ஜெனிவா ஒப்பந்தம் கூறுவதென்ன? போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்?

போர் கைதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? ஜெனிவா ஒப்பந்தம் கூறுவதென்ன?

பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், அந்த விமானத்தின் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கோருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு இந்திய விமானியை தங்கள் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த இந்திய விமானியின் பெயர் அபிநந்தன் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.

அபிநந்தன்

பட மூலாதாரம், TWITTER.COM/OFFICIALDGISPR

அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் கைதிகளை எப்படி நடத்துவது என ஜெனிவா ஒப்பந்தம் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

ஜெனிவ ஒப்பந்தத்தின்படி போர் முடிந்தவுடனே போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

ஜெனிவா ஒப்பந்தம்

1864ஆம் ஆண்டுதான் முதல் ஜெனிவா ஒப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. அது, காயம்பட்ட ராணுவவீரர்களை எப்படி நடத்தப்பட வேண்டுமென நெறிமுறைகளை வழங்கியது.

இரண்டாவது ஒப்பந்தம் கடலில் போர் செய்வோர் குறித்தது.

1929ஆம் ஆண்டு ஜெனிவா ஒப்பந்தத்தில்தான் போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு, 1949ஆம் ஆண்டு அவை மேம்படுத்தப்பட்டன. பின்பு 1977ஆம் ஆண்டு சில நெறிமுறைகள் சேர்க்கப்பட்டன.

எப்படி நடத்தப்பட வேண்டும்?

ஜெனிவா ஒப்பந்த நெறிமுறைகளின் முக்கிய ஷரத்துகளை இங்கே காண்போம்.

  • கைது செய்யப்பட்ட போர் கைதிகளை தண்டிப்பது போல நடத்தக் கூடாது. அவர்களை போரிலிருந்து தடுத்து வைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.
  • போர் முடிந்த மறுகணமே அவர்களை விடுவிக்க வேண்டும்.
  • கைது செய்யப்பட்ட போர் கைதிகளை மனித நேயத்துடன் நடத்த வேண்டும்.
  • போர் கைதிகளிடம் வன்முறையை பிரயோகிக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ கூடாது.
  • அவர்களின் உணவு, இருப்பிடம், உடை மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • போர்க் கைதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்களை அச்சுறுத்தவோ அல்லது மோசமாக நடத்தவோ கூடாது.
  • போர்க்குற்றம் நடந்திருக்கும் வாய்ப்பிருந்தால், அதற்காக போர்க்கைதிகளிடம் கைது செய்த நாடு விசாரணை நடத்தலாம். ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, ஏற்கப்பட்ட வன் செயல்களுக்காக விசாரணை நடத்தக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: