You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் இணைய முடக்கத்தை தாண்டி போராட்ட செய்திகள் பரவுவது எப்படி? ஸ்டார்லிங்க் உதவுகிறதா?
- எழுதியவர், சோரௌஷ் நேகாதரி
- பதவி, பிபிசி மானிட்டரிங் குழு
இரானில் நடந்து வரும் போராட்டங்களை முன்னிட்டு, அரசு தகவல் தொடர்பு வழிகளைக் கிட்டத்தட்ட முற்றிலுமாக முடக்கியுள்ளது.
இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலும், இரானில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் படங்கள் இன்னும் நாட்டுக்கு உள்ளேயும் உலகின் பிற பகுதிகளுக்கும் சென்றடைந்து வருகின்றன.
இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு ஊடகங்கள் தடை செய்யப்பட்ட நிலையில், இது எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுகிறது.
கடந்த வாரம், இரானிய மருத்துவர் ஒருவர் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள் இணையத்தின் மூலம் பிபிசியுடன் தொடர்பு கொண்டு, அங்குள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், அவசர சேவைகள் கடும் அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க் தொழில்நுட்ப நிறுவனம், டெஸ்லா நிறுவன உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான ஈலோன் மஸ்க்கின் நிறுவனமாகும்.
இரானின் உளவுத்துறை அமைப்புகள், நாட்டின் எல்லைப் பகுதிகளில் செயற்கைக்கோள் இணைய உபகரணங்களின் பெரிய சரக்கொன்றை கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளன.
அந்த உபகரணங்கள் 'உளவு மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்காக' நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 13 அன்று, இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB), தனது டெலிகிராம் சேனல் மூலம், அந்தச் சரக்கு அண்டை நாடொன்றில் இருந்து சட்டவிரோதமாக இரானுக்குள் நுழைந்து, தற்போது கலவரம் நிலவும் பகுதிகளில் விநியோகிக்கப்பட இருந்ததாக செய்தி வெளியிட்டது.
இரானில் இந்த சேவையைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது; அதற்கான உபகரணங்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஜனவரி 8 அன்று போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான இணையத் தடையை இரான் அதிகாரிகள் விதித்தனர். இந்தச் சூழலில்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியின்படி, இரானில் இணைய தடையின்போது ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் இலவச செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, இரானியர்களுக்குப் பாதுகாப்பான இணைய அணுகலை வழங்கப் பணியாற்றும் 'ஹோலிஸ்டிக் ரெசிலியன்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர் அஹமது அமாதியன் தெரிவித்ததன்படி, இரானில் ஸ்டார்லிங்க் சந்தா கட்டணங்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் விலக்கு அளித்துள்ளது.
இதற்கிடையில், இணைய கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் (NetBlocks), ஜனவரி 13 காலை நிலவரப்படி, இரானில் இணைய முடக்கம் 108 மணிநேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இணைய தடை மற்றும் ஸ்டார்லிங்குக்கு எதிரான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் படங்கள் எவ்வாறு நாட்டிற்குள்ளும் உலகிற்கும் சென்றடைந்து வருகின்றன என்பது தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.
இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
ஜனவரி 12 அன்று டெஹ்ரானில் வெளிநாட்டு தூதர்களைச் சந்தித்து உரையாற்றிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அச்சுறுத்தல் நீங்கும் வரை இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு சேவைகளின் முடக்கம் தொடரும் என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகள் கைபேசி மற்றும் தொலைபேசி சேவைகளையும் பாதித்துள்ளன. இரானுக்கான அனைத்து சர்வதேச அழைப்புகளும் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசுத் தொலைக்காட்சி சேனல்கள் தவிர, தற்போது இரானில் தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாக வெளிநாட்டு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களே உள்ளன.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத்தைப் பயன்படுத்த முடிந்துள்ள இரானிய குடிமக்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சில தகவல்களின்படி, ஜனவரி 11 முதல் அந்த சேவைக்கு ராணுவ மட்டத்தில் 'ஜாமிங்' (jamming) மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் தரவுகளின்படி, தற்போதைய இணைய முடக்கம் ஜனவரி 8 அன்று தொடங்கியது. அதற்கு முன்பே, குறிப்பாக மொபைல் நெட்வொர்க்குகளில் பகுதி அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
டெஹ்ரானின் கிராண்ட் பஜார் போன்ற போராட்டம் தீவிரமான பகுதிகளில், நெட்வொர்க் ஏற்கெனவே பலவீனப்படுத்தப்பட்டு இருந்தது.
நிலையான கம்பி வழி (fixed-line internet) இணைய சேவைகள் ஆரம்பத்தில் குறைவாகவே பாதிக்கப்பட்டன. ஆனால், போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவியதுடன், டெஹ்ரான், தப்ரிஸ், இஸ்ஃபஹான், மஷ்ஹத் போன்ற நகரங்களில் இணைய சேவை இடைமறித்துச் செயல்படும் நிலை தொடர்ந்தது.
நெட் ப்ளாக்ஸ் வெளியிட்ட பல புதிய தகவல்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இரானியர்களின் அனுபவங்களையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதையும் காட்டுகின்றன.
இதன் விளைவு என்ன?
இந்த இணைய முடக்கம் தொலைபேசி மற்றும் மொபைல் இணைய சேவைகள் இரண்டையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. நெட்ப்ளாக்ஸ் அமைப்பின் தகவல்படி, நாடு முழுவதும் இணைய இணைப்பு சாதாரண நிலையில் இருந்து சுமார் ஒரு சதவீதம் என்ற மட்டத்திற்குக் குறைந்துள்ளது.
மொபைல், தொலைபேசி என எதுவாக இருந்தாலும், இரானுக்கு வெளியில் இருந்து வரும் அழைப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் சில இரானியர்கள் சமூக ஊடகங்களில், தங்கள் அழைப்புகளை மனிதர்கள் எடுக்காமல் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அல்லது தானியங்கி பதிவுச் செய்திகளே பதிலளித்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்தப் பதிவுகள் தொடர்ந்து 'ஹலோ' என்றோ அல்லது ஆங்கிலம் அல்லது பாரசீக மொழியில் சில அடிப்படை வார்த்தைகளையோ மீண்டும் மீண்டும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இரானுக்கு உள்ளே இருந்து வரும் குறைந்த தகவல்கள், குறிப்பாக மொபைல் நெட்வொர்க்குகளிலும், போராட்டங்கள் தொடரும் மாலை நேரங்களிலும், உள்நாட்டு அழைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
இந்த முறை, அரசு தொடர்புடைய ஊடகங்கள்கூட துண்டிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த சில தீவிரமான (ரேடிக்கல்) தளங்களே தற்போது செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், தகவல் பரிமாற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தவே அதிகாரிகள் முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இது மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றா?
இரானில் கலவரங்கள் மற்றும் மோதல்களின்போது இதற்கு முன்பும் இணையம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவற்றில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
முந்தைய உதாரணங்களில் 2019 எரிபொருள் விலை உயர்வுப் போராட்டங்கள், 2022இன் 'பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்' இயக்கம், மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் இரான்-இஸ்ரேல் மோதல் ஆகியவை அடங்கும்.
முந்தைய நிகழ்வுகளில், இணைய இணைப்பு நிலைகள் சிறப்பாக இருந்தன. சில பகுதிகளில் குறைக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் அல்லது விபிஎன் (VPN) அணுகல் இருந்தது.
தரவுகளின்படி, தற்போதைய இணைய தடை 2019 மற்றும் 2025 ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட தடைகளைவிட மிகவும் கடுமையானதாக உள்ளது.
அப்போது, இணைய இணைப்பு சுமார் 3% வரை குறைந்தது. ஆனால் இம்முறை, தற்காலிக மேம்பாடோ அல்லது இணைப்பில் ஏற்றத் தாழ்வுகளோ எதுவும் இல்லை.
முக்கியக் கவலைகள் என்ன?
முன்னதாகவும், போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை, தங்களது நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு தெரிவிப்பதைத் தடுக்கும் நோக்கில் இரான் அதிகாரிகள் இணைய தடைகளை பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த 2019 நவம்பரில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களின்போது, மிக நீண்ட கால இணைய தடை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள், இணையம் மீண்டும் செயல்படுத்தப்பட்ட பிறகே வெளிவந்தன.
தற்போதைய தொழில்நுட்ப முடக்கத்தின்போது அரசு ஊடகங்கள் பயன்படுத்தும் மொழி, மீண்டும் வன்முறை நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
இணைய தடை இருந்தபோதிலும், பெரிய அளவிலான, உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டும் சில வீடியோக்களும் தகவல்களும் வெளிவந்துள்ளன.
ஒரு வீடியோவில், டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு நகரின் சவக்கிடங்கில் பல சடலங்கள் மூடிய பைகளில் (body bags) இருப்பதைக் காணலாம். இதுபோன்ற மேலும் சில வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பான ஹெச்.ஆர்.ஏ.என்.ஏ (HRANA), டிசம்பர் இறுதியில் இருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு முக்கியக் கவலை என்னவென்றால், மாற்று தகவல் ஆதாரங்களும் சுயாதீன சரிபார்ப்பும் இல்லாததால், அதிகாரபூர்வ அரசுத் தகவல்களே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பாகுபாடற்ற மற்றும் உண்மை அடிப்படையிலான முறையில் பதிவு செய்வது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு