பூரி ஜெகந்நாதர் கோயிலின் தங்கம், வைர பொக்கிஷ அறையை பாம்புகள் பாதுகாக்கிறதா?

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள `ஸ்ரீ ஜெகந்நாதர்’ கோவிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி ஜூலை 14ஆம் தேதியன்று திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் ஒடிஷா சட்டசபை தேர்தலில், பூரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவி விவகாரம் முக்கிய பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்த, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் இப்படி பேசியதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது.

"நவீன் பட்நாயக் ஆட்சியின் போது, பொக்கிஷ அறையில் இருந்து பல நகைகள் காணாமல் போயுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் திருப்திகரமான எந்தப் பதிலையும் தர முடியாமல் நவீன் பட்நாயக் அரசு திணறிக் கொண்டிருக்கிறது.’’ என்று மோதி கூறினார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது தொடர்ச்சியாக ஐந்து முறை ஒடிஷாவை தொடர்ச்சியாக ஆண்டு வந்த நவீன் பட்நாயக் கட்சி அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் தோற்று ஆட்சியை இழந்தது. இந்நிலையில் ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பூரி ஜெகன்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சி துவங்கியது. இந்த கோவிலின் பொக்கிஷ அறையில் இருப்பது என்ன? பொக்கிஷ அறையை பல ஆண்டுகளாக திறக்க முடியாமல் இருந்தது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 

பொக்கிஷ அறையில் என்ன உள்ளது?

பூரி ஜெகன் நாதர் கோவிலுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல மன்னர்கள், நகைகளையும் விலை உயர்ந்த கற்களையும் தானமாகக் கொடுத்துள்ளனர். பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோவிலுக்குள் அமைந்துள்ள `ரத்ன பண்டார்’ என்று சொல்லப்படும் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்படுகின்றன.

பொக்கிஷ அறை, பிடார் பண்டார் (உள் அறை), பாஹர் பண்டார் (வெளி அறை) என இரண்டு அறைகளைக் கொண்டது.

மிகவும் விலை உயர்ந்த நகைகள் பொக்கிஷ அறையின் உள் அறையில் வைக்கப்படுகின்றன, ரத யாத்திரை மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் நகைகள் மட்டுமே பொக்கிஷ அறையின் வெளி அறையில் வைக்கப்படுகின்றன.

தற்போது பொக்கிஷ அறையின் உள் அறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் தற்காலிக அறைக்கு மாற்றப்பட்டு, இந்திய தொல்லியல் துறையினர், பொக்கிஷ அறையின் உள் அறையை சரி செய்த பிறகு, தற்காலிக அறையில் வைக்கப்பட்டுள்ள நகைகள், மீண்டும் உள்ளே கொண்டு வரப்பட்டு, அதன்பின், கணக்கிடப்படும்.

இதற்கு முன்பு மே 13, 1978 முதல் ஜூலை 23, 1978 வரை அதாவது 70 நாட்களுக்கு நகைகள் மதிப்பிடும் பணிகள் நடந்தன.

ஆனால், திருப்பதி கோயில் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட நகை வல்லுநர்களால் கூட பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருந்த பல நகைகளை சரியாக மதிப்பிட முடியாததால் அந்த பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை.

அதே சமயம் அவர்களால் கணக்கிட்டு மதிப்பிடப்பட்ட நகைகளின் தரம் மற்றும் மதிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

பொக்கிஷ அறையில் மொத்தம் 747 வகையான நகைகள் வகைக்கபடுத்தப்பட்டது. அதில் 149 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 258 கிலோ வெள்ளி ஆபரணங்கள், மேலும் வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் ஆன பல விலைமதிப்பற்ற ஆபரணங்கள் இருந்ததாக கூறப்பட்டது.

பொக்கிஷ அறையில் வைரங்கள், முத்துகள், தங்கம் மற்றும் பல விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட எண்ணற்ற நகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது, அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கலாம்.

பொக்கிஷ அறையை பாதுகாக்கும் பாம்புகள்?

`ஸ்ரீ மந்திர் சட்டம், (Sri Mandir Act) 1960’ மூலம், மாநில அரசு ஜெகந்நாதர் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது, இது முன்பு பூரியின் கஜபதி மகாராஜாவின் பொறுப்பில் இருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொக்கிஷ அறையைத் திறந்து அதில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நகைகளை கணக்கெடுக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறையை முழுமையாக திறக்க எந்த அரசும் முயற்சி எடுக்கவில்லை. அது ஏன் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.

பொக்கிஷ அறைத் தொடர்பான பல புராணக் கதைகளும் மூடநம்பிக்கைகளும் நிலவியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அறைக்குள் நகைகளை பாதுகாக்க விஷப்பாம்புகள் இருப்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.

1978 ஆம் ஆண்டு கடைசியாக பொக்கிஷ அறையைத் திறந்து சில மாதங்களுக்குப் பிறகு அப்போதைய ஜனதா கட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பல தலைவர்கள் பொக்கிஷ அறைத் திறக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என்று இணைத்து பேசத் தொடங்கினர். இதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே, பொக்கிஷ அறையைத் திறக்க தயக்கம் காட்டியே வந்துள்ளனர்.இதற்கு முன்பு இந்த அறை 1978ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நகைகள் மதிப்பிடப்பட்டது.

1978 க்குப் பிறகு, இந்த பொக்கிஷ அறை டிசம்பர் 1982 மற்றும் ஜூலை 1985 ஆண்டுகளில் பல முறை திறக்கப்பட்டிருந்தாலும் அப்போது ஆபரணங்களை மதிப்பபிடப்படவில்லை.

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2018 ஆம் ஆண்டில், பொக்கிஷ அறையின் கையிருப்புகளைக் கணக்கிட மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழுவினர் பொக்கிஷ அறையின் உள்ளே சென்று, உள் அறையை திறக்க முயற்சித்த போது, பூட்டை திறக்க முடியாமல் திணறினர். எனவே டார்ச் லைட் உதவியுடன் வெளி அறையை மட்டும் பார்த்துவிட்டு, கமிட்டி திரும்பி வந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 14) திட்டமிட்ட மதியம் சரியாக 1:28 மணிக்கு, 11 பேர் கொண்ட குழுவினர், தேவையான அனைத்து உபகரணங்களுடன் பொக்கிஷ அறைக்குள் சென்றனர்.பொக்கிஷ அறைக்குள் சென்ற குழுவை ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் தலைமைத் தாங்கினார். மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சேவதர்களின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.திட்டமிடப்பட்ட சில பணிகள் முடிந்து, மாலை 5 மணியளவில் குழுவினர் கிளம்பிய பிறகு, ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலின் தலைமை நிர்வாகி டாக்டர் அரவிந்த் பதி செய்தியாளர்களை சந்தித்தார்.

``இன்று பொக்கிஷ அறையின் வெளி அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மட்டும் கோவிலுக்குள் உள்ள தற்காலிக வன்காப்பறைக்கு மாற்றப்பட்டன. வன்காப்பறை என்பது அதிபாதுகாப்பு கொண்ட அறை ஆகும். பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு அதன் சாவி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.” என்றார்.

இதுகுறித்து ஏன் என் ஐ செய்தி முகமையிடம் பேசிய ஒடிஷா மாநில சட்டத்துறை அமைச்சர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன், பாஹர் ரத்ன பந்தாரை திறக்கும் முதல் கட்டம் முடிக்கப்பட்டு நகைகள் கருவூலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் பிறகு பிதார் ரத்னா பந்தார் விரைவில் திறக்கப்படும். பொக்கிஷ அறை திறப்பு மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொக்கிஷ அறையின் வெளிப்பகுதி முடிந்துவிட்டது. நகைகள் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. பிதார் என்று அழைக்கப்படக்கூடிய உள் பகுதி விரைவில் திறக்கப்பட்டும். என தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)