You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய பட்ஜெட் 2024: கோவை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?
- எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரனோ தாக்கம், மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அடுத்தடுத்து பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கோவை மாவட்ட தொழிற்துறையினருக்கு மத்திய பட்ஜெட் நிம்மதியையும், நம்பிக்கையையும் அளிப்பதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க அரசு தன் முதல் பட்ஜெட்டை வரும் ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது.
முதல்முறையாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், நூற்றுக்கணக்கான நூற்பாலைகள், இயந்திர, மற்றும் வாகனத் தளவாடத் தயாரிப்புத் தொழிற்சாலைகள், மோட்டார் பம்ப் செட், கிரைண்டர் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி சார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 2 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் சுமார் 25 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகவாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு தனி துறை
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முன்னுரிமை பெற்ற துறையாக அறவிக்கப்பட வேண்டும் என, கோவை மாவட்ட சிறுதொழில் கூட்டமைப்பு (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
"இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39 சதவீத பங்களிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அரசு கூடுதல் கவனம் செலுத்தி சலுகைகளை வழங்கினால் இது 45 சதவீதமாக உயரும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும்" என்றார் அவர்.
எம்.எஸ்.எம்.இ ஏற்றுமதி துறையில் 40 முதல் 45 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும் இதுமேலும் 5 சதவிகிதம் உயர்ந்தாலே இந்திய அரசின் 5 டிரில்லியன் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் பொருளாதாரம் நோக்கிய பயணத்தை சாத்தியப்படுத்த எம்.எஸ்.எம்.இக்களால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.
"நாட்டின் 40 சதவீத தொழிலாளர்கள் இவற்றின் மூலமே வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு, வருவாய், ஏற்றுமதி என அனைத்திலும் முக்கிய பங்களிப்பை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அளித்து வருகின்றன" என்றார் அவர்.
தொழிற்கடன் பெறுவதில் சிக்கல்
இந்திய அளவில் 14 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே வங்கிகள் மூலம் கடன் பெறுகின்றன.
"சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் வாயிலாக கடன் கிடைப்பதில்லை. சிறுகடன்களுக்கு தேசிய அளவில் ரூ.37 லட்சம் கோடி அளவிற்கு பெறுவதற்கான இடைவெளி உள்ளது. 86 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறுகடன்களுக்காக தனியார் நிதி நிறுவனங்களையே சார்ந்துள்ளன" என்கிறார் கார்த்திகேயன்.
சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான விதிகளை தளர்த்தினால் இந்த நிலை நிச்சயமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதுதவிர, வங்கி கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் குறு நிறுவனங்களுக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தொழில்முனைவோர் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல், மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மிகைப்பற்றை (ஓவர் டிராப்ட்) 40 சதவீதம் முதல் 50 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர் கட்டணத்திற்கான (லேபர் சார்ஜ்) ஜி.எஸ்.டி-யை 5 சதவீதம் அளவிற்கு குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
சோலார் பம்ப் செட் கொள்முதல்
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் 2.50 கோடி சோலார் பம்ப் செட்டுகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 35 லட்சம் பம்ப் செட்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 3.5 லட்சம் பம்ப் செட்டுகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்திய அளவில் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பதற்கேற்ப சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், சிறு, குறு நிறுவனங்களும் இதில் பங்கேற்கும் வகையில் சட்டதிட்டங்களை எளிமையாக்க வேண்டும் என, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
"மூலப்பொருள்கள் விலை உயர்வால் பம்ப் செட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. பம்ப் செட்டுகளுக்கான ஜி.எஸ்.டி வரியை முன்னர் இருந்தது போல 12 சதவீதமாக மாற்றினால் விவசாயிகள் பயனடைவர்" என கூறினார்.
பருத்தி மிஷன் 2.0
"இந்திய டெக்ஸ்டைல் துறை பருத்தி உற்பத்தியை நம்பியே உள்ளது. ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் பருத்தியின் அளவை அதிகரிக்க வேண்டும். தற்போது ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ வரை மட்டுமே இந்தியாவில் பருத்தி உற்பத்தி செய்ய முடிகிறது. அமெரிக்காவில் 840 கிலோ வரை உற்பத்தி செய்ய முடிகிறது," என்கிறார் சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) தலைவர் எஸ்.கே.சுந்தர்ராமன்.
உலக அளவில் குறைவான உற்பத்தி திறனுடையவர்களாக இந்தியா இருப்பதாக அவர் கூறுகிறார். இந்தியாவில் சுமார் 125 லட்சம் ஹெக்டரில் பருத்தி பயிரிடப்படுகிறது. கிட்டத்தட்ட 60 லட்சம் விவசாயிகள் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"விவசாயிகளுக்கு உற்பத்தி பெருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியா டெக்ஸ்டைல்ஸ் துறையில் சிறந்தவர்களாக இருப்போம். அதேபோல், செயலாக்கத்தில் (பிராசசிங்) நாம் பலவீனமாக உள்ளோம். உலகம் தரம் வாய்ந்த பிரசாசிங் கட்டமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து பிரிவுகளையும் பிராசசிங் நோக்கி கவனப்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆடை உற்பத்தி துறையில் ஆற்றல் சேமிப்பை மேற்கொள்ளும் வகையில் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இறக்குமதி ஆடைகளுக்கு அதிக வரி, பருத்தி இறக்குமதிக்கு ஊக்கத்தொகை வழங்குவது அல்லது இறக்குமதி வரியை ரத்து செய்வது பயன் உள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுக்கிறார் தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்க நிர்வாகி பிரதீப்.
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறு மற்றும் குறு தொழில்கள் தான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், துறையை ஊக்குவிக்கவும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான வருமான வரியை முறையே 15% மற்றும் 20% அளவிற்கு குறைக்க வேண்டும் என்கிறார், தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க பொது செயலாளர் வாசுதேவன்.
"மூலதன மானிய கடன் வழங்குவதன் மூலம் சிறு, குறு தொழிற்துறையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை மேற்கோள்ள முடியும். தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மானியத்தை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். சர்பயாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ரூ.2 வரையிலான கடன்களுக்கு சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும். இதனால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள குறு நிறுவனங்கள் புத்துயிர் பெறும்" என்றார் வாசுதேவன்.
மத்திய சிறு, குறு, நடுத்தர அமைச்சகம் மற்றும் பொது நிறுவனங்களுக்கான கொள்முதல் கொள்கையில் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கொள்முதல் அளவை 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த பிரீமியம் கொண்ட காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்
புதிய தொழில்களுக்கு சிறப்பு கவனம்
லித்தியம் பேட்டரி செல் இறக்குமதி வரி ஐந்து சதவிகிதமாக இருந்த நிலையில் அதனை மத்திய அரசு 10 சதவிகிதமாக உயர்த்தியது.
"ஆனால் இந்தத் தொழிலுக்கான தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் கிடைக்கப்பெறாத காரணமாக முழுமையான லித்தியம் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவில் இங்கு இல்லை," என, கோவையில் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரமோத் மாதவன் தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை நடைமுறைப்படுத்த மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அவர் கூறினார்.
"இந்தியாவில் இப்போது லித்தியம் பேட்டரிகளின் தேவை அதிகமாக உள்ளது. 2052க்குள் பேட்டரிகளின் தேவை 2500 ஜிகா வாட்ஸாக இருக்கும். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பேட்டரி அளவானது 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேவைக்கு ஒரு சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் சீனாவை விடை அதிகமான தேவை இந்தியாவிற்கு இருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் அரசு செல்களுக்கான இறக்குமதி வரியை மாற்றி அமைக்க வேண்டும். ஏனெனில் செல்கள் தான் பேட்டரியின் முக்கிய பயன்பாடாக உள்ளது" என்றார் பிரமோத் மாதவன்.
செல்களின் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்திலிருந்து ஏற்கனவே இருந்தது போன்று 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மானியம் வழங்கப்பட்டால் உற்பத்தி அதிகரித்து டீசலின் பயன்பாடு குறைந்துவிடும், பேட்டரி பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி வரம்பிற்குள் மின்சாரம், பெட்ரோல்
மத்திய அரசின் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட 16.8 சதவிகித மூலதன செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய கொள்கை மற்றும் மக்கள் தொடர்புத் தலைவர் புஷ்பேந்திர சுக்லா கோரிக்கை விடுக்கிறார்.
இதனால், இந்திய ஜிடிபியில் 16 சதவிகித பங்களிப்பை தந்து வரும் உற்பத்தித்துறையின் பங்களிப்பு 25 அளவிற்கு உயர வாய்ப்புள்ளது என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தவிர, மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும், தொழில் சட்டங்களை குற்றவியல் தன்மையில் இருந்து மாற்றுவதற்கான கவனத்தைச் செலுத்த வேண்டும், பசுமை தொழிற்சாலைகளுக்கான ஊக்குவித்தல்களை வழங்க வேண்டும், நீர் பாதுகாப்பிற்கான தேசிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்துகிறார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன ?
"தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். பொதுமக்களை அதிகம் பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் வகையில் வருமான வரி வரம்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும்," என கோவையைச் சேர்ந்த கே.கணேஷ் தெரிவிக்கிறார்.
ஊதியம் அதிகரித்திருந்தாலும், விலைவாசி உயர்வால் வருமானத்திற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வருமான வரிச் சுமையும் அவர்களை அதிகம் பாதிக்கும் நிலையே தற்போது உள்ளது, எனவே வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மெட்ரோ ரயில், விளாங்குறிச்சியில் ரூ.1,100 கோடி மதிப்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா, கலைஞர் நூலகம், ஒலிம்பிக் பயிற்சி மையம் , உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம், தோழி விடுதிகள் திட்டம், இலவச வை-பை வசதி என தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் கோவை மாவட்டத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்பட்டன.
சட்டப்பேரவையில் நடந்த தொழில்துறை மானிய கோரிக்கையின் போது கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் துவங்கப்படும் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்திருந்தார். அதேபோல், "ஊட்டியில் மலைவாழ் மக்களுக்காக ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த சிறப்பு இந்தியாவிலேயே வேறு எங்கும் கிடையாது," எனத் தெரிவித்திருந்தார்.
பெரு நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமை, தொழிற்துறையினரை பாதிக்கும் வரி விதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விகிதங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஸ்திரமான அறிவிப்புகள் இல்ல்லாமை, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் புறக்கணிப்பு போன்ற விமர்சனங்கள் கடந்த கால மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எழுந்தன.
தற்போது மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் 2024-25-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)