You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

    அமலாக்கத் துறையின் (ED) மனு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    லைவ் லா (Live Law) தளத்தின்படி, ஐ-பேக் வளாகத்தில் நடந்த சோதனையின்போது நடந்ததாகக் கூறப்படும் குறுக்கீடு தொடர்பாக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மற்றும் டிஜிபி, காவல்துறை ஆணையர், காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐ-பேக் வளாகத்தில் நடந்த விசாரணையின்போது, மேற்கு வங்க ​​முதலமைச்சர் மற்றும் மாநில அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அமலாக்கத் துறை விசாரணையில் தலையிட்டு தடுத்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    லைவ் லா செய்தியின்படி, "இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு பிப்ரவரி 3, 2026 அன்று எடுத்துக் கொள்ளப்படும். இடைப்பட்ட காலத்தில், பிரதிவாதிகளான மேற்கு வங்க அரசு, ‘ஐ-பேக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான காட்சிகளைக் கொண்ட அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பாதுகாக்க வேண்டுமென’ அறிவுறுத்தப்படுகிறது" என நீதிமன்றம் கூறியது.

    நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐ-பேக் தொடர்பாக விசாரிக்க வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மேற்கு வங்க காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

  2. பொங்கல் திருநாளையொட்டி 5 டன் செங்கரும்பில் உருவாக்கப்பட்ட 21 அடி உயர தேர்

    காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒவ்வோர் ஆண்டும் செங்கரும்புகளைக் கொண்டு பிரமாண்ட பானை, ஜல்லிக்கட்டுக் காளை, பாரம்பரிய குடிசைக் குடில், மாட்டு வண்டி எனப் பல்வேறு விதமான வடிவங்களை உருவாக்கி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.

    இந்த ஆண்டு அவரது குடும்பத்தினர் சார்பாக 5 டன் செங்கரும்புகளைக் கொண்டு 21 அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்ட ஒரு தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்தத் தேரின் முன்பு இன்று (ஜனவரி 15) பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைத் தமது குடும்பத்துடன் செந்தில் குமார் கொண்டாடினார்.

    ஐந்து டன் எடை கொண்ட செங்கரும்பினால் உருவாக்கப்பட்ட தேர் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தேரை தயாரித்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    செங்கரும்பிலான மிகப்பெரிய தேரை, ஏராளமான கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

  3. ‘இரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது’ - அமெரிக்க அதிபர் டிரம்ப்

    “போராட்டக்காரர்களுக்கு 'மரண தண்டனைகளை' நிறைவேற்றுவது தொடர்பான திட்டங்கள் எதுவும் இரானிடம் இல்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    இது குறித்து புதன்கிழமை பேசிய டிரம்ப், "இரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படுவதாகவும், மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நம்பகமான ஆதாரங்களின் மூலம் நான் பெற்றுள்ளேன்" என்றார்.

    முன்னதாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13), “இரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா அதற்கு எதிராக ‘மிகவும் கடுமையான நடவடிக்கை’ எடுக்கும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    இரானில் கடந்த வாரம் நடந்த போராட்டங்களின்போது, 26 வயதான எர்ஃபான் சுல்தானி கைது செய்யப்பட்டார். சுல்தானி புதன்கிழமை தூக்கிலிடப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் பிபிசியின் பாரசீக சேவையிடம் தெரிவித்தனர்.

    இரானின் தலைநகர் டெஹ்ரான் அருகே நடந்த போராட்டங்களில் சுல்தானி பங்கேற்றதாகவும், அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  4. ஜனநாயகன்: மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    ஜனநாயகன் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் வழங்குவது தொடர்பான மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

    ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தயாரிப்புத் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த ஒரு நீதிபதி அமர்வு படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது.

    அந்த உத்தரவை எதிர்த்து, வாரியத்தின் சார்பில் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஒரு நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    தயாரிப்புத் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

    இந்த மனு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மசி தலைமையிலான அமர்வு விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 20ஆம் தேதி மனுவை விசாரித்து முடிவுசெய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறது.

  5. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திய ஷஃபாலி வெர்மா; டெல்லிக்கு முதல் வெற்றி

    வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதிரடி பேட்டர் ஷஃபாலி வெர்மா இந்தப் போட்டியில் பந்துவீச்சிலும் சோபித்து தன் அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார்.

    நேற்று நடந்த போட்டியில், யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுமே தங்கள் முதலிரு போட்டிகளில் தோற்றிருந்தன.

    டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மரிசான் காப் வீசிய முதல் ஓவரிலேயே கிரண் நவ்கிரே ஆட்டமிழந்தார். ஆனால், அதன்பிறகு மெக் லேனிங், ஃபீபி லிட்ச்ஃபீல்ட், ஹர்லீன் தியோல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் அந்த அணி சிறப்பாக ரன்குவித்து வந்தது. ஆனால், அரைசதம் அடித்த லெனிங் அவுட் ஆன பிறகு அந்த அணி தடுமாறத் தொடங்கியது.

    ஷஃபாலி வெர்மா பந்துவீச வந்ததும் வாரியர்ஸின் ரன் விகிதம் வெகுவாகக் குறைந்தது. சிறப்பாகப் பந்துவீசிய ஷஃபாலி, 4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதனால் யு.பி.வாரியர்ஸால் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த இன்னிங்ஸில் 17வது ஓவர் முடிந்த பிறகு ரன் விகிதம் குறைந்துகொண்டிருந்ததால் ஹர்லீன் தியோலை வாரியர்ஸ் அணி ரிட்டையர் அவுட் செய்தது. இது இந்தப் போட்டியில் பெரும் பேசுபொருளாக அமைந்தது.

    அடுத்து 155 என்ற இலக்கை சேஸ் செய்த டெல்லி அணிக்கு ஷஃபாலி வெர்மா, லிசெல் லீ இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த இணை 11.3 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் அசத்திய ஷஃபாலி, 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த லீ, இந்தப் போட்டியிலும் அரைசதம் அடித்தார். அவர், 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வாரியர்ஸ் பௌலர்கள் சிக்கனமாகப் பந்துவீசியதால் ஆட்டம் பரபரப்பானது. இருந்தாலும், கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து டெல்லி அணியை வெற்றி பெறவைத்தார் லாரா வோல்ஃபார்ட்.

    இந்த சீசனில் டெல்லி அணி பெற்ற முதல் வெற்றி இது. ஷஃபாலி வெர்மா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார். யு.பி.வாரியர்ஸ் அவர்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றிருக்கிறது.

  6. கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை

    அமெரிக்காவின் கத்தார் தூதரகம், தனது ஊழியர்களுக்கும் அமெரிக்க குடிமக்களுக்கும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    “பிராந்தியத்தில் தொடரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும், அல்-உதெய்த் விமானப்படை தளத்துக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. கத்தாரில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களும் இதேபோல் செயல்படுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலவரத்தை தாங்கள் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

    இதற்கு முன்னர்,கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் - உதெய்த் விமானத் தளத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது எனவும், இதை அதிகாரிகள் “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று குறிப்பிட்டுள்ளனர் எனவும் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் கூறியுள்ளது..

    பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, கத்தாரிலிருந்து சில பிரிட்டன் படைகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

    டிசம்பர் 28 முதல் இரானில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நிலையை எதிர்த்து தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது வன்முறையாக மாறியுள்ளன.

    இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

  7. பணி நிரந்தரம் கோரி போராடிவந்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு

    பணி நிரந்தரம் கோரி போராடிவந்த பகுதி நேர ஆசிரியர்களில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரான சி. கண்ணன் என்பவர் உயிரிழந்திருக்கிறார்.

    கண்ணன் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் தள்ளப்பட்டுள்ளார் என பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்,

    தமிழக அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 12 ஆயிரம் பேர் பணியாற்றிவருகின்றனர். தங்களைப் பணி பணி நிரந்தரம் கோரி இவர்கள் கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் போராடிவருகின்றனர். இவர்களை அவ்வப்போது காவல்துறை கைது செய்து விடுவித்து வந்தது.

    அதேபோல, ஜனவரி 13ஆம் தேதியும் இவர்கள் கைது செய்யப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

    வானகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றிலும் சிலர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரம்பலூர் மாவட்டம் என். புதூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பணியாற்றிவந்த 49 வயதான சி. கண்ணன் என்பவரும் ஒருவர்.

    அவர் 13ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த கண்ணனுடன் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசி, "அவர் எதைக் குடித்தார் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. வாந்தி எடுத்ததும் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் 14ஆம் தேதி காலையில் பகுதி நேர ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 12,500லிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அளிப்பதாக அறிவித்தார். இருந்தபோதும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்திவந்தனர்.

    இந்த நிலையில்தான் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த கண்ணனுக்கு மனைவியும் பள்ளியில் படிக்கும் மகனும் உள்ளனர்.

    ''பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ₹2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, எந்தக் கவலையும் இல்லை" என தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    ''பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் உடனடியாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்த கண்ணனின் உடல் வைக்கப்பட்டுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

  8. கத்தார் தளத்தில் இருந்து வீரர்களை வெளியேற்றும் அமெரிக்கா - காரணம் என்ன?

    அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியதற்காக இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வரும் நிலையில் கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்தில் உள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை அமெரிக்காவும் பிரிட்டனும் குறைத்து வருகின்றன.

    அல் உதெய்த் விமானத் தளத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது எனவும், இதை அதிகாரிகள் “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று குறிப்பிட்டுள்ளனர் எனவும் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் கூறியுள்ளது.

    தற்போதைய பிராந்திய பதற்றங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கத்தார் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அரசு அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அமெரிக்கா “மிகவும் கடும் நடவடிக்கை” எடுக்கும் என்று கூறியிருந்தார்.

    அதே நேரத்தில், அமெரிக்கா தாக்கினால் தாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று இரான் தெரிவித்துள்ளது.

    மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி, இரான் அரசின் போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில், 2,400-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  9. ‘இந்தியர்கள் இரானை விட்டு வெளியேற வேண்டும்’- இந்திய தூதரகம் அறிவிப்பு

    இரானில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியக் குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    "சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இரானில் உள்ள இந்தியர்கள் (மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்) வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் இரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

    இது தவிர, போராட்டம் நடக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்கவும், இரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பைப் பேணவும், எந்தவொரு முன்னேற்றத்தையும் கண்காணிக்கவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இரானுடனான அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்கா ஏற்கனவே தனது குடிமக்கள் இரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    ஒரு நாள் முன்னதாக, கனடாவும் தனது குடிமக்களுக்கு இரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தலை வெளியிட்டது.

    கடந்த சில வாரங்களாக இரானில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

  10. ஐசிசி ஒருநாள் போட்டி தர வரிசை - கோலி மீண்டும் முதலிடம்

    ஐசிசி ஒருநாள் போட்டி தர வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) புதிய ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் 785 புள்ளிகள் எடுத்து கோலி 11-வது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மா, கடந்த போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் 10-வது இடத்திலும் அப்படியே தொடர்கின்றனர்.

  11. 'ஜனநாயகன்' தாமதம் பற்றிய கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில்

    டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோதியுடன் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை மக்கள் புரிந்து கொண்டு சரியான விதத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

    “நாங்கள் சொல்ல நினைத்த செய்தி மக்களைச் சென்று சேர்கிறது. படத்தை முழுமையாகப் பார்த்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்,” என்றார்.

    பராசக்தி படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன், “படத்தில் எந்த பரப்புரையும் இல்லை, எனக்கும் எந்தப் பரப்புரை நோக்கமும் இல்லை. அவர்கள் புரிந்துகொள்வார்கள், இரண்டாவது முறை பார்க்கும்போது நிச்சயம் புரிந்து கொள்வார்கள். அனைவரும் எங்களின் சகோதரர்கள் தான். நாங்கள் கூடுதலாக எதுவும் கூற முயற்சிக்கவும் இல்லை.” என்றார்.

    தவெக தலைவர் விஜய் மற்றும் ஜன நாயகன் பட வெளியீடு தாமதமாவது பற்றி பேசிய அவர், “விஜயின் அரசியல் பயணத்திற்கு தனிப்பட்ட முறையிலும் சமூக ஊடகம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய திரைப்படமும் விரைவில் வெளிவரும்.” என்று மட்டும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.

  12. 'பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு' - அமைச்சர் அன்பில் மகேஷ்

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு, சம ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-இல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளைக் கூறி இதில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் எனக் கூறி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்வித் துறைக்கு வர வேண்டிய 3,548 கோடி ரூபாய் வரவில்லை. அதை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும், உங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டோம். கூடுதல் நிதிச்சமை என்றாலும் பகுதி நேர ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதை ஏற்றுக்கொண்டது.” என்றார்.

    ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “முழு நேரம் மற்றும் பணி நிரந்தரம் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன. அதிகாரிகளும் சில கருத்துகளைத் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகளாக ஆசிரியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை எப்படியாவது பணியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இடைக்காலமாக இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அறிவித்திருக்கிறோம். பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்காகவும் கோரிக்கை வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலிப்போம்.” எனத் தெரிவித்தார்.

  13. மோதியுடன் பொங்கல் விழாவில் பராசக்தி படக் குழு பங்கேற்பு

    பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்ட பொங்கல் நிகழ்ச்சியில் பராசக்தி படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் மோதி. மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி தமிழில் வணக்கம் எனக் கூறி பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ்நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளை கண்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

  14. 'அமெரிக்காவை விட டென்மார்க்கையே கிரீன்லாந்து மக்கள் தேர்வு செய்வர்'

    கிரீன்லாந்து மக்கள் தற்போது முடிவெடுக்க வேண்டுமென்றால் அமெரிக்காவை விடவும் டென்மார்கைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சென் தெரிவித்துள்ளார்.

    டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெட்ரிக்சன் உடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருந்தார். கிரீன்லாந்து விவகாரத்தில் இதுநாள் வரையில் வலுவான எதிர்வினையாக இது பார்க்கப்படுகிறது.

    கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

    ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான பாதுகாப்பிற்கு கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவது அவசியம் என்கிறார் டிரம்ப். கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை வெள்ளை மாளிகை முன்வைத்தாலும் படைகளைப் பயன்படுத்தி கைப்பற்றும் திட்டத்தையும் அமெரிக்கா மறுக்கவில்லை.

    நீல்செனின் கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ள டிரம்ப், "அது அவர்களின் பிரச்னை. நாங்கள் அவர்களுடன் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுக்கு இது பெரிய பிரச்னையாக இருக்கப்போகிறது." எனத் தெரிவித்தார்.

    டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமான, தன்னாட்சி கொண்ட கிரீன்லாந்து சொந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. நேட்டோ உறுப்பு நாடாக டென்மார்க் உள்ள நிலையில் ராணுவத்தைப் பயன்படுத்துவது ட்ரான்ஸ்-அட்லாண்டிக் பாதுகாப்பு கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரும் என டென்மார்க் பிரதமர் எச்சரித்திருந்தார்.

  15. போகி: புகைமூட்டமாக காட்சி தரும் சென்னை - காற்றின் தரம் எப்படி?

    போகியை முன்னிட்டு பழைய பொருட்களை மக்கள் எரித்ததால் சென்னையில் காற்றின் தரம் வழக்கத்தை விட சற்று குறைந்துள்ளது. எனினும் அது மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மக்கள் பழைய பொருட்களை எரித்ததால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் புகை மூட்டம் நிலவுகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றின் 100-150 என்கிற மிதமான நிலையிலே இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரம் 216 என்கிற மோசமான கட்டத்தில் உள்ளது.

    போகியால் ஏற்பட்ட புகையால் காலை 8 மணி நிலவரப்படி, சென்னை விமான நிலையத்தில் தெளிவாக பார்க்கக்கூடிய தூரம் 300 மீட்டராக இருப்பதாகவும் போகப்போக நிலைமை சீரடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.

  16. இரான் போராட்டம்: குறைந்தது 2,000 பேர் பலி என தகவல்

    இரானில் கடந்த சில தினங்களாக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்பெப்போதும் இல்லாத அளவில் வன்முறை நடக்கிறது என இரானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசி பாரசீக சேவை கூறுகிறது.

    கடந்த வாரம் வியாழக்கிழமை இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட பிறகு வன்முறை அதிகரித்துள்ளது.

    ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் மனித உரிமை அமைப்புகளும் போராட்டங்களில் 2,000 முதல் 5,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறுகின்றன. எனினும் சமீபத்தில் தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

    இரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஆதாரங்களை மேற்கோள்காட்டி 12,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என சிபிஎஸ் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை 20,000 வரை அதிகரிக்கலாம் என்றும் சிபிஎஸ் விளக்கம் அளித்துள்ளது.

    இஸ்ரேலிய உளவு அமைப்புகள் பலி எண்ணிக்கை 5,000 எனத் தெரிவிப்பதாக ஆக்சியோஸ் இணையதளம் தெரிவிக்கிறது.

    சமீபத்தில் இரானை விட்டு வெளியேறியவர்கள் அல்லது ஸ்டார்லிங்க் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மருத்துவமனைகளில் அதிக அளவில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பார்ப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

    இரானில் இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்து கூடுதல் தகவல் சேகரிப்பதை கடினமாக்கியுள்ளது.

  17. வணக்கம் நேயர்களே!

    இன்று (14-01-2026) பிற்பகல் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.

  18. இரானை தாக்குவதாக அமெரிக்கா அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது - ரஷ்ய வெளியுறவு அமைச்சகம்

    இரான் மீது புதிய ராணுவ தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க எச்சரித்ததை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது. அதே போல் டிரம்பின் வரி அச்சுறத்தலையும் 'மிரட்டல்' எனக் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் "திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா விமானப்படை இரானின் அணுசக்தி தளங்களை தாக்கிய பிறகு, அந்த நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.

    அத்தகைய நடவடிக்கைகளால் மத்திய கிழக்கிற்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் "பாதகமான விளைவுகள்" ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இரானின் வர்த்தக கூட்டாளிகள் மீது 25% வரி விதிக்கப்படும் என்கிற டிரம்பின் அறிவிப்பிற்குப் பதிலளித்த அவர், "வரிகளை உயர்த்தி இரானின் கூட்டாளிகளை மிரட்டும் முயற்சிகளை நாங்கள் முழுவதுமாக நிராகரிகிறோம்." என்றார்.

    இரானில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், "செயற்கையாக தூண்டப்பட்ட போராட்டங்கள் மெல்ல மறைந்து வருகிறது. நிலைமை படிப்படியாக சீராகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

  19. 'உதவி வந்து கொண்டிருக்கிறது' - இரான் போராட்டம் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    "இரானிய தேசபக்தர்களே போராட்டங்களைத் தொடருங்கள், உங்கள் நிறுவனங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். கொலைகாரர்கள் மற்றும் ஒடுக்குபவர்களின் பெயர்களைப் பாதுகாத்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்கப்போகிறார்கள்," என தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அதில், "போராடுபவர்கள் உணர்வில்லாமல் கொல்லப்படுவது நிற்கும் வரை இரானிய அதிகாரிகளுடனான அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துவிட்டேன். உதவி வந்து கொண்டிருக்கிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சரி, போருக்கும் சரி, இரண்டுக்கும் இரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

  20. இரான்: ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    இரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

    பிபிசி பாரசீக செய்தியாளர் ஜியர் கோல் இந்த தகவலை வழங்கியுள்ளார். "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களில் இருக்கும் என உறுதியாகக் கூற முடியும்." என அவர் தெரிவித்துள்ளார்.

    "அரசு இதற்கு முன்பும் பலத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் இந்த முறை நடந்தது முற்றிலும் வேறானது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்திருக்கலாம் என இரானிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரான ஜெரெமி லாரன்ஸ் "நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஐ.நா ஆதாரங்கள் அடிப்படையிலான கணக்கீடு என்பதால் நம்பத்தகுந்த ஆதாரங்களாகவே உள்ளன." எனத் தெரிவித்தார்.

    இரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 650 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மனித உரிமைகள் அமைப்பு நேற்று அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இந்த புதிய தகவல் வந்துள்ளது.

    போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கண்டறிவது பல்வேறு காரணங்களால் கடினமாக உள்ளது. இரானில் சர்வதேச செய்தி ஊடகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் கடந்த 5 நாட்களாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.