''அரசின் செயல்பாட்டை பொறுத்தே எனது ஆதரவு இருக்கும்'': புதிய ஆளுநர்

பட மூலாதாரம், TNDIPR
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமையன்று காலையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சென்னையில் உள்ள ராஜ் பவனில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் ப. தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களவை துணை சபாநாயகர் எம். தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பதவியேற்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால், "அரசியல்சாசனத்தை நான் பாதுகாப்பேன். நான் எடுக்கப்போகும் எல்லா முடிவுகளும், சிறியதோ- பெரியதோ அரசியல் சார்பின்றி இருக்கும். ஆளுநர் அலுவலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.
விஷயங்களின் அடிப்படையிலேயே என் முடிவுகள் இருக்கும். அரசின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்" என்று கூறினார்.

பட மூலாதாரம், TNDIPR
1977ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித், நாக்பூர் கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்று 1978ல் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினரானார். 1982ல் அமைச்சராகவும் ஆனார்.
1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நாக்பூர் - காம்ப்டீ தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, மக்களவை உறுப்பினராகச் செயல்பட்டார். 1996ஆம் ஆண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்வானார் பன்வாரிலால்.
கோபால கிருஷ்ண கோகலேவால் நிறுவப்பட்ட ஆங்கில நாளிதழான தி ஹிதவதாவை மீண்டும் உயிர்ப்பித்து பல்வேறு பதிப்புகளுடன் இப்போதும் நடத்திவருகிறார் பன்வாரிலால் புரோஹித்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அசாமின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால், சமீபத்தில் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய ஆளுனர் நியமிக்கப்படாமல், மகாராஷ்டிராவின் ஆளுனராக இருந்த சி. வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக தமிழகத்தின் ஆளுனராகவும் நியமிக்கப்பட்டார்.
இவர் தமிழக ஆளுநராக செயல்பட்ட காலகட்டத்தில், மாநிலம் பெரும் அரசியல் திருப்பங்களைச் சந்தித்தது. வித்யாசாகர் ராவ் பதவியேற்ற சில நாட்களிலேயே மாநில முதல்வர் ஜெ. ஜெயலலிதா உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரது பொறுப்புகள், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

பட மூலாதாரம், TNDIPR
டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் நள்ளிரவில் பதவியேற்றுக்கொண்டார்.
அதற்குப் பிறகு, அவர் பதவியிலிருந்து விலகிய நிலையில், ஆட்சியமைக்க வி.கே. சசிகலா உரிமை கோரினார். இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்கவில்லை.
ஆட்சியமைக்க உரிமை கோரிய சில நாட்களிலேயே வி.கே. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி புதிய முதல்வரானார்.
அவருக்கு அளித்துவந்த ஆதரவை தாங்கள் திரும்பப் பெறுவதாக அ.தி.மு.கவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுனர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கூறிய நிலையில், அது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
"அது அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரம்" என ஆளுநர் தங்களிடம் கூறியதாக அவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
மிகக் குறைந்த காலகட்டத்தில் மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய சி. வித்யாசாகர் ராவ், ஆளுநர் மாளிகையை பொதுமக்களும் பார்வையிட அனுமதித்தார். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாமல் இருந்த நிலையில், அந்த நியமனங்களை அவர் துரிதப்படுத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












