You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரப் பிரதேச பாஜகவில் அதிருப்தியா? யோகி ஆதித்யநாத்தை சுற்றி என்ன நடக்கிறது?
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா புதன்கிழமை தெரிவித்த கருத்துக்கள் அந்த மாநில அரசியலில் சர்ச்சைகளையும் ஊகங்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது என்ற வதந்திகளுக்கும் ஊக்கம் கிடைத்துள்ளது.
புதன்கிழமை மாலை முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளுநர் ஆனந்திபென் படேலை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக கேசவ் பிரசாத் மெளரியா சமூக ஊடக தளமான எக்ஸில், "அரசை விட அமைப்பு பெரியது. தொண்டர்களின் வலி என்னுடைய வலி, அமைப்பை விட யாரும் பெரியவர்கள் இல்லை. தொண்டர்தான் நம்முடைய பெருமை," என்று பதிவிட்டார்
மெளரியாவின் கருத்து மற்றும் பாஜகவில் நடந்து வரும் கூட்டங்களுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவும் நடந்துவரும் இந்த விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
ஞாயிற்றுக்கிழமை லக்னெளவில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கேசவ் பிரசாத் மெளரியா உரையாற்றினார்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் கே.பி.மௌரியாவின் பதிவின் வார்த்தைகள் அவரது ஞாயிற்றுக்கிழமை உரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
அந்த கூட்டத்தில் கேசவ் பிரசாத் மெளரியா, அரசை விட அமைப்பு பெரியது என்றும் எப்போதும் பெரியதாகவே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
"எனது குடியிருப்பு - 7, காளிதாஸ் மார்க்கின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்திருக்கும். நான் முதலில் ஒரு தொண்டன். அதன் பிறகுதான் துணை முதல்வர்,” என்று அவர் எழுதினார்.
மேலும் எல்லா எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜேபி நட்டாவுடன் சந்திப்பு
சமூக ஊடகங்களில் கேசவ் பிரசாத் மெளரியாவின் இடுகை ஊகங்களுக்கு வழிவகுத்ததற்கு ஒரு முக்கியகாரணம், அந்த இடுகையின் நேரம்.
இந்தப்பதிவை எழுதுவதற்கு ஒரு நாள் முன்பு கேசவ் பிரசாத் மெளரியா, டெல்லியில் கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தலைப்புச் செய்திகள் வெளியான நேரத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆனால் இந்த சந்திப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சித்தரப்பில் இருந்தும், கேசவ் பிரசாத் மெளரியா தரப்பில் இருந்தும் எதுவும் கூறப்படவில்லை.
உத்தரபிரதேசத்தில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களும் இது குறித்து மெளனம் காத்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் லக்னெள இடையே உரசல்?
“முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பணி செய்யும் பாணி அவரை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதில் அவர் தன்னைத் தவிர அமைப்பு அல்லது அமைச்சரவையில் யாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யோகி காரணமாக தேர்தலில் பலன் கிடைக்கும் என்று நினைத்ததால்தான் மக்கள் இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தனர்,” என்று உத்தரபிரதேச அரசியலை நன்கு புரிந்து கொண்ட மூத்த பத்திரிக்கையாளர் ராம்தத் திரிபாதி, பிபிசியின் சந்தீப் சோனியிடம் தெரிவித்தார்.
மக்களவைத்தேர்தலில் பா.ஜ.கவின் இடங்கள் குறைந்துவிட்டன. இதனால் மக்கள் வெளிப்படையாக குரல் எழுப்புகின்றனர் என்று அவர் தெரிவித்தார். அப்படிப்பட்டவர்களை கேசவ் பிரசாத் மெளரியா வழிநடத்திச் செல்வதாகத் தெரிகிறது. 2017 ஆம் ஆண்டில் மெளரியா பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தார், அவரது தலைமையில் அக்கட்சி முழு பெரும்பான்மையுடன் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை அமைத்தது.
"என்ன நடந்தாலும் அதில் கட்சி உயர் தலைமையின் கை உள்ளது என்று நம்பப்படுகிறது. கேசவ் பிரசாத் மெளரியாவாக இருந்தாலும் அல்லது பூபேந்திர செளத்ரியாக இருந்தாலும் அவர்களுக்கு டெல்லியில் இருந்துதான் ஊக்கம் கிடைக்கிறது என்று கருதப்படுகிறது," என்று ராம்தத் திரிபாதி குறிப்பிட்டார்.
பாஜக அரசை தாக்கும் அகிலேஷ்
“இந்த அதிகாரப் போராட்டத்தால் உத்தரப்பிரதேச மக்கள் தவிக்கின்றனர்,” என்று லக்னெளவில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மாநில பாஜக அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பல முடிவுகளை குறிப்பிட்டுப்பேசிய அவர், "அரசு எடுக்கும் எல்லா முடிவுகளும் அவசரத்தனமாக உள்ளது. டிஜிட்டல் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர்களை துன்புறுத்துவதற்காகவே அரசு முடிவு செய்துள்ளது. சமாஜ்வாதி கட்சி அதை எதிர்க்கிறது," என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு லக்னெளவின் அக்பர்நகரில் சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியை நிர்வாகம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பந்த் நகரிலும் விதிமீறல் கட்டுமானங்களை இடிக்க அரசு முடிவு செய்தது.
ஆனால் இந்த முடிவை யோகி அரசு திரும்பப் பெற்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், “இந்த அரசு பலவீனமாக உள்ளது. அதனால்தான் அந்த முடிவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது திரும்ப பெறப்படவில்லை. பாஜகவினர் தங்களுக்குள் சண்டையிட்டு, நாற்காலிக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அழித்துவிட்டனர் என்று மாநில மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
முதல்வர் யோகியை தாக்கிய அகிலேஷ், "ஊழல் நடப்பதாக அவரது எம்.எல்.ஏ.க்களும், மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். தரகு வேலை பெரிய அளவில் நடப்பதாக முதலமைச்சரே ஒப்புக் கொள்வதாக நாளிதழ்களில் படிக்கிறோம்," என்றார்.
அகிலேஷ் யாதவின் கருத்துக்கு கேசவ் பிரசாத் மெளரியா எதிர்வினையாற்றியுள்ளார்.
"சமாஜ்வாதி கட்சியின் தைரியசாலி அகிலேஷ் யாதவ் அவர்களே, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின், வலுவான அமைப்பு மற்றும் அரசு உள்ளது. சமாஜ்வாதி கட்சி மக்களிடம் காட்டும் அன்பு ஒரு வெளி வேஷம். உத்திரபிரதேசத்தில் அக்கட்சியின் குண்டர் ஆட்சி மீண்டும் அமைவது சாத்தியமற்றது. பாஜக 2017 சட்டப்பேரவை தேர்தலில் சாதித்ததை 2027 தேர்தலில் மீண்டும் செய்துகாட்டும்," என்று அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் எழுதியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)