பாலமேடு ஜல்லிக்கட்டு: நடிகர் சூரியின் காளை வெற்றி

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.

பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். துணை முதலமைச்சர் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. காலை 9 மணிக்கு ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது.

முதல் சுற்று தொடங்கிய நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்குச் சென்றார். பின்னர் அவர் கொடியசைக்க மற்ற காளைகள் திறந்து விடப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்க்க நடிகர் சூரி வந்திருந்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்றிருந்த அவருடைய காளை வெற்றி பெற்றது.

மூன்றாவது சுற்று நிலவரம்

பாலமேடு ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்றில் களம் கண்ட 295 காளைகளில் 45 காளைகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

பிரபாகரன், பொதும்பு - 11

தமிழரசன், சின்னப்பட்டி - 6

துளசிராம், மஞ்சம்பட்டி - 4

மூன்றாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

பிரபாகரன், பொதும்பு - 11

ஶ்ரீநாத், விக்கிரமங்கலம் - 2

இரண்டாவது சுற்றின் முடிவில்

காலை 12.00 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு வந்த 239 காளைகளில், 238 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இரண்டாவது சுற்று முடிவில், 3 மாடுபிடி வீரர்கள், 2 உரிமையாளர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர்.

வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள்

பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 ஆம்புலன்ஸ்கள் , 2 பைக் ஆம்புலன்ஸ்கள் , ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு