள் குடிபெயர விரும்புகின்றனர்
எங்களுடன் இரவு உணவு சாப்பிட்ட ஓர் இளைஞர் ``பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு கனவு நனவானதைப் போன்ற விஷயம்'' என்று கூறினார்.
தேசத்துக்கு சேவை செய்யும் கடமையைப் பூர்த்தி செய்யாத வரையில் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் தரப்படுவதில்லை என்று அவர் தெரிவித்தார். அதில் ராணுவப் பயிற்சியும் அடங்கும். பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், உள்ளூர் அதிகாரியின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்தாக வேண்டும்.
``அதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும் - 40 அல்லது 45 வயதை எட்டிவிடுவீர்கள், மனைவி குழந்தைகள் வந்துவிடுவார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.
பாஸ்போர்ட் கிடைத்துவிட்டாலும் அவர்கள் எளிதாக நாட்டை விட்டு வெளியே சென்றுவிட முடியாது - நாட்டை விட்டு வெளியேற விசா பெற வேண்டும். அவர்கள் திரும்பி வராமல் போகக் கூடும் என்ற சந்தேகம் அரசுக்கு இருப்பதால், அந்த விசா கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.
எனவே, எரித்ரிய இளைஞர்கள் பலர் எல்லையில் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக ஊடுருவி எத்தியோப்பியா, சூடானுக்கு சென்று விடுகிறார்கள்.
மற்றவர்கள் ஐரோப்பாவுக்கு செல்வதற்காக துன்பங்கள் நிறைந்த சகாரா பாலைவன பயணம் மற்றும் மத்திய தரைக்கடல் பயணத்தை மேற்கொள்கிறார்கள். பாலைவனத்தில் பட்டினி மற்றும் தாகம் காரணமாகவோ அல்லது கடலில் மூழ்கியோ பலர் மரணம் அடைகின்றனர்.
அகதிகளை உருவாக்கும் ``ஒன்பதாவது பெரிய நாடாக'' எரித்ரியா உள்ளது என்று ஐ.நா. அகதிகள் ஏஜென்சி கூறியுள்ளது - 2018 இறுதியில் 507,300 அகதிகளாக வெளியேறி இருந்தனர். முந்தைய ஆண்டில் அது 4,86,200 என இருந்தது.
பெரும்பாலான அகதிகளுக்கு எத்தியோப்பியா (1,74,000) மற்றும் சூடான் (114,500) ஆகிய நாடுகள் இடம் கொடுத்துள்ளன. ஆனால் ஜெர்மனி (55,300), சுவிட்சர்லாந்து (34,100) போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பலர் ``பாதுகாப்பு'' பெற்றுள்ளனர்.
இளைஞர்கள் வெளியேறிவிடும் காரணத்தால் அஸ்மராவில் வயதானவர்கள் தான் பெரும்பாலும் தென்பட்டனர். தேநீரகங்களில் நுரை மிகுந்த காபியைப் பருகியபடி அவர்கள் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

எரித்ரியாவின் மக்கள் தொகை பற்றி தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் நடத்தவில்லை.
இருந்தபோதிலும் எரித்ரியாவின் மக்கள் தொகை 3.5 மில்லியன் என்றும் அதில் அஸ்மராவின் மக்கள் தொகை சுமார் 5,00,000 என்றும் உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
6.ஆனால் தலைநகரம் அழகாக உள்ளது

பட மூலாதாரம், Getty Images
இத்தாலியின் பாசிஸ சர்வாதிகாரி முசோலினி, 1930களில் புதிய ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க முயற்சித்த போது, ஆப்பிரிக்காவின் ``சிறிய ரோம்'' நகரமாக அஸ்மராவை உருவாக்க விரும்பினார்.
நகரில் மரங்கள் நிறைந்த அகலமான சாலைகளும், நவீன கட்டடங்களும் இத்தாலிய காலனி ஆதிக்கத்தின் கடந்த காலங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
அஸ்மராவை உலக கலாச்சார தலமாக, ஐ.நா. பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. ``20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத்துவ நகரமயமாக்கலின் ஆரம்பகட்ட உதாரணமாகவும், ஆப்பிரிக்க சூழலில் அதை செயல்படுத்தியதன் உதாரணமாகவும் உள்ளது'' என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
எனவே, எரித்ரியாவில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும், அஸ்மரா நகரம் ஒரு முறை பயணம் செல்வதற்கு ஏற்ற அழகான நகரமாக உள்ளது.
இங்கு கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Madurai Dalit சிறுவனை பிளேடால் கீறிய சம்பவம் - உண்மையிலேயே சாதி பிரச்சனையா? #BBCGroundReport
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












