You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு – அரசு பேச்சுவார்த்தையில் பின்னடைவா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பணி நிரந்தரம் கோரி போராடிவந்த பகுதி நேர ஆசிரியர்களில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரான சி. கண்ணன் என்பவர் உயிரிழந்திருக்கும் நிலையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வு போதாது என்றும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றிவருபவர்களுக்கு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது போதாது என்றும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 12,000 பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணிகளில் சேர்க்கப்பட்டவர்கள். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பணியில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் குறிப்பிட்ட பள்ளிக்கூடங்களில் பணி வழங்கப்படுகிறது.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணிணி அறிவியல், விவசாயம், வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சி போன்றவற்றை இவர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர்.
'வாழ்க்கையே வீணாகிவிட்டது'
2012ஆம் ஆண்டில் 5,000 ரூபாயை ஊதியமாகப் பெற்ற அவர்கள் தற்போது 12,500 ரூபாய் ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தங்களை முழு நேர ஆசிரியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென இவர்கள் தொடர்ந்து கோரிவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் சென்னையில் சுமார் 2,000 பகுதி நேர ஆசிரியர்கள் ஒன்று திரண்டு, டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவந்தனர். இவர்களை அவ்வப்போது காவல்துறை கைதுசெய்து விடுவித்துவந்தது.
"கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 16,550 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக இணைக்கப்பட்டோம். நாங்கள் எல்லோருமே வேலை வாய்ப்புப் பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு போன்ற அரசின் எல்லா நடைமுறைகளுக்கும் உட்பட்டுத்தான் பணியில் சேர்ந்தோம். நாங்கள் அனைவருமே மாவட்ட கல்வி அதிகாரிகளால் நேர்காணல் நடத்தப்பட்டுத்தான் பணியில் சேர்க்கப்பட்டோம். இந்தப் பணியில் சேர்ந்த பலர் இதற்கு முன்பாக இதைவிட நல்ல சம்பளத்திற்கு பணியில் இருந்தனர். பலர் மாதம் 40,000 ரூபாய் கூட சம்பளம் வாங்கிவந்தனர்.''என்கிறார் அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான சுரேஷ்.
''நாங்கள் பணியில் சேர்ந்தபோது, இது பகுதி நேர வேலை என்பதால் மூன்று பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கும்படி செய்கிறோம் என்றார்கள். ஆகவே, மூன்று பள்ளிக்கூடங்களிலும் சேர்த்து 15,000 ரூபாய் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால், பணி ஆணை வரும்போது ஒரு பள்ளிக்கூடத்திற்குதான் வந்தது. ஆகவே 5,000 ரூபாய் சம்பளத்தில்தான் வேலை பார்க்க வேண்டியிருந்தது. இப்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் எங்களது சம்பளம் வெறும் 12,500 ரூபாயாகத்தான் இருக்கிறது. இந்தச் சம்பளத்தை வைத்து இப்போது யாராவது குடும்பம் நடத்த முடியுமா? பகுதி நேர வேலைதான் என்றாலும்கூட, பல தருணங்களில் முழு நாளும் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பணியை நிரந்தரப் பணியாக்கும் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை ஆண்டுகளைக் கடந்தோம். இப்போது எங்களது வாழ்க்கையே வீணாகிவிட்டது" என்கிறார் சுரேஷ்.
2021ஆம் ஆண்டின் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக தங்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசு வாக்குறுதியை ஏற்க மறுப்பு
இரண்டு, மூன்று முறை அதிகாரிகள் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்த ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அந்தப் பேச்சு வார்த்தையில் இவர்களது ஊதியம் 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் வாக்குறுதியளிக்கப்பட்டது.
"ஆனால், இது போதாது. எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை" என்கிறார் தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் தலைவரான ஜேசுராஜ்.
இதற்கிடையில், ஜனவரி 13ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு பல திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். வானகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றிலும் சிலர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரம்பலூர் மாவட்டம் என்.புதூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பணியாற்றிவந்த 49 வயதான சி.கண்ணன் என்பவரும் ஒருவர்.
அவர் 13ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 14ஆம் தேதி பிற்பகல் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த கண்ணனுடன் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசி, "அவர் எதைக் குடித்தார் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. வாந்தி எடுத்ததும் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்" என்று தெரிவித்தார்.
உயிரிழந்த கண்ணனுக்கு மனைவியும் பள்ளியில் படிக்கும் மகனும் உள்ளனர். "பணி நிரந்தரக் கோரிக்கைக்காக போராடிய என் கணவர் உயிரிழந்திருக்கிறார். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும்" எனத் தெரிவித்தார் உயிரிழந்த கண்ணனின் மனைவியான சிவராதை.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த செய்தி வெளியானதும், எதிர்க்கட்சிகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
"பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ₹2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது தி.மு.க. அரசு. எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, எந்தக் கவலையும் இல்லை" என தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
''பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கண்ணனின் உடல் வைக்கப்பட்டுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் போராட்டத்தைத் தொடரப் போவதாக பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு