இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?

பட மூலாதாரம், BHARATRAKSHAK.COM
இந்தியாவும் பாகிஸ்தானும் முன்பே போரிட்டு இருக்கின்றன. இப்போது இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் உள்ளன. இதற்கு முன்னாள் இருநாடுகளுக்கிடையே நடந்த போர் காஷ்மீருக்கானது.
ஏன் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக போரிட்டு கொள்கின்றன. அப்படி என்னதான் பிரச்சனை?
இந்தியா - காஷ்மீர் - பாகிஸ்தான்
இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இருநாடுகளும் காஷ்மீருக்காக கடுமையாக போட்டியிட்டுகொண்டன.

பட மூலாதாரம், BHARATRAKSHAK.COM
இந்திய பிரிவினையின் போது போடப்பட்ட சட்டத்தின் போது, காஷ்மீருக்கு இந்தியா அல்லது பாகிஸ்தானை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
அப்போது அந்த பகுதியின் ராஜா ஹரி சிங், இந்தியாவை தேர்ந்தெடுத்தார். இது உடனடியாக ஒரு போருக்கு காரணமாக அமைந்தது. இந்த போர் இரண்டு ஆண்டுகள் நடந்தது.
அதன்பின் 1965ஆம் ஆண்டு ஒரு போர் வெடித்தது. அதன்பின் 1999ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் சண்டையிட்டன.
இந்த சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம் கொண்ட நாடுகளாக தங்களை பிரகடனப்படுத்தி கொண்டிருந்தன.
இந்திய ஆளுகை காஷ்மீர்
காஷ்மீரில் வாழும் பலர் இந்த பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை விரும்பவில்லை. அவர்களில் ஒரு சாரார் சுதந்திர காஷ்மீர் கேட்கின்றனர். மற்றொரு பிரிவினர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கின்றனர்.
இந்திய கட்டுபாட்டு ஜம்மு காஷ்மீரில், இஸ்லாமிய மக்கள் 60 சதவீதத்திற்கு அதிகமாக வசிக்கின்றனர். இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாநிலம் காஷ்மீர்.
வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு படையினரின் தந்திரங்கள், சாலையில் இறங்கி போராடும் மக்கள், கிளர்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பும் காஷ்மீர் விவகாரத்தை மேலும் மோசமாக்கியது.
1989ஆம் ஆண்டிலிருந்தே அந்த பகுதியில் மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும், சமகாலத்தில் புர்ஹான் வானியின் மரணம்தான் சூழலை மோசமாக்கியது. ஆயுதம் தாங்கி சண்டையிட்டு வந்த 22வயதுடைய புர்ஹான் வானி 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
இது அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை கோபமடைய செய்தது.
ஸ்ரீநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள புர்ஹானின் சொந்த ஊரான ட்ராலில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, மக்கள் பாதுகாப்பு படையுடன் சண்டையிட்டனர், இந்த வன்முறை பல நாட்களுக்கு தொடர்ந்தது. இறுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
அதன்பின் அந்தபகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறை வெடித்தது.
கடந்தாண்டு, அதாவது 2018ஆம் ஆண்டில் மட்டும் 500க்கும் அதிகமான பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த பத்தாண்டிகளில் இதுவே மிகவும் அதிகமான எண்ணிக்கை.
அமைதிக்கான வழி
எல்லை கட்டுபாட்டு பகுதியில் ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டப்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் 2003ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
தங்கள் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிதி அளிப்பதையும் நிறுத்தி கொள்கிறேன் என பாகிஸ்தான் உறுதி அளித்தது.பயங்கரவாதத்தை நிறுத்தினால், மன்னிப்பு அளிக்கிறோமென இந்தியாவும் உறுதி அளித்தது.

பட மூலாதாரம், Getty Images
2014ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் நிலைமை மாறியது. பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசு பாகிஸ்தான் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ள இருப்பதாக கூறியது. ஆனால், அதே நேரம் அமைதி பேச்சுவார்த்தையிலும் ஈடுபாடு காட்டியது.
அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப், பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
ஆனால் அதற்கு அடுத்தாண்டே, பதான்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டியது இந்தியா.
2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்ல இருந்த தமது பயண திட்டத்தையும் ரத்து செய்தார் மோதி.
அதன் பின்னால், இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
டெல்லியின் கட்டுபாட்டில்
2016ஆம் ஆண்டு கோடைகாலத்தில் காஷ்மீர் வீதிகளில் நடந்த போராட்டங்கள் அமைதிக்கான நம்பிக்கையை மங்க செய்தன. அதன்பின், ஜூன் 2018ஆம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சி தலைமையில் நடந்த காஷ்மீர் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, நேரடியாக மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு வந்தது காஷ்மீர்.
இது அந்த மக்களை மேலும் கோபமடைய செய்தது.
ராணுவ நிலைகளின் மீது பல தாக்குதல்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றன.
ஆனால், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்திய பாதுகாப்பு படை பிரிவான சி.ஆர்.பி.எஃப் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் அமைதிகான அனைத்து நம்பிக்கையையும் சிதைத்து விட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஆதரவு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
இந்த சுழலில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












