You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்பில் படுத்திருந்த மலைபாம்பு - நள்ளிரவு கண் விழித்த பெண் தப்பியது எப்படி?
- எழுதியவர், டிஃபானி டர்ன்புல்
- பதவி, சிட்னி
திங்கட்கிழமை நள்ளிரவு தனது படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ரேச்சல் ப்ளூர் என்ற ஆஸ்திரேலிய பெண், நள்ளிரவில் தூக்கம் கலைந்தபோது தன்னுடைய மார்பின் மேல் கனமான பொருள் ஒன்று இருப்பதை உணர்ந்தார்.
தனது செல்ல நாய்க்குட்டி தான் தன் மீது படுத்திருக்கிறது என்று நினைத்த அவர், தனது கைகளால் துழாவினார். ஆனால் தொட்டதும் வழுவழுப்பாக இருந்ததும், நெளிந்து கொண்டிருந்ததும் அது தனது நாய்க்குட்டி இல்லை என்று அவருக்கு உணர்த்தியது.
அதிர்ச்சியடைந்த ரேச்சல் ப்ளூர், போர்வையைத் தனது கழுத்து வரை இழுத்துக்கொண்டு அதற்குள் பதுங்கிக் கொண்டார். அருகில் இருந்த அவரது கணவர் படுக்கையருகே இருந்த லைட்டை போட்டபோது, படுக்கையில் இருந்தது பாம்பு என்பது தெரியவந்தது.
'2.5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு'
"அசையாதே. உன் மேல் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படுத்திருக்கிறது என்று கணவர் சொன்னார்," என்று ரேச்சல் ப்ளூர் பிபிசியிடம் தெரிவித்தார்.
முதலில் ரேச்சலின் வாய் உளறியது. சமாளித்துக் கொண்ட அவர், அறையில் இருந்த தனது செல்லப்பிராணிகளை உடனடியாக வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.
"அங்கு பாம்பு ஒன்று இருப்பதை எனது டால்மேஷியன் நாய் உணர்ந்தால்... மோசமான சூழல் ஏற்படும்," என்று ரேச்சல் கூறினார்.
நாய்களை அறைக்கு வெளியே பாதுகாப்பாக அழைத்துச் சென்றார் ரேச்சலின் கணவர்.
படுக்கையில் இருந்த ரேச்சல், தன் மீது படுத்திருந்த பாம்பிடம் இருந்து மெதுவாகத் தன்னை விடுவித்துக்கொள்ளத் தொடங்கினார்.
"மெல்ல மெல்ல போர்வையிலிருந்து வெளியே வர முயன்றேன்... 'இது உண்மையா? இது எவ்வளவு விசித்திரமானது' என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டேன்."
விஷமற்ற அந்த 'கார்ப்பெட் மலைப்பாம்பு', ஜன்னல் கதவுகளின் இடுக்கு வழியாக நெளிந்து உள்ளே வந்து படுக்கையில் விழுந்திருக்கலாம் என்று அவர் நினைக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக மலைப் பாம்பிடமிருந்து நழுவி தப்பிய ரேச்சல், அது வந்த வழியாகவே அதை வெளியே தள்ளத் தொடங்கினார்.
"அது அவ்வளவு பெரியது, என் மேல் அவ்வளவு பெரிய பாம்பு சுருண்டு கிடந்த போதும், அதன் வால் பகுதி ஜன்னலுக்கு வெளியிலேயே நீட்டிக் கொண்டிருந்தது."
"நான் அதனைப் பிடித்தேன், அப்போதும் அது பெரிதாக பயந்ததாகத் தெரியவில்லை. எனது கைக்குள் இருந்தபோதும் அது வழக்கம்போல் இயல்பாகவே நெளிந்தது."
அதிர்ச்சியில் உறைந்திருந்த ரேச்சலின் கணவர் மிகவும் பயந்து போயிருந்தாலும், அவருக்கு இருந்த பயம் ப்ளூருக்கு இருக்கவில்லை.
பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வளர்ந்தவர் என்பதால் அவர் சாதாரணமாகவே இருந்தார்.
"நாம் அமைதியாக இருந்தால், அவையும் அமைதியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்," எனச் சொல்கிறார் ரேச்சல்.
இருப்பினும், தன் வீட்டிற்குள் வந்த பாம்பு ஆஸ்திரேலியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் 'கரும்பு தேரை' எனும் தேரையாக இருந்திருந்தால் கதை மாறியிருக்கும் என்கிறார் அவர்.
"எனக்கு அவற்றை கண்டால் பிடிக்காது, குமட்டல் வரும். எனவே என் வீட்டிற்குள் வந்து என் மீது படுத்திருந்தது தேரையாக இருந்திருந்தால் நான் பயந்திருப்பேன்."
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ரேச்சலுக்கோ, வீட்டில் இருந்தவர்களுக்கோ, அல்லது விலங்குகளுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஓரங்களில் 'கார்ப்பெட் மலைப்பாம்புகள்' பொதுவாகக் காணப்படுகின்றன. இவை நஞ்சற்றவை, பறவைகள் போன்ற சிறிய பாலூட்டிகளை உண்ணும் இனமாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு