புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மரபு மீறப்பட்டதா?: ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மரபு மீறப்பட்டதா?

பட மூலாதாரம், MKStalin

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமையன்று பதவியேற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன், வாழ்த்துத் தெரிவிக்கும்போது மரபு மீறப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று காலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்த பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், அமைச்சர்களுக்குப் பிறகு தன்னை அனுமதிக்க வேண்டுமென மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகை அதிகாரியிடம் கோரினார்.

அதற்குப் பிறகு, ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து ஸ்டாலின் புறப்பட்டுச்சென்றார்.

இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்போது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அடுத்தபடியாக தன்னை அனுமதிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் கேட்டேன். அப்போது அவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பிறகுதான் நீங்கள் வாழ்த்துத் தெரிவிக்க முடியுமென தெரிவித்தனர். அப்போது நான், நீதிபதிகளை முதலமைச்சருக்கு அடுத்தபடியாக வாழ்த்துத் தெரிவிக்க அழைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அமைச்சர்கள் அழைக்கப்பட்டனர். அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்தான் அழைக்கப்பட வேண்டும். ஆகவே நான் வாழ்த்துத் தெரிவிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு வாழ்த்துத் தெரிவித்தேன்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :