அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி

நச்சிகேட்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பேயுடன் கைகுலுக்கும் குரூப் கேப்டன் கம்பம்படி நசிகேதா. அருகில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டதுபோல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "கார்கில் போரின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அபோதும்கூட விமானி நசிகேதா, விமானத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. எதிரியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவில்லை. அவரது விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அவர் வெளியேற நேர்ந்தது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், சம்பவம் உண்மையாக இருக்குமானால், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன்," என்றார்.

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ்
படக்குறிப்பு, இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ்

பாகிஸ்தான் விமானப் படை பலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிப்னிஸ், "சில தசாப்தங்கள் முன்புவரை அதாவது 1971வரை, பல அளவுகோல்களில் பாகிஸ்தான் படை இந்தியாவைவிட நவீனமாக இருந்தது. பாகிஸ்தானிடம் அமெரிக்க உபகரணங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அவர்களைவிட முன்னோக்கி சென்றுவிட்டது. இந்திய ராடார் உபகரணங்கள் நவீனமானது. ஆனால் அதே நேரம் மலைகள் நிறைந்த பகுதி அது. அது மாதிரியான இடங்களில் ராடர்கள் பிழையான தகவல்களை சொல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்யும் வழிகளும் உள்ளன. ஆனால், அவை முழுமையானது அல்ல. அந்த சூழலுக்கன பிரத்யேக ராடர்கள் இப்போது வந்துவிட்டன. ஆனால் அதுவும் முழுமையாக சரியாக இருக்குமென்று கூற முடியாது. இப்போது இரு நாடுகளிடமும் எத்தனை ராடர்கள் உள்ளன என எனக்கு தெரியாது." என்றார்

பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபிநந்தன்

பட மூலாதாரம், TWITTER.COM/OFFICIALDGISPR

இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், அதன் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கூறுவதாகவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றார்.

அவர், "குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும் நானோ, மோதியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் இம்ரான்.

எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளனர். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியமானது" என்று தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: