அபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு - இம்ரான் கான்

இம்ரான் கான்

பட மூலாதாரம், Anadolu Agency

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.

முன்னதாக, அபிநந்தன் வர்மாவை ஒரு கும்பல் தாக்கும் படங்கள் வெளியாயின. பிறகு மாலை பாகிஸ்தான் வெளியிட்ட ஒரு காணொளியில் காபி அருந்தியபடி பேசும் அபிநந்தன், தம்மை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.

இந்நிலையில், அபிநந்தனை விடுதலை செய்வதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்றால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார். இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.

அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.

பாகிஸ்தான் ஊடகங்களை புகழ்ந்த இம்ரான்

கடந்த சில நாள்களில் நடந்துவரும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிகழ்வுகளில் பாகிஸ்தான் ஊடகம் நடந்துகொள்ளும் விதத்தை பாராட்டினார் இம்ரான்கான். "பாகிஸ்தான் ஊடகத்தின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், இந்திய ஊடகம் குறித்து இப்படி சொல்ல முடியாது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய ஊடகம் போரை ஆதரித்து பிரசாரம் செய்வது தொடர்ந்து வருகிறது" என்று அவர் கூறினார்.

"பாகிஸ்தான் எச்சரிக்கையோடும், சுய கட்டுப்பாட்டுடனும் நடந்துகொண்டது. இந்திய அத்து மீறலுக்கு பதிலடி தந்ததுகூட, எங்கள் இறையாண்மையை காத்துக்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என்பதைக்காட்டத்தான்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனையில், இறுக்கமும், பதற்றமும் அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மக்களுக்கு ஒரு கேள்வி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள அடிப்படைப் பிரச்சனை காஷ்மீர். இந்நிலையில் இந்திய மக்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் கடைபிடித்துவரும் ஒடுக்குமுறைக் கொள்கை இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுமா, மோசமாக்க உதவுமா?"

விடுதலைப் புலிகளைப் பற்றி...

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பாகவே தற்கொலை குண்டுவெடிப்பில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்து மத நம்பிக்கையை சேர்ந்தவர்கள். தற்கொலை குண்டு தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம். அதற்கு மதச்சாயம் பூசமுடியாது. ஆனால், இந்த தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளைத் தேடவேண்டும் என்று தமது உரையில் குறிப்பிட்டார் இம்ரான்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அபிநந்தன் பிடிபட்டபோது என்ன நடந்தது?

கண்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்தத்தோடு அபிநந்தனைக் காட்டும் காணொளியை புதன்கிழமை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் காட்டியது.

மோசமான முறையில் அவரைக் காட்சிப்படுத்திக் காட்டியதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இந்தியாவிலுள்ள சமூக ஊடகப் பதிவர்கள் அபிநந்தனை நாயகனாக சித்தரித்தனர்.

#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் பதிவிட்டனர்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் புகுந்து இந்திய விமானம் செவ்வாய்க்கிழமை குண்டு வீசியதை அடுத்து, பதிலடியாக மறு நாளே இந்திய எல்லையில் புகுந்து பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த மோதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஒரு விமானத்தை தாங்கள் இழந்ததாகவும், ஆனால், பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாங்கள் வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது.

காஷ்மீர் தங்களுடையதே என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கூறுகின்றன. ஆனால், இரு நாடுகளுமே காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இந்திய விமானிக்கு என்ன நடந்தது?

இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தன் என்று இனம்காணப்பட்டுள்ளவரை இந்த நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், உள்ளூர்வாசிகளால் தாக்கப்படுவதாக தோன்றுகின்ற படங்கள் பகிரப்பட்டுள்ளதை இரு நாடுகளும் கண்டித்துள்ளன. அந்த தாக்குதலில் இருந்து விமானியை காப்பாற்றிய பாகிஸ்தான் சிப்பாய்கள் தலையிட்டது புகழப்பட்டுள்ளது.

கண்கள் கட்டப்பட்டநிலையில் தண்ணீர் கேட்கின்ற விமானியின் காணொளியை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம், பின்னர் அதனை நீக்கிவிட்டது.

பிந்தைய காணொளியில் குவளையில் இருந்து தேனீர் குடித்து கொண்டிருப்பது போலவும், கண்கள் கட்டப்படாமல், முகம் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விங் கமேண்டர் காட்டப்படுகிறார்.

அவரது பெயர், ராணுவ பதவி, இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்தவர் என பல தகவல்களை அவர் தெரிவித்தார்.

ஆனால், அவர் என்ன செய்ய வேண்டி அனுப்பப்பட்டார் என்பதற்கு, "நான் அதனை சொல்ல கூடாது" என்று பதில் கூற மறுத்துவிட்டது இதில் தெரிகிறது.

ராணுவ அறநெறிகளுக்கு ஏற்றபடி இந்த விமானி நடத்தப்படுவதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிஃப் கபூர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :