You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாலிபன் தலைமையில் விரிசல்: காபூல் - கந்தஹார் அதிகாரப் போட்டியின் பின்னணி கதை
- எழுதியவர், பிபிசி ஆப்கான்
பிபிசிக்குக் கிடைத்த ஒரு ஆடியோ பதிவுதான், தாலிபன் தலைவரை மிகவும் கவலையடையச் செய்வது எது என்பதை வெளிப்படுத்தியது.
அது ஒரு வெளிப்புற ஆபத்து அல்ல, மாறாக ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தே எழும் ஆபத்து. 2021-இல் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்து, அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
நாட்டை ஆளுவதற்கு தாலிபன்கள் அமைத்த 'இஸ்லாமிய எமிரேட்டில்' ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படும் "அரசாங்கத்திற்குள் இருக்கும் நபர்கள்" குறித்து அவர் எச்சரித்தார்.
கசிந்த அந்த ஆடியோ கிளிப்பில், தாலிபனின் அதி உயர் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா பேசுகையில், உட்கட்சி முரண்பாடுகள் இறுதியில் அவர்கள் அனைவரையும் வீழ்த்திவிடக்கூடும் என்று கூறுகிறார்.
"இந்த பிரிவினைகளின் விளைவாக, எமிரேட் சரிந்து முடிவுக்கு வரும்," என்று அவர் எச்சரித்தார்.
தெற்கு நகரமான கந்தஹாரில் உள்ள ஒரு மதரஸாவில் 2025 ஜனவரியில் ஆற்றிய இந்த உரை, பல மாதங்களாக உலவி வந்த வதந்திகளுக்குத் தீனி போடுவதாக அமைந்தது - தாலிபனின் மிக உயர்ந்த மட்டத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது குறித்த வதந்திகள் அவை.
இந்த பிளவை தாலிபன் தலைமை எப்போதும் மறுத்து வருகிறது - பிபிசி நேரடியாகக் கேட்டபோதும் அவர்கள் மறுத்தனர்.
இந்த அதி ரகசியமான குழுவைப் பற்றி பிபிசியின் ஆப்கான் சேவை ஓராண்டு கால விசாரணையைத் தொடங்க இந்த வதந்திகள் தூண்டுதலாக இருந்தன. தற்போதைய மற்றும் முன்னாள் தாலிபன் உறுப்பினர்கள், உள்ளூர் ஆதாரங்கள், நிபுணர்கள் மற்றும் முன்னாள் தூதர்களுடன் 100-க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நடத்தியது.
இந்த செய்தியை வெளியிடுவதில் உள்ள உணர்வுபூர்வமான சூழல் காரணமாக, அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை அடையாளம் காட்ட வேண்டாம் என்று பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது.
இப்போது, முதல் முறையாக, தாலிபனின் மிக உயர்ந்த மட்டத்தில் இரண்டு தனித்துவமான குழுக்களை எங்களால் அடையாளப்படுத்த முடிந்தது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான தொலைநோக்கை கொண்டுள்ளன.
ஒன்று, அதி உயர் தலைவர் அகுந்த்ஸாதாவிற்கு முற்றிலும் விசுவாசமானது, அவர் தனக்கு விசுவாசமான மதப் பிரமுகர்களுடன் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தும் நவீன உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஒரு கடுமையான இஸ்லாமிய எமிரேட் நாடு என்ற தனது தொலைநோக்கை நோக்கி கந்தஹாரில் உள்ள தனது தளத்திலிருந்து, நாட்டை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவதாக, தலைநகர் காபூலைத் தளமாகக் கொண்ட சக்திவாய்ந்த தாலிபன் உறுப்பினர்களைக் கொண்ட குழு. இது இஸ்லாத்தின் கடுமையான விளக்கத்தையே பின்பற்றினாலும், வெளி உலகத்துடன் தொடர்புகொள்வது, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மற்றும் தற்போது தொடக்கப் பள்ளிக்கு அப்பால் மறுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கல்வியை அனுமதிப்பது போன்றவற்றை ஆதரிக்கிறது.
உள்ளே இருக்கும் ஒருவர் இதை "கந்தஹார் அதிகார மையத்திற்கும் காபூல் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல்" என்று விவரித்தார்.
ஆனால் தாலிபன் அமைச்சரவை அமைச்சர்கள், சக்திவாய்ந்த போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தாலிபன் விசுவாசிகளின் ஆதரவைப் பெற்ற செல்வாக்கு மிக்க மத அறிஞர்களைக் கொண்ட காபூல் குழு, அகுந்த்ஸாதாவின் உரை குறிப்பிட்டது போல, பெருகிவரும் சர்வாதிகாரப் போக்கு கொண்ட அவருக்கு எதிராக எப்போதாவது அர்த்தமுள்ள வகையில் சவால் விடுமா என்பதே எப்போதும் ஒரு கேள்வியாக இருந்திருக்கிறது.
தாலிபன்களின் கூற்றுப்படி, அகுந்த்ஸாதா அந்தக் குழுவின் முழுமையான ஆட்சியாளர் - அல்லாஹ்வுக்கு மட்டுமே பொறுப்பானவர், யாராலும் கேள்வி கேட்கப்பட முடியாதவர்.
பின்னர், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களுக்கு இடையிலான நுட்பமான அதிகாரப் போட்டி, உறுதிபாட்டுகளுக்கிடையிலான ஒரு மோதலாக மாற காரணமான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
செப்டம்பர் இறுதியில், அகுந்த்ஸாதா இணையம் மற்றும் தொலைபேசிகளை முடக்குமாறு உத்தரவிட்டார், இது ஆப்கானிஸ்தானை உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு இணையம் மீண்டும் வந்தது, ஏன் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஆனால் திரைமறைவில் நடந்தது ஒரு பெரிய அதிரடி மாற்றம் என்று உள்வட்டாரத்தினர் கூறுகின்றனர். காபூல் குழு அகுந்த்ஸாதாவின் உத்தரவிற்கு எதிராகச் செயல்பட்டு இணையத்தை மீண்டும் இயக்கியது.
"மற்ற ஆப்கான் கட்சிகள் அல்லது பிரிவுகளைப் போலன்றி, தாலிபன் அதன் ஒற்றுமைக்காக குறிப்பிடத்தக்கது - அங்கு பிளவுகள் இல்லை, பெரிய கருத்து வேறுபாடுகள் கூட இல்லை," என்று தாலிபன்கள் உருவானதிலிருந்து அவர்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆப்கானிஸ்தான் நிபுணர் ஒருவர் விளக்குகிறார்.
"மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல், இறுதியில் அமீருக்கு [அகுந்த்ஸாதா] கீழ்ப்படிதல் என்பது அந்த இயக்கத்தின் டிஎன்ஏ-விலேயே உள்ளது. அதனால்தான் அவரது நேரடி உத்தரவிற்கு எதிராக இணையத்தை மீண்டும் இயக்கிய செயல் மிகவும் எதிர்பாராதது மற்றும் குறிப்பிடத்தக்கது," என்று அந்த நிபுணர் கூறினார்.
ஒரு தாலிபன் உறுப்பினர் கூறியது போல்: இது ஒரு கிளர்ச்சிக்குக் குறைவானதல்ல.
நம்பிக்கை கொண்ட ஒரு மனிதர்
ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா தனது தலைமையைத் தொடங்கும்போது இப்படி இருக்கவில்லை.
உண்மையில் ஒத்த கருத்தை உருவாக்கும் அவரது அணுகுமுறை 2016-இல் அவர் தாலிபனின் அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட ஒரு காரணம் என வட்டாரங்கள் கூறுகின்றன.
தனக்குப் போர்க்கள அனுபவம் இல்லாததால், அச்சத்தை ஏற்படுத்தும் போர்த் தளபதியான சிராஜுதீன் ஹக்கானியைத் தனது துணைத் தலைவராக்கிக் கொண்டார் - அப்போது சிராஜுதீன் ஹக்கானியின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருந்தது.
இரண்டாவது துணைத் தலைவராக தாலிபன் நிறுவனர் முல்லா உமரின் மகன் யாகூப் முஜாஹித் நியமிக்கப்பட்டார் - அவர் இளைஞராக இருந்தாலும், தாலிபன் ரத்தத்தைக் கொண்டவர் என்பதால் இயக்கத்தை ஒன்றிணைக்கும் திறன் அவருக்கு இருந்தது.
தாலிபன் போராளிகளுக்கும் அமெரிக்கத் தலைமையிலான படைகளுக்கும் இடையிலான 20 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவர தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போதும் இந்த ஏற்பாடு தொடர்ந்தது. 2020-ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தம், தாலிபன்கள் நாட்டைத் திடீரெனக் கைப்பற்றுவதற்கும், 2021 ஆகஸ்டில் அமெரிக்க துருப்புக்கள் குழப்பமான முறையில் வெளியேறுவதற்கும் வழிவகுத்தது.
வெளி உலகிற்கு, அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முன்னணியாகத் தெரிந்தனர்.
ஆனால் தாலிபன்கள் 2021 ஆகஸ்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், இரு துணைத் தலைவர்களும் சத்தமில்லாமல் அமைச்சர்களாகத் தரம் தாழ்த்தப்பட்டனர், இப்போது அகுந்த்ஸாதா மட்டுமே அதிகார மையமாக இருக்கிறார் என்று உள்வட்டாரத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய தாலிபனின் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க இணை நிறுவனர் அப்துல் கனி பராதார் கூட, பலரும் எதிர்பார்த்தது போல் பிரதமர் பதவிக்கு பதிலாக துணை பிரதமர் பதவியையே பெற்றார்.
அதற்குப் பதிலாக, அரசாங்கம் அமர்ந்திருக்கும் தலைநகரைப் புறக்கணித்து, தாலிபன்களின் அதிகாரத் தளமான கந்தஹாரிலேயே தங்கியிருக்க முடிவு செய்த அகுந்த்ஸாதா, தன்னைச் சுற்றித் தான் நம்பும் சித்தாந்தவாதிகள் மற்றும் தீவிரபோக்குடையவர்களை சேர்த்துக் கொண்டார்.
நாட்டின் பாதுகாப்புப் படைகள், மதக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்தின் சில பகுதிகளின் கட்டுப்பாடு பிற விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டது.
"[அகுந்த்ஸாதா] ஆரம்பத்திலிருந்தே தனது சொந்த வலுவான பிரிவை உருவாக்க முற்பட்டார்," என்று முன்பு தாலிபன் உறுப்பினராக இருந்து, பின்னர் ஆப்கானிஸ்தானின் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் பணியாற்றிய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு இல்லையென்றாலும், அதிகாரம் கிடைத்தவுடன், தனது அதிகாரம் மற்றும் பதவியைப் பயன்படுத்தி தனது வட்டத்தை திறமையாக விரிவுபடுத்தத் தொடங்கினார்."
காபூலைச் சேர்ந்த தாலிபன் அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காமல், பெண்கள் கல்வி கற்க அனுமதிப்பது போன்ற அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு அளித்த பொது வாக்குறுதிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஆணைகள் அறிவிக்கப்படத் தொடங்கின.
பெண்கள் கல்வி கற்பதற்கும் வேலை செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை, இரு குழுக்களுக்கும் இடையிலான "முக்கிய பதற்றத்தின் மூலங்களில்" ஒன்றாகத் தொடர்கிறது என்று டிசம்பரில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு ஐநா கண்காணிப்பு அமைப்பு அனுப்பிய கடிதம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், 1990-களில் தாலிபனின் ஷரியா நீதிமன்றங்களில் நீதிபதியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அகுந்த்ஸாதா, தனது மத நம்பிக்கைகளில் "இன்னும் தீவிரமாக" மாறி வருவதாக மற்றொரு உள்வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்தது.
அகுந்த்ஸாதாவின் சித்தாந்தம் ஏற்கனவே எப்படி இருந்ததென்றால் தனது மகன் தற்கொலை தாக்குதல் நடத்த முன்வந்ததை அகுந்த்ஸாதா அறிந்திருந்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒப்புதலும் அளித்தார் என்று 2017-இல் அகுந்த்ஸாதாவின் மகன் இறந்த பிறகு இரண்டு தாலிபன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறான முடிவை எடுப்பது அவரது வாழ்நாளுக்கு அப்பால் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் நம்புவதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு முடிவை எடுக்கும்போதும்: நான் அல்லாஹ்வுக்குப் பொறுப்பானவன், தீர்ப்பு நாளில், நான் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் கேட்கப்படும்," என்று அவர் கூறுகிறார் என்று தற்போதைய தாலிபன் அரசாங்க அதிகாரி ஒருவர் விளக்கினார்.
அகுந்த்ஸாதாவுடனான சந்திப்புகளில் இருந்த இருவர், பிபிசியிடம் விவரிக்கையில், அவர் அரிதாகவே பேசும் ஒரு மனிதராக இருந்தார், அறையில் இருந்த முதிய மத குருமார்கள் குழுவின் மூலம் விளக்கப்படும் சைகைகள் மூலமே முக்கியமாகத் தொடர்பு கொண்டார்.
பொது இடங்களில், அவர் தனது முகத்தை மறைத்துக்கொள்கிறார் - தனது தலைப்பாகையின் மேல் போர்த்தப்பட்ட ஒரு துணியால் கண்களை மறைத்துக்கொள்கிறார், மேலும் பார்வையாளர்களிடம் உரையாற்றும்போது பெரும்பாலும் ஒரு கோணத்தில் நிற்கிறார். அகுந்த்ஸாதாவைப் புகைப்படம் எடுப்பதோ அல்லது படம்பிடிப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அவரது இரண்டு புகைப்படங்கள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது.
அவரைச் சந்திப்பதும் கடினமாகிவிட்டது. அகுந்த்ஸாதா முன்பு "வழக்கமான ஆலோசனைகளை" நடத்தி வந்ததாகவும், ஆனால் இப்போது "பெரும்பாலான தாலிபன் அமைச்சர்கள் நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் காத்திருக்கிறார்கள்" என்றும் மற்றொரு தாலிபன் உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார். காபூலைச் சேர்ந்த அமைச்சர்கள் "அதிகாரப்பூர்வ அழைப்பைப் பெற்றால் மட்டுமே கந்தஹாருக்குப் பயணம் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளதாக மற்றொரு நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஆயுத விநியோகம் உட்பட முக்கிய துறைகளை அகுந்த்ஸாதா கந்தஹாருக்கு மாற்றிக் கொண்டிருந்தார், இவை முன்பு அவரது முன்னாள் துணைத் தலைவர்களான ஹக்கானி மற்றும் யாகூபின் கட்டுப்பாட்டில் இருந்தன.
டிசம்பர் மாத கடிதத்தில், ஐநா கண்காணிப்புக் குழு, அகுந்த்ஸாதாவின் "அதிகாரக் குவிப்பு என்பது கந்தஹாரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்புப் படைகளைத் தொடர்ந்து கட்டியெழுப்புவதையும் உள்ளடக்கியது" என்று குறிப்பிட்டது.
அகுந்த்ஸாதா காபூலில் உள்ள அமைச்சர்களைத் தவிர்த்துவிட்டு, உள்ளூர் காவல் பிரிவுகளுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக "உண்மையான அதிகாரம் கந்தஹாருக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று ஒரு ஆய்வாளர் வாதிடுகிறார் - இதை தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பிபிசியிடம் மறுத்தார்.
"அனைத்து அமைச்சர்களுக்கும் அவர்களின் அமைச்சகக் கட்டமைப்பிற்குள் அதிகாரம் உள்ளது, அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர் மற்றும் முடிவுகளை எடுக்கின்றனர் - அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், "ஷரியா கோணத்தில், அவரிடம் [அகுந்த்ஸாதா] வரம்பற்ற அதிகாரம் உள்ளது," என்று முஜாஹித் மேலும் கூறினார் - " இறைவனால் தடுக்கப்பட்ட பிளவை தவிர்க்க, அவரது முடிவுகளே இறுதியானது" என்றார்.
'உலகத்தைப் பார்த்த' மனிதர்கள்
காபூல் குழுவினரிடையே அதிருப்தி அதிகரித்து வந்ததுடன், கூட்டணிகளும் வலுவடைந்து வந்தன.
"அவர்கள் [காபூல் குழு] உலகத்தைப் பார்த்த மக்கள்," என்று ஒரு ஆய்வாளர் பிபிசியிடம் கூறினார். "எனவே, தற்போதைய வடிவத்தில் தங்கள் அரசாங்கம் நீடிக்க முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள்."
காபூல் குழு ஆப்கானிஸ்தானை ஒரு வளைகுடா நாட்டின் மாதிரியை நோக்கி நகர்த்த விரும்புகிறது.
கந்தஹாரில் அதிகாரம் குவிக்கப்படுவது, நற்பண்புச் சட்டங்களின் தன்மை மற்றும் அமலாக்கம், தாலிபன்கள் சர்வதேச சமூகத்துடன் எவ்வாறு ஈடுபட வேண்டும் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஆப்கான் பெண்களுக்கு அதிக உரிமைகள் இருக்க வேண்டும் என்று வாதிட்டாலும், காபூல் குழு மிதவாதக் குழு என்று விவரிக்கப்படுவதில்லை.
அதற்குப் பதிலாக, உள்வட்டாரத்தினர் அவர்களை "நடைமுறைவாதிகள்" என்று பார்க்கிறார்கள், இன்னும் பெருமளவு விசுவாசத்தைக் பெற்றுள்ள தாலிபன் நிறுவன உறுப்பினர் பராதார் அவர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் வழிநடத்துகிறார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் "தாலிபன் தலைவர்" என்று குறிப்பிட்ட "அப்துல்" இவராகத்தான் இருப்பார் என்று கருதப்படுகிறது. உண்மையில், அவர் அமெரிக்காவுடனான குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஆவார்.
காபூல் குழுவின் மாறிவரும் நிலப்பாடுகள் கவனிக்கப்படாமல் போகவில்லை.
"அவர்கள் [காபூலைத் தளமாகக் கொண்ட தாலிபன் தலைவர்கள்] தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்ததை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம், ஆனால் இப்போது அவர்களே தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள்," என்று ஒரு ஆய்வாளர் கூறினார்.
சமூக ஊடகங்களின் சக்தியையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
முன்னாள் துணைத் தலைவர் யாகூப் - இவரது தந்தை தாலிபன்களின் முதல் ஆட்சியின் போது தலைமை தாங்கியவர், அப்போது இசை மற்றும் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டிருந்தது - இப்போது இளம் தாலிபன் உறுப்பினர்கள் மற்றும் சில சாதாரண ஆப்கானியர்களிடையே அதிக அளவில் பிரபலமாகி வருகிறார், இந்த பிரபலத்தன்மை டிக்டாக் வீடியோக்கள் மற்றும் அவரது முகம் பொறிக்கப்பட்ட பொருட்களின் மூலம் தெரிகிறது.
ஆனால் அவரது சக முன்னாள் துணைத் தலைவரான சிராஜுதீன் ஹக்கானியைப் போல தங்களை மறுசீரமைப்பதில் இவ்வளவு திறம்படச் செயல்பட்டவர்கள் யாருமில்லை. அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு எதிரான ஆப்கான் போரில் அவரது வலையமைப்பு 2017-இல் ஜெர்மன் தூதரகம் அருகே 90-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்ற டிரக் குண்டுவெடிப்பு உட்பட மிகவும் கொடூரமான மற்றும் அதிநவீனத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, பிடிபடாமல் தப்பிக்கும் அவரது திறன், ஆதரவாளர்களிடையே அவரை ஒரு புராணக் கதாபாத்திரம் போன்ற நிலைக்கு உயர்த்தியது.
இந்த நேரத்தில், பிபிசி ஆப்கான் பத்திரிகையாளரால் எடுக்கப்பட்ட அவரது ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இருந்தது.
ஆனால் பின்னர், அமெரிக்கா வெளியேறிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, காபூலில் காவல்துறை அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவில் உலக கேமராக்களுக்கு முன்னால் ஹக்கானி தனது முகத்தை மறைக்காமல் வெளியே வந்தார்.
அது ஒரு புதிய பிம்பத்தை நோக்கிய முதல் படியாக இருந்தது: இனி ஒரு போராளி அல்ல, மாறாக ஒரு ராஜதந்திரி - 2024-இல் நியூயார்க் டைம்ஸ் இவருடன் அமர்ந்து: மாற்றத்திற்கான ஆப்கானிஸ்தானின் சிறந்த நம்பிக்கை இவர்தானா? என்று கேட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு, எஃப்பிஐ அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த 10 மில்லியன் டாலர் பரிசை சத்தமில்லாமல் ரத்து செய்தது.
இருப்பினும், அதி உயர் தலைவர் அகுந்த்ஸாதாவிற்கு எதிராக பகிரங்கமாகச் செயல்பட சாத்தியமற்றது என்று ஆய்வாளர்கள் மற்றும் உள்வட்டாரத்தினர் பிபிசியிடம் மீண்டும் மீண்டும் தெரிவித்தனர்.
அவரது ஆணைகளுக்கு எதிரான எதிர்ப்பு மிகவும் சிறிய அளவிலும் மட்டுப்படுத்தப்பட்டும் இருந்தது - உதாரணமாக, காபூல் குழு சார்ந்த அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் தாடி மழிப்பதற்கான தடை போன்ற விதிமுறைகளை அமல்படுத்தாதது. ஆனால் பெரிய அளவிலான கட்டளை மீறல்கள் எப்போதுமே நினைத்துப் பார்க்க முடியாதவையாகக் கருதப்பட்டன.
ஒரு முன்னாள் தாலிபன் உறுப்பினர் பிபிசியிடம் வலியுறுத்துகையில், "[அகுந்த்ஸாதாவிற்கு] கீழ்ப்படிதல் கட்டாயம் என கருதப்படுகிறது" என்றார்.
ஹக்கானி அவரே, நியூயார்க் டைம்ஸ் உடனான நேர்காணலில், பகிரங்கமான பிளவுக்கான வாய்ப்பைக் குறைத்துக் கூறினார். " அமைதியான நாட்டைப் பெற ஆப்கானிஸ்தானுக்கு தற்போது ஒற்றுமை முக்கியம்," என்று அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக, காபூல் குழு "சர்வதேச சமூகம் மற்றும் ஆப்கானியர்கள் இருவருக்கும் ஒரு செய்தியை" அனுப்பத் தேர்வு செய்கிறது என்று ஒரு ஆய்வாளர் கூறினார், அது என்னவென்றால்: "உங்கள் புகார்கள் மற்றும் கவலைகளை நாங்கள் அறிவோம், ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும்?"
குறைந்தபட்சம் இணையத்தை முடக்குவதற்கான உத்தரவு வரும் வரை நிலைமை இதுதான்.
ஒரு முறிவுப் புள்ளி
தாலிபனின் உச்ச தலைவர் இணையத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கை கொண்டவர்; அதன் உள்ளடக்கம் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்று அவர் நம்புகிறார், மேலும் அவர் தனது நம்பிக்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்றால், அவருக்கு பதிலாக ஒரு உதவியாளர் ஒவ்வொரு காலையிலும் அவருக்குச் சமீபத்திய செய்திகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைப் படித்துக் காட்டுகிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஒருமுறை பிபிசியிடம் விளக்கினார்.
நவீன நாடு அது இல்லாமல் வாழ முடியாது என்று காபூல் குழு நம்புகிறது.
உச்ச தலைவரின் இணைய முடக்க உத்தரவு அகுந்த்ஸாதாவின் கூட்டாளிகளால் கட்டுப்படுத்தப்படும் மாகாணங்களில் தொடங்கியது, பின்னர் அது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
காபூல் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் தாலிபன் அரசாங்கத்திற்குள் இருக்கும் வட்டாரங்கள் அடுத்து என்ன நடந்தது என்பதை விவரித்தன - இது தாலிபனின் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒரு தருணம்.
"இயக்கத்தின் பல உறுப்பினர்களை இது ஆச்சரியப்படுத்தியது," என்று ஒரு ஒருவர் கூறினார்.
சுருக்கமாகச் சொன்னால், காபூல் குழுவின் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சர்கள் ஒன்று கூடி, காபூலைத் தளமாகக் கொண்ட பிரதமர் முல்லா ஹசன் அகுந்தை இணையத்தை மீண்டும் இயக்குமாறு உத்தரவிட வைத்தனர்.
உண்மையில், நாடு முழுவதும் இணையம் துண்டிக்கப்படுவதற்கு முன்பே அந்த ஆணை குறித்து அக்குழு தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது: அக்குழுவின் நடைமுறைத் தலைவரான பராதார், அகுந்த்ஸாதாவின் மிகவும் விசுவாசமான ஆளுநர்களில் ஒருவரை எச்சரிக்க கந்தஹாருக்குப் பயணம் செய்து, அவரை "எழுப்ப" வேண்டும் என்று கூறினார் - மேலும் அவர்கள் உச்ச தலைவருக்கு "ஆம்" என்று சொல்லும் மனிதர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
"நீங்கள் அவரிடம் உண்மையை வெளிப்படையாகச் சொல்வதில்லை; அவர் என்ன சொன்னாலும், நீங்கள் அதைச் செயல்படுத்துகிறீர்கள்," என்று அவர் கூறியதாக கந்தஹார் உலமா கவுன்சிலின்(மாகாண மதத் தலைவர்கள் குழு) உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அவரது வார்த்தைகள் நிராகரிக்கப்பட்டதாக அந்த நபர் தெரிவித்தார். செப்டம்பர் 29 திங்கட்கிழமை, எல்லாவற்றையும் முடக்குமாறு அதிஉயர் தலைவரிடமிருந்து தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு நேரடியாக ஒரு உத்தரவு வந்தது. "எந்தக் காரணமும்" ஏற்கப்படாது என்று அமைச்சகத்தின் ஒரு நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புதன்கிழமை காலை, பராதார், ஹக்கானி மற்றும் யாகூப் உள்ளிட்ட காபூல் குழு அமைச்சர்கள் குழு - தொலைத்தொடர்பு அமைச்சருடன் இணைந்து பிரதமரின் அலுவலகத்தில் கூடினர். இங்கே, அவர்கள் கந்தஹாரைச் சார்ந்த பிரதமரை பொறுப்பேற்றுக்கொண்டு உத்தரவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர். ஒரு வட்டாரத்தின் தகவல்படி முழுப் பொறுப்பும் தங்களுடையது என்று அவர்கள் அவரிடம் கூறினர்.
அது பயனளித்தது. இணையசேவை திரும்பியது.
ஆனால் மிக முக்கியமாக, அந்த சில நாட்களுக்குள், பல மாதங்களுக்கு முன்பு அகுந்த்ஸாதா அந்த உரையில் எதைக் குறிப்பிட்டாரோ அது நடந்தது போலிருந்தது: தாலிபன் ஒற்றுமையை உள்வட்டாரத்தினரே அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஏன் இந்த உத்தரவு? பெண் கல்வி போன்ற ஆணைகளில் கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் அகுந்த்ஸாதாவைப் பின்பற்றுவதில் தாலிபன் உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்தே இருக்கிறார்கள் என்று ஒரு நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
அதே நேரத்தில், முன்பு அவருக்கு பகிரங்கமாகச் சவால் விடுத்த பலர் அதற்கான விலையைக் கொடுத்துள்ளனர்.
பிப்ரவரி 2025-இல், அப்போதைய வெளியுறவுத்துறை துணை அமைச்சர், தலைமை "கடவுளின் பாதையில்" இருந்து விலகிச் செல்வதாகவும், "20 மில்லியன் மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும்" - இது பெண் கல்வி தடையைக் குறிக்கிறது - பகிரங்கமாக எச்சரித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
2025 ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகுந்த்ஸாதாவின் பெண் கல்வி குறித்த ஆணைகளைப் பற்றி கேள்வி எழுப்பிய பின்னர் குறைந்தது இருவர் கைது செய்யப்பட்டதாக ஐநா கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் ஹக்கானி உச்ச தலைவரின் அதிகாரக் குவிப்பு குறித்து பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்த போதிலும் அகுந்த்ஸாதா மற்றும் அவரது கூட்டாளிகள் ஹக்கானி போன்ற நபர்களை நெருக்கமாக வைத்திருக்க முயல்வதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இருப்பினும், வார்த்தைகளைத் தாண்டி செயலில் இறங்குவது மற்றும் ஒரு உத்தரவை மிகவும் தீர்க்கமாகப் புறக்கணிப்பது என்பது முற்றிலும் வேறான ஒரு நடவடிக்கை.
ஒரு நிபுணர் சுட்டிக்காட்டுவது போல, இந்த முறை அது அபாய வாய்ப்பை எடுக்கத் தகுந்ததாக இருந்திருக்கலாம்.
அவர்களின் பதவிகள் அதிகாரத்துடனும் "பணம் சம்பாதிக்கும் திறனுடனும்" வருகின்றன என்று அந்த நிபுணர் கூறுகிறார். ஆனால் இவை இரண்டும் இப்போது ஆட்சி மற்றும் வர்த்தகம் இரண்டிற்கும் முக்கியமானதான இணையத்தைச் சார்ந்திருந்தன,.
"இணையத்தை முடக்குவது அவர்களின் சலுகைகளை அச்சுறுத்தியது, பெரிய மாணவிகளைப் பள்ளிகளுக்கு வெளியே வைத்திருப்பது ஒருபோதும் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளதில்லை," என்று அந்த நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
"அதனாலும் அவர்கள் அந்த ஒருமுறை மட்டும் 'துணிச்சலாக' இருந்திருக்கலாம்."
இணையம் மீண்டும் இயக்கப்பட்ட பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த ஊகங்கள் பரவலாக இருந்தன.
காபூல் குழுவிற்கு நெருக்கமான ஒருவர், அமைச்சர்கள் மெதுவாக நீக்கப்படுவார்கள் அல்லது தரம் தாழ்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், "அத்தகைய எதிர்ப்பிற்கு அவர் அஞ்சுவதால்" பின்வாங்கியது அதி உயர் தலைவராக இருக்கக்கூடும் என்று கந்தஹார் உலமா கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆண்டு முடிவடையும் நிலையில், பகிரங்கமாக எதுவும் மாறவில்லை என்பது போல் தோன்றியது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில், சில ஐநா உறுப்பு நாடுகள் "கந்தஹார் மற்றும் காபூல் தலைவர்களுக்கு இடையிலான பிளவை ஒரு குடும்பத் தகராறு போன்றது என்றும் அது தற்போதைய நிலையை மாற்றாது என்றும் குறைத்துக் கூறியுள்ளன; அனைத்து மூத்த தலைவர்களும் தாலிபன் அமைப்பின் வெற்றியில் முதலீடு செய்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாலிபன் அரசாங்கத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் எந்தப் பிளவையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
"நாம் பிரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் ஜனவரி 2026 தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார். "பிளவு அனைவருக்கும், ஆப்கானிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும், மத ரீதியாகத் தடைசெய்யப்பட்டது மற்றும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டது என்பதை அனைத்து அதிகாரிகளும் தலைமையோரும் அறிவார்கள்."
இருப்பினும், தாலிபன் உறுப்பினர்களிடையே "கருத்து" வேறுபாடுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அதை "ஒரு குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டுடன்" ஒப்பிட்டார்.
டிசம்பர் மாதத்தின் பாதியில், அந்த "வேறுபாடுகள்" மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்தன.
ஹக்கானி தனது சொந்த மாகாணமான கோஸ்டில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு கூட்டத்தில் உரையாற்றுவது படம்பிடிக்கப்பட்டது, அதில் "நாட்டின் நம்பிக்கை, அன்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் ஆட்சிக்கு வந்துவிட்டு, பின்னர் அதே நாட்டை கைவிடுபவர் அல்லது மறப்பவர்... ஒரு அரசாங்கம் அல்ல" என்று எச்சரித்தார்.
அதே நாளில், அகுந்த்ஸாதாவின் விசுவாசியான உயர்கல்வி அமைச்சர் நெடா முகமது நதிம் அண்டை மாகாணத்தில் உள்ள ஒரு மதரஸாவில் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் தனது உரையை நிகழ்த்தினார்.
"ஒருவர் மட்டுமே வழிநடத்துகிறார், மற்றவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள், இதுவே உண்மையான இஸ்லாமிய அரசாங்கம்," என்று அவர் கூறினார். "அதிக தலைவர்கள் இருந்தால் சிக்கல்கள் உருவாகும், நாம் அடைந்த இந்த அரசாங்கம் பாழாகிவிடும்."
இணையம் குறித்த தகராறுக்குப் பிறகு, இந்த சமீபத்திய கருத்துக்கள் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கசிந்த ஆடியோவில் அகுந்த்ஸாதா கூறிய கருத்துக்களில் இருந்து மிகவும் மாறுபட்ட பின்னணியைக் கொண்டுள்ளன.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த காபூல் குழு முன்வருமா என்பது இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.
"எப்போதும் போல... எமிரேட்டின் உயர்மட்டத்திற்குள் வெளிப்படையான கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு கேள்வி எஞ்சியுள்ளது - வார்த்தைகள் எப்போதாவது செயலாக மாறுமா?" என்கிறார் ஒரு நிபுணர்.
"அவை இன்னும் மாறவில்லை."
ஜியா ஷாரேயார், புளோரா ட்ரூரி மற்றும் பிபிசி ஆப்கான் தடயவியல் குழுவினரால் திருத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. மேல் படம் ஜனவரி 2022-இல் காபூலை நோக்கியபடி இருக்கும் இரண்டு தாலிபன் உறுப்பினர்களைக் காட்டுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு