இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?

பட மூலாதாரம், M.A Jarral
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைகுட்பட்ட பாலகோட் என்னும் பகுதிக்குள் சென்ற இந்திய விமானப்படை விமானங்கள் அங்குள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை கூண்டோடு அழித்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாலகோட் பகுதியில் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்ததாகவும், அதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்ட பின்பு, தங்களது விமானத்திலிருந்த வெடிப்பொருட்களை வீசிவிட்டு அவை திரும்ப சென்றுவிட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த தாக்குதலினால் பாகிஸ்தான் தரப்புக்கு எவ்வித பொருட்சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, 1971ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இருநாடுகளிடையேயான எல்லைப்பகுதியை தாண்டி இந்தியா தாக்குதல் தொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.


இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறும் பாலகோட் என்னும் பெயரில் இருநாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதி என இருவேறு இடங்கள் உள்ளதாக குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பாலகோட் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் கானை பிபிசி உருது தொடர்பு கொண்டு பேசியபோது, "பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட மன்ஷெரா மாவட்டத்தை சேர்ந்த மக்கள், இன்று அதிகாலை சுமார் மூன்று முதல் நான்கு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வெடிச்சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் குறைந்தது நான்கு மணிநேரம் மன்ஷெரா மற்றும் அபோதாபாத்துக்கு அருகிலுள்ள பாலகோட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஜப்பா, கார்ஹி ஹபிபுல்லா பகுதிகளை சேர்ந்த மக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அங்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு படைகளால் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாலகோட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், இந்தியா தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட் பகுதிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின. இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












