உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: ஊடகங்கள், வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த ஐடி செயலிழப்புக்கு க்ரவுட்ஸ்ட்ரைக் மற்றும் மைக்ரோசாஃப்ட்-ஐ நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் ஆப் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி இயந்திரங்கள் செயல்படாத நிலையில், ஊழியர்களே பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டை கணினிகளால் அச்சிட முடியாத நிலை உள்ளதால், காலியான பயணச்சீட்டை(போர்டிங் பாஸ்) விமான நிறுவனங்கள் வழங்குவதாக டெல்லி விமான நிலையத்திலிருந்து பிபிசி செய்தியாளர் சமீரா ஹூசைன் தெரிவித்தார்.

“அச்சிடப்படாத காலி போர்டிங் பாஸ் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் பயணிகள் தங்களது விவரங்களை எழுதிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.” என்கிறார் பிபிசி செய்தியாளர்.

விமானங்களின் புறப்பாடு குறித்த விவரங்கள் ஒரு வெள்ளை பலகையில் எழுதப்பட்டிருந்ததாக சமீரா ஹூசைன் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்டவை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் பிரச்னையால் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்த நிறுவனங்கள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங், செக் இன் போன்ற சேவைகளை தற்காலிகமாக வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளன.

அனைத்து விமான நிலையங்களிலும் பணியாளர்களை கொண்டு நேரடியாக சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையம் சார்பாக பதிவிடப்பட்ட பதிவில், உலகளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப செயலிழப்பு, டெல்லி விமான நிலையத்தில் சில சேவைகளை தற்காலிகமாக பாதித்துள்ளது. புறப்பாடு, வருகை தொடர்பான தகவல்களை அந்தந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்களிடம் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் தனது பதிவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்கள் மட்டும் சேவைகளுக்காக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஈலோன் மஸ்க் என்ன சொன்னார்?

இந்தத் தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க், “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று கூறியிருக்கிறார்.

மேலும், அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைக் கேலி செய்து சில மீம்களையும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கட்தில் பகிர்ந்திருக்கிறார்.

சம்பளம் கிடைப்பது தாமதமாகுமா?

உலகளாவிய இந்தத் தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால், உலகெங்கிலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் தாமதம் ஏற்படக் கூடும் என்று சர்வதேச ஊதிய வழங்குநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு கூறுகிறது.

‘குளோபல் பேரோல் அசோசியேஷனின்’ அமைப்பின் தலைமை நிர்வாகி மெலனி பிஸ்ஸி கூறுகையில், இந்தச் செயலிழப்பு இங்கிலாந்து முழுவதும் உள்ள வணிகங்களுக்கு, குறிப்பாக வாரந்தோறும் ஊதியதம் வழங்குபவர்களுக்கு ‘கடுமையான தாக்கங்களை’ ஏற்படுத்தக்கூடும், என்றார்.

இந்தச் செயலிழப்புல், வாராந்திர அல்லது மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

"மிகக் குறைந்த பாதிப்பு என்னவெனில், ஊதியத்தை நிர்வகிப்பவர்கள் இந்தச் சிக்கலைச் சரிசெய்ய அதிக நேரம் வேலை செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

ஐடி செயலிழப்பு: உலகில் என்ன நடக்கிறது?

  • விமான நிறுவனங்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன - இங்கிலாந்தில் உள்ள ஸ்கை நியூஸ் சேனல் ஒளிபரப்பப்படவில்லை. இன்று காலை நேரலையாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் கூறியுள்ளார்.
  • உலகெங்கிலும் உள்ள பல விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவில், யுனைடெட் மற்றும் டெல்டா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.
  • ஆஸ்திரேலியாவில், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆஸ்திரேலியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இதை "பெரிய அளவிலான தொழில்நுட்ப செயலிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இங்கிலாந்தில் உள்ள ரயில்வே நிறுவனங்கள் தங்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
  • செயலிழப்பின் "நீடித்த தாக்கத்தை" தொடர்ந்து சமாளித்து வருவதாக மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.
  • லண்டன் பங்குச் சந்தையின் இணையதளமும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

உலக விமான சேவைகளில் என்ன பாதிப்பு?

லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில், பயணிகளை சோதித்து அனுப்பும் சில நடைமுறைகள் கணினியில் அல்லாமல் ஊழியர்களால் செய்து முடிக்கப்படுகின்றன.

எனினும் "விமானங்கள் இன்னும் வழக்கம் போல் இயங்குகின்றன, எங்கள் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை," என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையமும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

"இந்த செயலிழப்பு ஷிபோலில் இருந்து புறப்படும் விமானங்களை பாதித்துள்ளது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் சிட்னி விமான நிலையத்தில் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக குழப்பம் நீடிக்கிறது என்று விமான நிலையத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சைமன்வ் அட்கின்சன் தெரிவிக்கிறார்.

முதலில், புறப்பாடு குறித்த தகவல் திரைகள் செயலிழந்தன. ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் தனது பயணிகளை செக்-இன் செய்ய இயலவில்லை என்று அறிவித்தது. ஒலி பெருக்கியின் மீது பயணிகளுக்கு மன்னிப்பு தெரிவிக்கையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை குற்றம் சாட்டியது.

சுமார் அரை மணி நேரம் கழித்து, விர்ஜின் ஆஸ்திரேலியா விமான சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன எனக் கூறியது.

ஆனால் நிலைமைகள் மீண்டும் சீராவதாக தெரிகிறது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமானங்கள் பயணிகளை ஏற்றத் தொடங்கின என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட யுனைடெட், டெல்டா மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை தங்கள் விமானங்கள் "உலக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய விமான நிறுவனமான ரைன்ஏர், தனது விமான சேவைக்கான நெட்வொர்க் முழுவதும் சாத்தியமான இடையூறுகளை சந்தித்து வருவதாகக் கூறுகிறது. தொழில்நுட்ப சேவை செயலிழப்பு காரணமாக இது நேர்ந்திருப்பதாகக் கூறுகிறது.

இன்று பயணம் செய்பவர்கள் தங்கள் விமானம் குறித்த சமீபத்திய தகவல்களை ரைன்ஏர் செயலியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் அறிவுறுத்துகிறது.

எடின்பர்க் விமான நிலையத்தில், கணினி பிழை காரணமாக புறப்பாடு திரைகள் செயலிழந்ததால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

பிரதான முனைய கட்டடத்தில் உள்ள புறப்பாடு பலகைகள் செயலிழந்தன. இதில் நுழைவுவாயில் எண்கள் மற்றும் புறப்படும் நேரம் பற்றிய காலாவதியான தகவல்களைக் காட்டியது. இதனால் சில பயணிகள் தங்கள் விமானங்களை தவறவிட்டனர்.

இன்று காலை பிரதான முனைய கட்டடத்தில் தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. இதுவும் அதே கணினி பிழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எடின்பர்க் விமான நிலையம் இந்த பிரச்னையை தீர்க்க வேலை செய்து வருவதாக கூறியது.

(இந்த பக்கம் தொடந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)