You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் வலுக்கும் இந்தியா, சீனா மோதல் - முழு பின்னணி
- எழுதியவர், தில்னாவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு மீதான தனது பிராந்திய உரிமையை திங்கள் கிழமையன்று மீண்டும் உறுதிப்படுத்திய சீனா, அந்தப் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் தனது உள்கட்டமைப்புத் திட்டங்கள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்று கூறியுள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு தொடர்பான இந்தியாவின் ஆட்சேபனைகளை நிராகரித்த சீனா, இது குறித்து இந்தியா எந்தவித கேள்வியையும் எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனாவின் கட்டுமானப் பணிகளைக் கடுமையாக விமர்சித்த இந்தியா, அது இந்திய பகுதி என்றும், தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்றும் கடந்த ஜனவரி 9ஆம் தேதி கூறியிருந்தது.
கடந்த 1963ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கின் 5,180 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியது. பாகிஸ்தான், சீனா இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என இந்தியா கருதுகிறது.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி செவ்வாய்க் கிழமையன்று அளித்த அறிக்கையில், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கைப் பொறுத்தவரை, 1963இல் பாகிஸ்தான், சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என இந்தியா கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
"ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் நடைபெறும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா சொல்வது என்ன?
ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், "ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. 1963ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று சொல்லப்படுவதை நாங்கள் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது. இந்தியா அதை முழுமையாக நிராகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதியின் வழியாகச் செல்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்" என்று கூறினார்.
"ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் தற்போதைய நிலையை மாற்ற முயலும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக சீனாவிடம் இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு," என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் பதிலடி
இதற்கிடையில் பெய்ஜிங்கில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "நீங்கள் குறிப்பிடும் பகுதி சீனாவின் ஒரு பகுதி," என்றார்.
மேலும், "தனது சொந்தப் பகுதியில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது சீனாவின் நியாயமான உரிமை. 1960களில் சீனாவும் பாகிஸ்தானும் எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எல்லையை நிர்ணயித்தன. இறையாண்மை கொண்ட நாடுகளாக இது சீனா மற்றும் பாகிஸ்தானின் உரிமை" என்று அவர் கூறினார்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்த இந்தியாவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த மாவோ நிங் இந்த விவகாரத்தில் சீனாவின் முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அப்போது, "இதுவொரு பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி. உள்ளூர் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுமே இதன் நோக்கம். இந்த ஒப்பந்தங்கள் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது," என்று அவர் தெரிவித்தார்.
சீனா அடிக்கடி கூறும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டின்படி, "ஜம்மு-காஷ்மீர் விவகாரம் ஒரு வரலாற்றுப் பிரச்னை. இது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்."
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் தொடர்பாக சீனாவும் பாகிஸ்தானும் 1963இல் எல்லை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. அதற்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே தெளிவான எல்லைக் கோடு இருக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பிறகு, தொடர்புடைய இறையாண்மை அதிகாரிகள் சீன அரசுடன் முறையான எல்லையை நிர்ணயிக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு எங்கே உள்ளது?
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு என்பது லடாக்கின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் முக்கியமானதொரு பகுதி. இப்பகுதி சியாச்சின் பனிப்பாறைக்கு வடக்கே, காரகோரம் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ளது.
இப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இது இந்தியாவின் அதிகார வரம்புக்கு உட்பட்டது எனவும் இந்தியா கூறுகிறது. இந்தியாவின் அதிகாரபூர்வ வரைபடத்தில், இப்பகுதி நாட்டின் மிக வடக்கு முனையில் அமைந்துள்ளது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கின் நிலவியல் மற்றும் வரலாற்றுத் தன்மைகள் குறித்து பிரிட்டிஷ் நிலவியலாளரும் இந்திய சர்வே அதிகாரியுமான கென்னத் மேசனின் விளக்கம் இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
கடந்த 1926இல் வெளியிடப்பட்ட அவரது புகழ்பெற்ற 'Exploration of the Shaksgam Valley and Aghil Ranges' என்ற அறிக்கையில் கென்னத் மேசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கும் அதன் மேல்புறத் துணைப் பள்ளத்தாக்குகளும் இந்த எல்லைப் பகுதியின் 'கடைசியாக முழுமையாக அறியப்படாத இடங்களாக' இருந்தன. இங்கு நீண்ட காலத்திற்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் நிரந்தர இருப்பும் இருந்ததில்லை."
மேசனின் கூற்றுப்படி, இப்பகுதி "மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் நீரியல் அமைப்புகளைப் பிரிக்கும் முக்கியப் பகுதியாக உள்ளது. இங்கிருந்து ஆறுகள் வடக்கே யார்கண்ட் நோக்கியும், தெற்கே சிந்து நதி நோக்கியும் பாய்கின்றன."
கிட்டத்தட்ட நூறாண்டு பழமையான அவரது புத்தகத்தில், "ஷக்ஸ்காம் போன்ற கடினமான நிலப்பரப்பில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று" என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதோடு, "மனிதர்கள் இங்கு வந்திருந்தாலும், அவர்கள் வெறும் வழிப்போக்கர்களாகவோ, நாடோடிகளாகவோ மட்டுமே இருந்துள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரந்த, அறியப்படாத, அணுக முடியாத மலைப் பகுதி
இமயமலை மற்றும் காரகோரம் பகுதிகளில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மலையேற்ற வீரரும், கண்டுபிடிப்பாளருமான எரிக் ஷிப்டன், 1937இல் ஷக்ஸ்காம் பகுதி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், "ஷக்ஸ்காம் நதியைச் சுற்றியுள்ள பகுதி லடாக், ஹன்சா, ஜின்ஜியாங் ஆகியவற்றின் வரையறுக்கப்படாத எல்லைகளில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி நீண்ட காலமாக வரைபடங்களில் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது."
ஷக்ஸ்காம் பகுதி பரந்த, கிட்டத்தட்ட எவருக்கும் தெரியாத மலைப்பகுதி என்று குறிப்பிட்ட ஷிப்டன், "ஆசியாவின் முக்கிய நீர்ப்பிரிப்பு பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள இந்த உயர்ந்த மலைப் பகுதி, ஷக்ஸ்காம் நதியால் சூழப்பட்ட சுமார் ஆயிரம் சதுர மைல் பரப்பளவிலான பெரிய அறியப்படாத நிலப்பரப்பாக இருந்தது," என்று எழுதியுள்ளார்.
மேலும், ஷிப்டன் ஜுக் ஷக்ஸ்காம் நதி மற்றும் பள்ளத்தாக்கை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "ஜுக் ஷக்ஸ்காம் நதியின் கீழ் பகுதிகளை ஆராய்வது மிக முக்கியமானது - இந்தப் பகுதி இதற்கு முன்பு முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை."
எரிக் ஷிப்டனுக்கு இந்தப் பயணம் மிகவும் சவாலானதாக இருந்தது. வெளியில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில், பல மாதங்கள் தனது குழுவினர் தங்களையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது என்று அவர் எழுதியுள்ளார்.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குகளை விவரிக்கும் ஷிப்டனின் அறிக்கை, "ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குகள் ஆழமானவை, குறுகலானவை, வெள்ளப் பெருக்கின்போது கிட்டத்தட்ட கடந்து செல்ல முடியாதவை. இந்தப் பகுதியில் ஆண்டின் சில மாதங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும்" என்று அவர் விவரித்துள்ளார்.
மேசன், ஷிப்டன் ஆகியோரின் இந்தத் தகவல்கள், இப்பகுதி வரலாற்று ரீதியாக எந்தவொரு நாட்டின் நிரந்தர நிர்வாகத்தின் கீழும் இருந்தது இல்லை என்ற வாதத்தை முன்வைக்க இந்தியாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும், நவீன சர்வதேச எல்லைகள் என்பது காலனித்துவ காலத்துப் பயணக் குறிப்புகளைக் காட்டிலும், அரசியல் மற்றும் ராஜதந்திர ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
மூலோபாய முக்கியத்துவம்
நீண்ட காலமாக இப்பகுதி அணுகுவதற்கு கடினமானதாக இருந்தபோதிலும், மக்கள் நடமாட்டமற்ற இந்த மலைப்பகுதி தற்போது மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இந்தப் பள்ளத்தாக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் புவியியல் ரீதியாக மிக முக்கியமானதாக மாறுகிறது.
பிரிட்டிஷ் புவியியலாளர் கென்னத் மேசன் குறிப்பிட்டது போல, இது மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் நீர் அமைப்புகளுக்கு இடையிலான ஒரு பெரிய இயற்கை நீர்ப் பிரிப்பாக உள்ளது. இங்கிருந்து ஆறுகள் ஒருபுறம் யார்கண்ட் நோக்கியும், மறுபுறம் சிந்து சமவெளி நோக்கியும் பாய்கின்றன.
இன்று இந்தப் புவியியல் அமைப்பு இப்பகுதியை மிகவும் உணர்திறன் கொண்டதாக மாற்றியுள்ளது. இங்கு உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது எல்லைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, சியாச்சின், காரகோரம் மற்றும் ஜின்ஜியாங் பகுதிகளுக்கு இடையிலான ராணுவ மற்றும் தளவாட அணுகலையும் பாதிக்கிறது.
இதன் காரணமாகவே, இந்தியா இதைத் தனது இறையாண்மை தொடர்பான பிரச்னையாகக் கருதுகிறது. அதே நேரம் சீனா இதைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான நடவடிக்கை என்று கூறுகிறது.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சர்ச்சை ஏன்?
கடந்த 1963ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுமார் 5,180 சதுர கிலோமீட்டர் இந்திய பகுதியை சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாக இந்தியா கூறுகிறது. அந்த நேரத்தில் இப்பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்ததால், இந்த ஒப்பந்தம் செல்லாதது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது என்பது இந்தியாவின் வாதம்.
இந்தியா இந்தப் பகுதி முழுமைக்கும் உரிமை கோருகிறது. ஆனால், பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு இப்பகுதி தனக்கே சொந்தம் என்று சீனா கூறுகிறது.
தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு சீனா பல உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
டிரான்ஸ்-காரகோரம் டிராக்ட் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் பொது நிர்வாகம் சீனாவின் கையில் உள்ளது. சீனா இதை ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கிறது.
சமீபத்திய செய்திகளின்படி, சீனா இப்பகுதியில் புதிய சாலைகள், பாதுகாப்புச் சாவடிகள் மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கீழ் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு