கொரோனா வைரஸ்: விவசாயம் முதல் விமானம் வரை முடங்கிய தொழில்கள் - நிமிருமா இந்திய பொருளாதாரம்?

பட மூலாதாரம், Kuni Takahashi / getty images
- எழுதியவர், அருணோதய் முகர்ஜி
- பதவி, பிபிசி
டெல்லியில் உணவுக்காக வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் முகமது ஆலமும் ஒருவர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோதி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படும் என அறிவித்ததும் முகமது ஆலம் வேலை செய்த தொழிற்சாலையும் மூடப்பட்டது.
தினக்கூலியாக இருக்கும் அவருக்கு வேறு வருமானம் இல்லாத காரணத்தால் அரசு இலவசமாக உணவு அளிக்கும் மையத்திற்கு வருவதை தவிர வேறு வழி இல்லை.
"நான் எப்படி வாழப் போகிறேன் என தெரியவில்லை. என் குடும்பத்திற்காக யாரிடமாவது நான் கடன் வாங்க வேண்டும்," என்கிறார் அவர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நீரஜ் குமார் டெல்லியிலிருந்து செல்ல வேண்டும் என்று நினைத்த வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி. முடக்க நிலை அமலுக்கு வருவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் இந்த நகரத்தை விட்டு குடும்பத்தோடு சென்றுவிடலாம் என செல்லும் முயற்சியில் ஈடுபட்ட பலருடன் சேர்ந்தார். ஆனால் பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் நடந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.
நீரஜ் குமார், அவருடைய மனைவி மற்றும் 10 வயதாகும் மகள் ஆகியோர் 40 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பிபிசி அவரிடம் பேசியது. "இங்கே வேலை ஏதும் இல்லை. அதனால் இந்த நகரை விட்டு நாங்கள் எங்கள் சொந்த கிராமத்திற்கு செல்கிறோம். பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இன்னும் 260 கிலோமீட்டர் நடந்து எங்கள் கிராமத்தை அடைய வேண்டும்," என்றார்.
ஆலம் மற்றும் குமார் போன்ற அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்களுக்காகாக இந்திய அரசு 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகையாக அறிவித்தது. இந்தியாவில் இதுபோன்ற நிறுவனங்கள்தான் 94 சதவீத மக்கள் தொகைக்கு வேலை தருகின்றன. இவைதான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவீதம் பங்களிக்கின்றன.
தொழிற்சாலைகள் அனைத்தும் ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் அவர்கள் அனைவரும் வேலையில்லாதவர்கள் ஆனார்கள்.

யாரும் பசியோடு இருக்கத் தேவையில்லை என இந்த இழப்பீடு குறித்து அறிவிக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். மக்களுக்கு நேரடியாக இந்தப் பணம் கிடைக்கும் எனவும், உணவுப் பொருட்களும் அதிகமாக விநியோகிக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த எதிர்பாராத முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மிகவும் கொடுமையானது.
நிறுவனங்கள் முடக்கப்பட்டன; வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது; உற்பத்தி குறைந்தது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துதான் இருந்தது.
உலகின் அதிவிரைவாக வளரும் நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில் 4.7% ஆகக் குறைந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளிலேயே மிகவும் குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.
கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட வேலைவாய்ப்பின்மை சென்ற ஆண்டு அதிகமானது. எட்டு முக்கியத் தொழிற்துறைகளின் தொழிற்சாலைகளிலிருந்து வரும் உற்பத்தியும் கடந்த வருடம் 5.2% குறைந்தது. இதுதான் கடந்த 14 ஆண்டுகளில் மோசமான சூழல் ஆகும்.
சிறு தொழில்களும் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இபோதுதான் சற்று மீண்டு வரத் தொடங்கியிருந்தன.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் ஏற்கனவே மந்தமாக இருந்த பொருளாதார நிலையை இன்னும் மோசமடைய செய்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் அரசின் நடவடிக்கைகளை வரவேற்பவர்கள் கூட அதை பொருளாதாரத்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP
இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்குகின்றனர். ஆனால் இது ஏழை மக்களுக்கு எப்படிச் சென்று சேரும் என்கிறார் பொருளாதார வல்லுநர் அருண்குமார்.
ராணுவ வீரர்கள் மற்று மாநில அரசின் உதவியோடு, ஏழைகளுக்கு அந்த பொருள் சேரும் வண்ணம் அரசு இந்த பொருட்களை வழங்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த பல தொழிலாளர்கள் தங்கள் வீட்டைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் உள்ளார்கள். இவர்களுக்கு உணவும் பணமும் வழங்குவதே அரசின் தலையாய வேலையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வெளியேறி வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மட்டும் ஆபத்தில் இல்லை.
விவசாயிகளும் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விவசாயத் துறை கிட்டதட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கிறது.
ஆனால் அரசு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இருந்து 2,000 ரூபாய் ஏப்ரல் மாதம் முன் பணமாக அளிப்பதாக கூறுகிறது.
"ஏற்றுமதி நின்றுவிட்டது. அதனால் இந்த பணம் போதாது. லாபம் ஈட்டுவதற்காக நகரங்களில் விலை அதிகரிக்கப்படும். கிராமங்களில் விவசாயிகள் பொருட்களை விற்க முடியாததால் விலை குறையும்," என்கிறார் பொருளாதார வல்லுநர் அருண்குமார்.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் விற்பனைக்குத் தயாராக இருக்கும் இக்கட்டான நிலையில் இந்த தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
இந்த முடக்கத்தின்போது, விவசாய பொருட்களை கிராமங்களிலிருந்து நகரத்திற்கு கொண்டு வருவதே இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இது சரியாக நடக்கவில்லை என்றால் பெரும்பாலான பொருட்கள் வீணாகிவிடும். இதனால் இந்திய விவசாயிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படும்.

இந்தியா இப்போது மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மையையும் சமாளிக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சிறிய வணிகங்களுக்காக வேலை செய்பவர்களின் வேலை பறிபோகும் சூழலில் உள்ளது என்கிறார் பொருளாதார நிபுணர் விவேக் கௌல். சில நிறுவனங்கள் எத்தனை பேரை வேலையை விட்டு அனுப்பலாம் என இப்போது ஆலோசித்து கொண்டிருக்கின்றனர் என்கிறார் அவர்.
இது மட்டுமில்லாமல் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கும் விமான சேவையும் ஏப்ரல் 14 வரை உள்ள முடக்கத்தால் கடும் வீழ்ச்சி அடையும்.
இந்தியாவின் விமான சேவைகள் இந்த வருடம் 400 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கும் என ஆசிய பசிஃபிக் விமான சேவை மையம் கணித்துள்ளது.
விமான சேவையோடு தொடர்புடைய சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும். விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் காலியாக காணப்படுகின்றன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் வாகன உற்பத்தித் துறை சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த வருடம் இழப்பை சந்திக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
அரசு வழங்கும் இந்த இழப்பீடு போதுமானதா?
அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை கடலில் ஒரு துளி போன்றதுதான் என்கின்றனர் வல்லுநர்கள்.
தொழிற்துறை மீண்டும் மேம்பட இதைவிட பல மடங்கு உள்ள ஒரு பெரிய உதவித் தொகை தேவைப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












