'தலைவர் தம்பி தலைமையில்' விமர்சனம் - நடிகர் ஜீவாவின் கம்பேக் திரைப்படமா?

ஜீவா கதாநாயகனாக நடித்து, நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இன்று (ஜனவரி 15) வெளியாகியுள்ளது 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம். இந்தப் படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ், மலையாள சினிமாவில் 2023இல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஃபேலிமி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். 'தலைவர் தம்பி தலைமையில்' அவரது இரண்டாவது திரைப்படம்.

ஜனவரி 30 அன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம், சில நாட்களுக்கு முன்பாக ஜனவரி 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதன் முன்னோட்டமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? நடிகர் ஜீவாவுக்கு இது ஒரு 'கம்-பேக்' திரைப்படமாக அமையுமா? ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கு பார்ப்போம்.

படத்தின் கதை என்ன?

ஜீவரத்தினம் (ஜீவா) மாட்டிப்புதூர் ஊரின் பஞ்சாயத்து தலைவர். அங்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால், தலைவர் என்ற முறையில், கட்சிக்கும் தனக்கும் நற்பெயரை உருவாக்க ஊரில் எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்னின்று அனைத்தையும் செய்கிறார் ஜீவா.

அந்த ஊரில் வசிக்கும் இளவரசுக்கும் (நடிகர் இளவரசு), அவரது அண்டை வீட்டுக்காரர் மணிக்கும் (தம்பி ராமையா) மிகப்பெரிய முன்பகை நிலவுகிறது. இந்நிலையில், தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறார் இளவரசு. அதற்கான பொறுப்பு ஜீவாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஒரு பக்கம் மாப்பிளை வீட்டார் திருமணத்திற்காக கிளம்பி வந்து கொண்டிருக்க, பெண் வீட்டில் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்குகிறார் ஜீவா. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தவிடு (நடிகர் ஜென்சன் திவாகர்) எப்படியாவது இதில் தானும் நற்பெயரைச் சம்பாதிக்க வேண்டுமென முயல்கிறார்.

இத்தகைய சூழலில், பக்கத்துக்கு வீட்டு மணியின் தந்தை மரணமடைகிறார். இது கல்யாணத்திற்குத் தடையாக வந்து நிற்கிறது. தங்களது 'ஈகோ' காரணமாக திருமணமும் இறுதிச் சடங்கும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டுமென இளவரசுவும் மணியும் சண்டையிடுகிறார்கள்.

அதன் பிறகு என்ன ஆனது, இதையெல்லாம் ஜீவா எப்படி சமாளித்தார் என்பதே 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் கதை.

திரைப்படம் எப்படி இருக்கிறது?

"பொதுவாக கிராமங்களை களமாகக் கொண்ட திரைப்படங்களில் நகைச்சுவையான, குழப்பமான சூழல்கள், மனிதர்களை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துவதற்கான சாத்தியங்கள் இருக்கும். நிதிஷ் சகாதேவின் திரைப்படம் அதைச் சரியாகச் செய்கிறது" என இந்தியா டுடே விமர்சனம் பாராட்டுகிறது.

"இரண்டு மணிநேரத்திற்கும் குறைவாக ஓடும் இந்தத் திரைப்படம், கிராமவாசிகளின் பல பரிணாமங்களைச் சித்தரிக்கிறது. ஒருபுறம் நற்பெயர் எடுக்க முயலும் அரசியல்வாதிகள், மறுபுறம் ஒரு திருமண வீடும் அதன் அருகே ஒரு மரணம் நிகழ்ந்த வீடும். இந்த வீடுகளில் தங்கள் அதிகாரத்தை சமயம் பார்த்து நிலைநாட்டும் உறவினர்கள், கிசுகிசுக்களை விரும்பும் கிராம மக்கள் எனப் பல விஷயங்களை நகைச்சுவையாகத் தொட்டுச் சொல்கிறார் இயக்குநர்" என அந்த விமர்சனம் கூறுகிறது.

நிதிஷின் திரைக்கதையின் அழகே அதை அவர் பல வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களால் நிரப்புவதுதான் என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.

"தனது முதல் திரைப்படமான 'ஃபேலிமி' போலவே, இந்தப் படத்திலும் மிகச் சாதாரணமான காட்சிகள் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறார். அதற்கு ஓர் உதாரணம், மரண வீட்டிற்குச் செல்ல வேண்டிய முதிய பெண்கள், அழுதுகொண்டே தவறுதலாக திருமண வீட்டிற்குச் செல்லும் காட்சி. நகைச்சுவையை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மனிதத்தையும் பேசுகிறது திரைப்படம்" என 'தி இந்து' விமர்சனம் பாராட்டுகிறது.

ஜீவாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததா?

"ஜீவரத்தினம் ஓர் அரசியல்வாதி என்றாலும், நகைச்சுவைக்காக அவரை முட்டாளாகச் சித்தரிக்கவில்லை. அவர் ஒரு புத்திசாலி, எதையும் பேசி சமாளிக்கக் கூடியவர். அதை ஜீவா சிறப்பாகவே செய்திருக்கிறார்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.

"ஜீவாவின் கதாபாத்திரம் அவரது நிஜ வாழ்க்கை ஆளுமைக்கு மிக நெருக்கமானதாகத் தோன்றுகிறது" என இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

"ஜீவாவை திரையில் பார்ப்பது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் அவருக்குள் இருக்கும் சிறந்த நடிகரை வெளியே கொண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்த கதாபாத்திரங்களுடன் ஒப்பிடும்போது, இது ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கும்" என 'தி இந்து' விமர்சனம் பாராட்டுகிறது.

தல்லுமாலா, ஃபேலிமி, பிரேமலு, ஆலப்புழா ஜிம்கானா போன்ற மலையாள திரைப்படங்களின் இசை மூலம் பிரபலமான இசையமைப்பாளர் விஷ்ணு விஜய், இந்தத் திரைப்படத்திலும் தனது பணியை சிறப்பாகச் செய்துள்ளதாகவும் தி இந்து நாளிதழ் பாராட்டியுள்ளது.

"தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர், பிராதனா நாதன் மற்றும் பலரின் நடிப்பு இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவர்களின் நடிப்பு படத்தின் காட்சிகளுக்கு அதிக நம்பகத்தன்மையை அளிக்கிறது" என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

மலையாள திரைப்படங்களைப் பார்த்து இது போல தமிழ் சினிமாவிலும் வருமா என ஏங்கும் ரசிகர்களுக்கான திரைப்படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்' என்று பாராட்டியுள்ளது தி இந்து நாளிதழ்.

"இனி தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இதுபோன்ற சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம். மலையாள சினிமாவை போன்ற திரைப்படங்கள் தமிழிலும் வெளியாவதற்கான ஓர் ஆரோக்கியமான போக்கின் தொடக்கமாக 'தலைவர் தம்பி தலைமையில்' இருக்கலாம்" என்றும் அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு