அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம்

இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 57 பேர் காயமடைந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு, தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.

போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச் சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றன.

மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

முதல் பரிசாக கார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளைப் பிடித்து, முதல் இடத்தைப் பிடித்த மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில், 17 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல, சிறந்த மாடுகளுக்கான பரிசுகளில் முதல் இடத்தைப் பிடித்த விருமாண்டி சகோதரர்கள் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல் பரிசாக கார் வென்ற வலையங்குளம் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறு வயதிலிருந்தே மாடு பிடித்து வருகிறேன். டிகிரி முடித்துள்ளேன், எனக்கு அரசு வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும். இதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன். போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. நான் மட்டுமல்ல 2வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்களும் இதற்காகக் கடுமையாக உழைத்துள்ளனர்" என்று கூறினார்.

இரண்டாம் பரிசு பெற்ற அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "5 வருடங்களாக ஜல்லிக்கட்டில் மாடு பிடித்து வருகிறேன். போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது" எனக் கூறினார்.

பதினோராவது சுற்று நிலவரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11ஆம் சுற்று முடிவில், களம் கண்ட 870 மாடுகளில் 219 மாடுகள் பிடிபட்டன.

இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மொத்த வீரர்கள் - 36

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

பாலமுருகன், வலையங்குளம் - 18

கார்த்தி, அவனியாபுரம் - 16

கார்த்திக், திருப்பரங்குன்றம் - 10

11ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

அமரன், சிவகங்கை - 4

ஒன்பதாம் சுற்று நிலவரம்

ஒன்பதாம் சுற்றின் முடிவில், களம் கண்ட 764 மாடுகளில் 190 மாடுகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

பாலமுருகன், வலையங்குளம் - 18

கார்த்தி, அவனியாபுரம் - 16

ரஞ்சித், அவனியாபுரம் - 9

9ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

பாலமுருகன், வலையங்குளம் - 18

ராபின், செக்கானூரணி - 3

ராஜு, செக்கானூரணி - 2

ஆறாம் மற்றும் ஏழாம் சுற்று நிலவரம்

ஆறாம் சுற்றின் முடிவில், மாடுபிடி வீரர்கள் 23 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் என மொத்தம் 44 பேர் காயமடைந்தனர்.

அதன் பிறகு நடைபெற்ற ஏழாம் சுற்றில், களம் கண்ட 616 மாடுகளில், 149 மாடுகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

கார்த்தி, அவனியாபுரம் - 16

ரஞ்சித், அவனியாபுரம் - 9

பிரகாஷ், சோழவந்தான் - 7

விஜய், ஜெய்ஹிந்தபுரம் - 7

ஏழாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

ரஞ்சித்குமார், அவனியாபுரம் - 3

முத்துவன்னி, மதுரை - 3

நாகராஜ், மதுரை - 3

கோபி கிருஷ்ணன், திண்டுக்கல் - 3

மாயக்கண்ணன், சிவகங்கை - 2

ஹரிஹரன், மதுரை - 2

கண்ணன், மதுரை - 2

வேல்முருகன், திருப்பரங்குன்றம் - 2

ஐந்தாம் சுற்று நிலவரம்

ஐந்தாம் சுற்று முடிவில், களம் சென்ற 464 மாடுகளில், 109 மாடுகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

கார்த்தி, அவனியாபுரம் - 16

ரஞ்சித், அவனியாபுரம் - 9

பிரகாஷ், சோழவந்தான் - 6

5ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

விஜயகுமார், அய்யனார்குளம் - 5

அரவிந்த், குன்னத்தூர் - 4

பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4

அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2

நான்காம் சுற்று நிலவரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்றின் முடிவில் மொத்தம் 376 மாடுகள் களம் சென்றன. அவற்றில் 89 மாடுகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

கார்த்தி, அவனியாபுரம் - 16

ரஞ்சித், அவனியாபுரம் - 9

பிரகாஷ், சோழவந்தான் - 6

4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

ரஞ்சித், அவனியாபுரம் - 9

டேவிட் வில்சன், புகையிலைப்பட்டி - 4

பரணி, அய்யம்பாளையம் - 2

ராகுல், அவனியாபுரம் - 2

மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

மூன்றாம் சுற்று நிலவரம்

10 மணி வரையிலான தரவுகளின்படி, பரிசோதனைக்கு சென்ற 356 காளைகளில், 332 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 24 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

மூன்றாவது சுற்று முடிவில் களம் சென்ற மொத்த மாடுகளின் எண்ணிக்கை 288. அதில் 61 மாடுகள் பிடிபட்டன.

வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை:

அதிக காளைகளைப் பிடித்து முன்னணியில் இருந்த வீரர்களின் பட்டியல்

  • கார்த்தி, அவனியாபுரம் - 16
  • பிரகாஷ், சோழவந்தான் - 6
  • விக்னேஷ், சாப்டூர் - 3
  • முத்துப்பாண்டி, பேரையூர் - 3
  • ரிஷி, அவனியாபுரம் - 2
  • முரளி, மாடக்குளம் - 2

முதல் சுற்று

காலை 8 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 137 காளைகளில் 126 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

முதல் சுற்று முடிவில் 11 மாடுகள் பிடிபட்டன. இந்த சுற்றில் 11 வீரர்கள் தலா ஒரு மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அங்கு மொத்தம் 15 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

காயத்திற்கு உள்ளாகும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு