வா வாத்தியார் விமர்சனம்- 'எம்ஜிஆர்' பிம்பம் கார்த்திக்கு வெற்றி கொடுத்ததா?

கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமியின் இயக்கத்தில் இன்று (ஜனவரி 14) வெளியாகியுள்ளது 'வா வாத்தியார்' திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் இயக்குநர் நலன் குமாரசாமி. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வா வாத்தியார்' எப்படி இருக்கிறது?

திரைப்படத்தின் கதை என்ன?

மாசிலா என்கிற ஊரில் ராஜ்கிரண் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். எம்ஜிஆர் இறந்த நேரத்திலேயே அவருக்கு பேரன் ராமு (கார்த்தி) பிறக்க, திரைப்படங்களில் எம்ஜிஆர் போதித்த கொள்கைகளின்படி பேரனை வளர்க்க வேண்டுமென விரும்பி, வளர்க்கிறார்.

ஆனால், தாத்தாவின் நேர்மை ராமுவுக்கு எம்ஜிஆர் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு பதிலாக வில்லன் வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நம்பியாரை அவர் விரும்புகிறார். ராமுவின் கதாபாத்திரம், திரைப்படங்களில் நம்பியார் நடிக்கும் கதாபாத்திரங்களை பின்பற்றுகிறது.

வளர்ந்தபின் ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரியாக மாறும் ராமு, ​​தொழிலதிபர் பெரியசாமி (சத்யராஜ்) மற்றும் மாநில முதல்வர் (நிழல்கள் ரவி) ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடையே சிக்கிக் கொள்கிறார். இந்த சூழ்நிலையை ராமு எப்படி சமாளித்தார்? பெரியசாமியின் நோக்கம் என்ன? இதுவே 'வா வாத்தியார்' திரைப்படத்தின் கதை.

எப்படி உள்ளது?

இயக்குனர் நலன் குமாரசாமியின் இந்த திரைப்படம், அவரது முந்தைய படங்களைப் போலவே, அதன் மையக் கருத்திற்கு உண்மையாகவே உள்ளது. இந்தப் படத்திலும், திரைக்கதை பல பாணிகளை கையாள்கிறது என 'இந்தியா டுடே' விமர்சனம் தெரிவிக்கிறது.

கார்த்தியின் ராமு கதாபாத்திரம் தனது அன்புக்குரியவரை இழக்கும்போது, அவருக்கு மனரீதியாக ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அந்த காட்சியில் இருந்து, வா வாத்தியார் ஒரு சூப்பர் ஹீரோ படமாக மாறுகிறது. அதேசமயம், ராமு தனக்குள் நடக்கும் மாற்றத்தை முழுமையாக உணரும்போது, ​​அது 'ஆல்டர்-ஈகோ' (Alter-ego) தொடர்பான ஒரு படமாக மாறுகிறது என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

"திரைப்படத்தின் தொடக்க காட்சிகள் சற்றே கணிக்கக்கூடியதாகவும் மெதுவாக நகர்வாதாகவும் உள்ளது. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் குறைவான நீளம் கொண்டவையாக இருந்தாலும், அவை அடிக்கடி வருகின்றன. ஆனால், பிரதான கதை தொடங்கியவுடன், திரைப்படம் வேகமெடுக்கிறது" என்று டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.

"ஆக்‌ஷன் படங்கள் - காதல் படங்கள் நிறைந்த இந்தக் காலத்தில், துப்பாக்கிகள் மற்றும் தேவையற்ற ரத்தக்களரி காட்சிகளை நம்பாமல், ஒரு முன்னணி நடிகரை வைத்து ஒரு 'கமர்ஷியல் பொழுதுபோக்கு' திரைப்படத்தை உருவாக்குவது இன்றும் சாத்தியம் என்பதை வா வாத்தியார் காட்டுகிறது." என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா

"இந்தத் திரைப்படத்தின் அதிரடி காட்சிகளில் கதாநாயகன் பல அடியாட்களை துவம்சம் செய்கிறார், ஆனால் அவை அனைத்தும் எம்ஜிஆர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாத்திரத்தை ஏற்று நடித்த கார்த்தியின் துணிச்சலை பாராட்ட வேண்டும்" என அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

மேலும், "எம்ஜிஆரை அப்படியே காப்பி செய்து நடித்திருந்தால் அது ஒரு 'ஸ்பூஃப்' திரைப்படமாக மாறியிருக்கும். அதற்குப் பதிலாக, எம்ஜிஆரின் திரை பிம்பத்தை அற்புதமாக உள்வாங்கி, உணர்வுபூர்வமான தருணங்களை திரையில் கொண்டுவந்துள்ளார். இதற்கு இயக்குநர் நலன் குமாரசாமியை பாராட்ட வேண்டும்" என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் பாராட்டுகிறது.

அதேசமயம், "எம்ஜிஆரை மையமாக வைத்தே நாயகனின் செயல்பாடுகள் இருந்தாலும் முழுமையாக எம்ஜிஆரை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே, இளம் தலைமுறை ரசிகர்களுக்கு கதையில் பிடிப்பு இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்." என தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது.

'வித்தியாசமான கதாபாத்திரங்கள்'

"இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதாபாத்திரங்களால் நிறைந்துள்ளது" என இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

"சத்யராஜின் பெரியசாமி கதாபாத்திரம், பண ஆசை கொண்ட ஒரு தொழிலதிபர், ஆளும் அரசாங்கத்தை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்டுவிக்க பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். கிருத்தி ஷெட்டியின் கதாபாத்திரம், ஆவிகளிடம் பேசும் ஒரு சாதுர்யமான பெண். இருப்பினும் அவருக்கு அதிக காட்சிகள் இல்லை. ராஜ்கிரண் மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்கள் திறமையான நடிப்பை வழங்குகிறார்கள், ஆனால் கதையில் அவர்களுக்கான இடம் குறைவாக இருப்பதால், போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை" என அந்த விமர்சனம் கூறுகிறது.

"திரைப்படத்தில் வலிமையான வில்லன் கதாபாத்திரம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படத்தின் தொடக்கத்தில் பெரியசாமி (சத்யராஜ்) இரக்கமற்றவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் சித்தரிக்கப்படுவார் ஆனால் இறுதியில் அந்த கதாபாத்திரத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது." என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் குறிப்பிடுகிறது.

"நலன் குமாரசாமி கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் மசாலாவை சரியாக போட வேண்டுமென மெனக்கட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அதுவே இக்கதைக்கு பலவீனமாக மாறிவிட்டது" என தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது.

"எம்ஜிஆர் பேசிய அட்டகாசமான வசனங்களில் ஒன்று, 'கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறி வைக்க மாட்டான்'. வா வாத்தியார் படக்குழு குறியே வைக்காமல் எல்லா திசைகளிலும் கத்தியை வீசியிருக்கிறார்கள். அதுவும், பிளாஸ்டிக் கத்தி" என விமர்சித்துள்ளது தினமணி.

"காட்சிகளில் சுவாரசியம் குறைவு என்றாலும் போர் அடிக்கவில்லை. ஆனால் முதல் பாதியில் இருந்த பரபரப்பு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் 'மிஸ்ஸிங்'. யூகிக்க முடிந்த காட்சிகளும் படத்துக்கு சற்று பின்னடைவைத் தருகிறது. தனக்கே உரிய டார்க் காமெடி தளத்தில், எம்ஜிஆர் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, புதுமையான காட்சிகளில் பொங்கல் படைத்துள்ளார், இயக்குனர் நலன் குமாரசாமி. எம்.ஜி.ஆர். தோன்றும் இடங்கள் சிறப்பு" என தினத்தந்தி விமர்சனம் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு